Ad

செவ்வாய், 26 ஜனவரி, 2021

`தமிழன், தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு’... என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ராகுல் காந்தியின் பேச்சு?

பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்வையிட இந்த ஆண்டு மதுரைக்கு வந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்த ராகுல் காந்தி, ``ஜல்லிக்கட்டு என்பது காளைகளுக்குத் துன்புறுத்தல் தரக்கூடியது என்று சொல்லப்பட்டது. ஆனால், ஜல்லிக்கட்டை நேரில் பார்த்தபோது, அதில் எந்தத் துன்புறுத்தலும் இல்லை என்பதை உணர்ந்தேன். கலாசாரங்கள் நசுக்கப்படுகின்றன. தமிழ் மொழியை நசுக்குவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. தமிழ் மக்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.

தேநீர்க் கடையில் ராகுல் காந்தி

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வை ராகுல் காந்தி கண்டு ரசித்த அந்த மேடையில் தி.மு.க-வின் இளைஞரணித் தலைவர் உதயநிதியும் இருந்தார். இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்ட காட்சியையும் காண முடிந்தது. ஆனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல் பரபரப்புத் தொடங்கிய நிலையில், புதுச்சேரியில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் உரசல் ஏற்பட்டிருக்கும் சூழலில், ராகுல் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். ராகுல் காந்தியின் இந்தப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ``ராகுல் காந்தியின் தமிழகப் பயணம் என்பது அரசியல் பயணம் அல்ல. தமிழ் கலாசாரத்தை அறிவதற்காகவே ராகுல் காந்தி தமிழகம் வந்தார்” என்று குறிப்பிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு பேசிய ராகுல் காந்தி, ``தமிழக மக்களுடன் என் குடும்பத்துக்கு மிக நீண்ட உறவு தொடர்வதால், இங்கு பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது அரசியல் உறவு அல்ல, குடும்ப உறவு. தமிழர்கள் அடிபணியாதவர்கள். பிரதமர் மோடி மற்றும் அவர் சார்ந்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் என அனைவரும் தமிழ் மொழி, பாரம்பர்யம், வரலாற்றுக்கு உரிய மரியாதை தருவதற்குத் தவறிவிட்டனர். தமிழக மக்கள் விரும்பாததை அதிகாரத்தால் திணிக்க முயல்கின்றனர். தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் யாருக்கும் அடிபணியாமல் வாழ்ந்தவர்கள்” என்று குறிப்பிட்டார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் பேசியபோது, ``என்னைப் பொருத்தவரை, தமிழகத்தில் நான் பிறக்கவில்லையே தவிர, நானும் தமிழன்தான்” என்றார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது, ``தமிழ்க் கலாசாரத்தை மோடி அவமதிப்பதை அனுமதிக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் தமிழக வருகை குறித்தும், தமிழ் மொழி, தமிழர்களின் அடையாளம், தமிழ் கலாசாரம் குறித்த அவரது பேச்சுகள் மற்றும் அதன் தாக்கம் குறித்தும் காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூரிடம் பேசினோம்.

மாணிக்கம் தாகூர்

``ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் அவருடன் இருப்பவன் நான். தமிழ்நாட்டின் மீது ராகுல் காந்திக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான எங்கள் கூட்டணி பெற்ற வெற்றிக்குப் பிறகு தமிழ்நாட்டின் மீதான அவரது கவனம் அதிகரித்திருக்கிறது. ஜல்லிக்கட்டு நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றார். பொங்கலுக்கு வாருங்கள் என்றுதான் முதலில் அவரை அழைத்திருந்தோம். கடைசி இரண்டு நாள்களுக்கு முன்பாகத்தான், நிகழ்ச்சி நிரலில் ஜல்லிக்கட்டு சேர்க்கப்பட்டது. ஜல்லிக்கட்டு பற்றி டெல்லியில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.

காளைகளைத் துன்புறுத்துவார்கள், காளைகளின் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவுவார்கள், மதுவைக் குடிக்க வைப்பார்கள் என்றெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டுள்ளன. ராகுல் காந்தி நேரில் வந்து பார்த்தபோது, அப்படி எதுவும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டார். `இங்கு காளைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. மனிதர்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை’ என்று சொன்னார்.

தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ் கலாசாரம், தமிழர்களின் வரலாறு ஆகியவை குறித்து உண்மையிலேயே அவருக்கு ஆர்வமும் அக்கறையும் இருக்கிறது. எனவேதான், இவற்றுக்கு எதிராகச் செயல்படும் பிரதமர் மோடியையும், பா.ஜ.க-வையும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் கடுமையாக ராகுல் காந்தி விமர்சிக்கிறார். தமிழ்நாட்டில் வந்து இந்தியில் மட்டும்தான் மோடி பேசுகிறார். இது தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் எதிரான செயல். இந்தியையும் இந்துத்துவாவையும் தமிழர்களின் மீது திணிப்பதற்கு முயல்கிறார்கள். அதை ராகுல் காந்தி கண்டிக்கிறார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு, தமிழக மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சிறு, குறு தொழில்கள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் மிக மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு நடவடிக்கைக்குப் பிறகு, மேலும் மோசமாக தொழில்துறை பாதிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து இந்தச் சுற்றுப்பயணத்தில் மோடி பேசினார். மத்திய பா.ஜ.க அரசின் இந்தித் திணிப்பு, இந்துத்வா அரசியல் மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளை இந்தச் சுற்றுப்பயணத்தின்போது, ராகுல் காந்தி பேசினார். இந்தப் பேச்சை தமிழக மக்கள் வரவேற்கிறார்கள்.

ராகுல் காந்தி

மோடி அரசின் செயல்பாடுகள் மற்றும் பா.ஜ.க-வின் அரசியல் ஆகியவற்றுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் குரலாகத்தான் ராகுல் காந்தி இன்றைக்குப் பேசியிருக்கிறார். எனவே, தமிழக இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறது. சமூக ஊடகங்களில் அதைப் பார்க்க முடிகிறது. மோடி எதிர்ப்பின் அடையாளமாக ராகுல் காந்தி இருக்கிறார்” என்றார் மாணிக்கம் தாகூர்.

தமிழக சுற்றுப்பயணத்தில் பெரும்பாலும் மோடியையும் பா.ஜ.க-வையும் மட்டுமே ராகுல் காந்தி விமர்சிக்கிறார். அ.தி.மு.க-வைப் பற்றியோ, எடப்பாடி பழனிசாமி அரசையோ அவர் விமர்சிக்கவில்லை. இது ஏன் என்ற கேள்வியை மாணிக்கம் தாகூரிடம் வைத்தபோது, ``ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை ஆட்டிப்படைப்பது பா.ஜ.க-தான். எடப்பாடி பழனிசாமியை ஒரு பொருட்டாகவே தமிழக மக்கள் நினைக்கவில்லை. எனவேதான், மோடியையும் பா.ஜ.க-வையும் அவர் விமர்சிக்கிறார். அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளையும் அவர் விமர்சிக்காமல் இல்லை.

மோடி

சில இடங்களில் அவர்களையும் விமர்சிக்கவே செய்கிறார். தமிழக இளைஞர்களும் தாய்மார்களும் ராகுல் காந்தியை விரும்புகிறார்கள். அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இளைஞர்களுடன் கைகுலுக்கிவிட்டு வந்தபோது, அவரது கை சிவப்பு சிவப்பாக தடித்து இருந்ததைப் பார்த்துவிட்டு, `என்ன ஆச்சு?’ என்று பதற்றத்துடன் அவரிடம் கேட்டேன். `ஒன்றுமில்லை. இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். அந்த அளவுக்கு நம் மீது அன்பு வைத்திருக்கிறார்கள்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்” என்றார் மாணிக்கம் தாகூர்

ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப்பயணம் மற்றும் தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு பற்றிய அவரது பேச்சுகள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் ஜென்ராமிடம் கேட்டோம்.

``ராகுல் காந்தி குறிப்பிடுகிற இந்த அடையாளங்கள் இல்லாமலேயே அதே செல்வாக்கு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும். தமிழ் அடையாளங்களை பா.ஜ.க அழிக்கிறது என்று ராகுல் பேசுகிறார். அதற்கு எதிரான நிலைப்பாடாக இந்த அடையாளங்களையெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு, தமிழ்நாட்டு தொழிலாளர்களுடன் நெருக்கமான உறவு என்பது போன்ற நிலையை அவர் வைக்கிறார். `தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்றாலும் நான் தமிழன்தான்’ என்று சொல்கிறார். `தமிழ்நாட்டின் பிரதிநிதியாக டெல்லியில் போர்வீரனாகச் செயல்படுவேன்’ என்கிறார்.

ஜென்ராம்

மேற்கு வங்கத்துக்குப் பிரசாரத்துக்குப் போனால், வங்கத்தின் போர்வீரனாக டெல்லியில் செயல்படுவேன் என்று ஒருவேளை அவர் சொல்லலாம். அதேபோல, அஸ்ஸாமுக்குப் போனால், வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதியாக டெல்லியில் செயல்படுவேன் என்றும் சொல்லலாம். தமிழ்நாட்டுக்கு வந்து பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக `வணக்கம்’ என்று தமிழில் சொல்லி ஆரம்பிப்பது வட நாட்டுத் தலைவர்களின் வழக்கம். இப்போது அது கொஞ்சம் விரிவடைந்திருக்கிறது. பிரதமர் திருக்குறள் சொல்கிறார். ராகுல் காந்தி இன்னும் ஒரு படி மேலே போய், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களைக் கடைப்பிடிக்கிறேன் என்று சொல்லப் பார்க்கிறார்.

Also Read: தனிப்பெரும் தலைவர்... கட்சியிலும், ஆட்சியிலும் நிலைநிறுத்திக் கொண்டாரா எடப்பாடி பழனிசாமி?

ராகுல் காந்தி மோடியையே விமர்சிக்கிறார். ஸ்டாலினோ, எடப்பாடியை மட்டுமே விமர்சிக்கிறார். ஸ்டாலின் முழு கவனத்தையும் அ.தி.மு.க மீது வைக்கிறார். ராகுல் காந்தி, முழு கவனத்தையும் மோடி மீது வைத்திருக்கிறார். இருவரும் சேரும்போது அணியை நியாயப்படுத்தியதாக ஒரு தோற்றம் வருகிறது. அது இயல்பாக எல்லோராலும் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால், அது எல்லாமே சாளரங்களைத் திறந்துவைத்திருக்கக்கூடிய ஏற்பாடோ என்ற சந்தேகமும் கூடவே வருகிறது. அதாவது, இரண்டு நாள் மூன்று நாள்களாக ராகுல் காந்தி இங்கு இருக்கிறார். மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு செயல்படுகிறது என்பதைப்போல பேசுகிறாரே தவிர, மாநில அரசின் செயல்பாடுகளைப் பற்றி அவர் பேசுவதில்லை. அதற்கு ஓர் அர்த்தம் இருக்கிறது என்பது மாதிரி சிலர் நினைக்கிறார்கள்.

மோடி எதிர்ப்பு பேச்சை இங்கு ஏற்கெனவே மற்ற கட்சிகள் உருவாக்கிவைத்துள்ளன. அதை ராகுல் காந்தி பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார். அந்தச் சூழலில், இருக்கிற ஏற்பாடு ஒன்றில் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்பதையும் சேர்த்து புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ஏதேனும் நெருடல் இருக்கிறதா என்பதும் ஒரு கேள்வி. அதன் அடிப்படையில் தி.மு.க-வுக்கு போகக்கூடிய செல்வாக்கின் ஒரு பகுதியை தானும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில், `தனித்துத் தேர்தல் பிரசாரம் செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்’ என்று தி.மு.க-வின் பொதுச்செயலாளரான துரைமுருகன் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது? `இதைக் காலதாமதாக செய்கிறார்கள். முன்கூட்டியே செய்யவில்லை’ என்றும் துரைமுருகன் சொல்கிறார். காங்கிரஸ் கட்சியை கட்டியமைக்க ராகுல் காந்தி எடுக்கும் முயற்சி என்று பாராட்டுவதாக எடுத்துக்கொள்வதா அல்லது அது ஒரு கேலியான கமென்ட் என்று எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை” என்கிறார் ஜென்ராம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rahul-gandhi-speech-on-tamil-culture-will-it-have-impact-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக