Ad

சனி, 2 ஜனவரி, 2021

காஷ்மீர்: சுட்டுக் கொல்லப்பட்ட நகை வியாபாரி.. `உங்களைத் தேடி வருவோம்' எச்சரிக்கை - நடந்தது என்ன?

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசு. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன. இதையடுத்து காஷ்மீரில், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் நிலம் வாங்கலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து புதிய சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியதற்கு அங்குள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தன. தீவிரவாத அமைப்புகளும் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

சத்பாலின் உடல்

இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை (டிச. 31, 2020) அன்று காஷ்மீரில் நகைக்கடை அதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. காஷ்மீரின் ஶ்ரீநகரில் அமைந்துள்ள பரபரப்பான மார்க்கெட் பகுதி சாராய் பாலா. இந்த மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சிலர், அந்த பகுதியில் உள்ள நகைக்கடைக்குச் சென்றுள்ளனர். அங்கு அந்த நகைக்கடையின் அதிபரை சரமாரியாகச் சுட்டுக் கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்ததும் சம்பவம் இடத்துக்குக் காஷ்மீர் போலீஸார் விரைந்துள்ளனர். அவர்கள் வருவதற்குள்ளாகவே அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து ஶ்ரீநகர் காவல்துறையினர், ``இந்தப் பரபரப்பான கடைவீதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையான நிசால் ஜூவல்லர்ஸின் உரிமையாளர் சத்பால் நிசால் (62) என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்று தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை

Also Read: ரூ.86,188 கோடி ; மல்லையா, நீரவ் மோடியை விட 10 மடங்கு அதிகக் கடன் - நெருக்கடியில் அம்பானி?

இதைத் தொடர்ந்து நேற்று முழுவதும் நடத்தப்பட்ட விசாரணையில், சத்பால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் 50 ஆண்டுகளாகக் காஷ்மீரில் வசித்து வருகிறார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில்தான் சத்பால் காஷ்மீரின் குடியேற்றச் சான்றிதழ் பெற்றிருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில், The Resistance Front என்கிற அமைப்பு இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ``குடியேற்றச் சான்றிதழ் பெற்றுள்ள வெளிமாநிலத்தவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் எஜென்ட்டுகள். நாங்கள் அவர்களை எச்சரிக்கிறோம். எங்களுக்கு, உங்கள் பெயர்கள் தெரியும், எங்கு வசிக்கிறீர்கள் என்பது தெரியும், என்ன தொழில் செய்கிறீர்கள் என்பதும் தெரியும். உங்களைத் தேடி நாங்கள் வருவோம்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

TRF

Also Read: 1846 முதல் 2019 வரை! - காஷ்மீர் பிரச்னையில் நடந்தது என்ன? #VikatanInfographics

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், இதுவரை 10 லட்சம் பேர் குடியேற்றச் சான்றிதழ் பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் உள்ளூர் வாசிகள்தாம். ஆனால், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் குடியேற்றச் சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்து தரவுகள் எதுவும் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை.

உள்ளூர் பயங்கரவாத அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, காஷ்மீரில் வாழும் பிற மாநிலத்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


source https://www.vikatan.com/government-and-politics/crime/jeweller-shot-dead-by-terrorist-in-kashmir

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக