Ad

சனி, 9 ஜனவரி, 2021

தேனி: மேகமலையில் வலம்வரும் ஒற்றைக் காட்டுயானை - மக்கள் அச்சம்!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. வன உயிரினச் சரணாலயமான மேகமலையில், யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. யானைகள் அடிக்கடி மேகமலையில் தென்படுவது வழக்கம். அதனைச் சுற்றுலாப் பயணிகளும் ரசிப்பர். யானைகளும் மனிதர்களை அச்சுறுத்தாது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே, வழக்கமாக மேகமலையில் உலாவும் யானைக் கூட்டங்களைத் தவிர்த்து, ஒற்றை ஆண் காட்டுயானை ஒன்று மக்கள் குடியிருப்புக்குள் உலா வருகிறது.

மணலாறு குடியிருப்புப் பகுதி

தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மேகமலையில், தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பைக் குறிவைக்கும் காட்டு யானை, அடிக்கடி அங்கே வந்து உணவு தேடுவதும், வீடுகளை சேதப்படுத்துவதுமாக இருந்தது. குறிப்பாக, மேகமலையில் உள்ள மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு ஆகிய பகுதியில் ஒற்றையானை உலா வருகிறது.

Also Read: மேகமலை: 5 யானைகளைப் பலிகொண்ட மின்கம்பி விவகாரம்! -கிடப்பில் போட என்ன காரணம்?

இந்நிலையில், கடந்த டிசம்பர் 15-ம் தேதி மணலாறு பகுதியில் 58 வயதான அம்மாவாசை என்பவரை யானை மிதித்துக் கொன்றது. அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 23-ம் தேதி இரவு, அப்பர் மணலாறு பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முத்தையா, சத்தம்கேட்டு வெளியே வர, வீட்டு வாசலில், முத்தையாவை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்களால், மேகமலைவாசிகள் அச்சமடைந்துள்ள நிலையில், சில நாள்களுக்கு முன்னர், இரவங்கலாறு பகுதியில் மூன்று வீடுகளை யானை சேதப்படுத்தியது.

இருசக்கர வாகங்களை சேதப்படுத்திய யானைகள்

Also Read: தேனி:`வனத்துறை செய்வது கொஞ்சம்கூட சரியில்லை!' -கொதிக்கும் மேகமலை விவசாயிகள்

இது தொடர்பாக, மேகமலை வன உயிரினச் சரணாலய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது,``யானைக் கூட்டங்கள் மேகமலையில் உள்ளன. ஒற்றை யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இனி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

`தற்போது ஹைவேவிஸ் முதல் இரவங்கலாறு வரை சாலைப் பணிகள் நடந்துவருகிறது. அமைதியாக இருந்த பகுதியில் சாலை வேலைகள் நடப்பதால், வன விலங்குகள் அச்சமடைந்திருக்கலாம். அதனால் குடியிருப்பு பகுதிக்குள் வந்திருக்கலாம்’ என்கின்றனர் வன விலங்கு ஆர்வலர்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/wild-elephant-triggers-fear-in-meghamalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக