Ad

சனி, 2 ஜனவரி, 2021

கோவை: `அவங்களை வெளிய அனுப்புங்க’ - அ.தி.மு.க பெண் நிர்வாகியிடம் கொதித்த ஸ்டாலின்.. என்ன நடந்தது?

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதியில் தி.மு.க சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரை அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும், அமைச்சர் வேலுமணியின் உள்ளாட்சித்துறையில் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்தும், பேசினார்.

ஸ்டாலின்

Also Read: `அ.தி.மு.க இரண்டாக உடையப்போகிறது; ஓ.பி.எஸ் கழன்று போகலாம்!’ - ஸ்டாலின்

இதையடுத்து, மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடம் அவர்களது குறைகளை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தி.மு.க தொப்பியுடன் அமர்ந்திருந்த ஒரு பெண் திடீரென்று எழுந்து, ஸ்டாலினிடம் கேள்வி கேட்க முயன்றார்.

அப்போது ஸ்டாலின், 'நீங்கள் யார்.. எந்த ஊர்.?' என கேட்க, அந்தப் பெண், 'இதுவே தெரியாமல், எதற்கு வந்தீர்கள்.. எதற்காக கிராமசபை கூட்டம் நடத்துகிறீர்கள்..? கொரோனா காலகட்டத்தில் நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்..?' என்று ஆக்ரோஷமாக பேசினார். இதனால், தி.மு.க தொண்டர்கள் அந்தப் பெண்ணுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

அ.தி.மு.க பெண்

இதையடுத்து மு.க.ஸ்டாலின், 'மேடம்.. உங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது.. அமைச்சர் வேலுமணி அனுப்பின ஆளு நீங்க. போலீஸை கூப்பிடுங்க. அவங்களை வெளிய அனுப்புங்க' என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க-வினர் அந்தப் பெண்ணை போலீஸிடம் ஒப்படைத்தனர். அப்போது, ஆத்திரத்தில் சில தொண்டர்கள் அவரை தாக்கினர். அந்தப் பெண் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த அந்தப் பெண், ‘ஸ்டாலின் ஒழிக; என்று கோஷம் எழுப்பினார். மேலும், அமைச்சர் வேலுமணியிடம் அவர் தொலைப்பேசியில் உரையாடினார்.

அ.தி.மு.க பெண்

அந்தப் பெண் குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்று தெரியவந்துள்ளது. அவர் அ.தி.மு.க-வில் தெற்கு மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

அந்தப் பெண் வெளியேற்றப்பட்டவுடன் மீண்டும் பேசிய மு.க.ஸ்டாலின், ``மிஸ்டர் வேலுமணி அவர்களே.. ஊழல்மணி அவர்களே.. இதோடு உங்கக் கொட்டத்தை அடக்குங்கள். இது தொடர்ந்தால் நீ மட்டுமல்ல.. உங்க முதலமைச்சர் எங்கேயும் பேச முடியாது. இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.. அதுதான் மரியாதை. தைரியம் இருந்தால் அ.தி.மு.க என்று சொல்லி உட்கார வேண்டியது தானே? எதற்காக தி.மு.க-வின் தொப்பியை அணிந்து உட்கார வேண்டும்?” என்று பதிலடி கொடுத்தார்.

அ.தி.மு.க-வினர்

இதனிடையே, தி.மு.க.வினரை கண்டித்து, தொண்டாமுத்தூர் பகுதியில் அ.தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் தி.மு.க-வினரும் அங்குக் குவிந்தனர். பிறகு காவல்துறை எந்த அசாம்பாவிதமும் நடக்காமல் கூட்டத்தை கலைத்தனர்.

'மேடம்.. உங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது': மு.க.ஸ்டாலின் கோவையில் திமுக நடத்திய கிராம சபை கூட்டத்தில்...

Posted by Junior Vikatan on Friday, January 1, 2021


source https://www.vikatan.com/news/controversy/coimbatore-dmk-grama-sabha-meeting-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக