ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட மூத்த விமானியை கோ ஏர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
இந்திய விமானப்படையில் (ஐ.ஏ.எஃப்) வி.வி.ஐ.பி படை விமானியாக 25 ஆண்டுகள் பணியாற்றிய பைலட், யுனிஷ் மாலிக் (Unish Malik - Milk Malik), 2010-ம் ஆண்டு குரூப் கேப்டன் (Group Captain) பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பாதிப்பிற்கு பிறகு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை கிரேட் நிக்கோபருக்கு அழைத்து சென்றவரும் மாலிக் தான்.
தற்போது கோ ஏர் ஏர்லைன் விமானியாக பணியாற்றி வரும் மாலிக், கடந்த வியாழன், தன் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் குறித்து பெயர் குறிப்பிடாமல் அவதூறு கருத்துக்களை பதிவிட்டார். "பிரதமர் ஒரு முட்டாள். நீங்கள் என்னையும் முட்டாள் என்று அழைக்கலாம். பரவாயில்லை, இது எனக்கு ஒரு பொருட்டல்ல. காரணம், நான் பிரதமர் அல்ல. ஆனால் பிரதமர் ஒரு முட்டாள்" என்று மாலிக் ட்வீட் செய்ததாக கூறப்படுகிறது. இந்த ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகப்பட்டு விவாத பொருளாக மாறியது.
அதையடுத்து, விமானி மாலிக், "பிரதமரைப் பற்றிய எனது ட்வீட்டுகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இது சம்பந்தப்பட்ட யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தக்கூடிய வகையில் இருந்தால் என்னை மன்னியுங்கள். எனது ட்விட்டர் கருத்துகள் அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துக்களே தவிர, நேரடியாகவோ மறைமுகமாகவோ கோ ஏர் ஏர்லைன் நிறுவனத்திற்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரினார். அதோடு, பிரதமர் குறித்த அவதூறு கருத்துக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் மாலிக்.
இருப்பினும், இதுபோன்ற விஷயங்கள் முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாதவை என்று தங்கள் நிறுவனத்தின் கொள்கையை மேற்கோள் காட்டிய கோ ஏர் ஏர்லைன் நிறுவனம், மூன்று நாட்களுக்குப் பிறகு மாலிக்'கை பணிநீக்கம் செய்துள்ளது.
"கோ ஏர் ஏர்லைன் நிறுவனம் ஸீரோ டாலரன்ஸ் கொள்கையை கொண்டது. கோ ஏர் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சமூக ஊடக நடத்தை உள்ளிட்ட கொள்கைகளுக்கு இணங்க வேண்டியது கட்டாயம்" என்று கோ ஏர் ஏர்லைன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், "எந்தவொரு தனிநபரோ அல்லது விமான பணியாளர்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கும் விமான நிறுவனதுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கோ ஏர் ஏர்லைன் நிறுவனத்தின் பிரதிநிதி கூறியுள்ளார்.
source https://www.vikatan.com/news/general-news/goair-sacks-pilot-over-tweet-against-pm-narendra-modi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக