தி.மு.க `விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற குரல் பிரசாரப் பயணத்தைத் தமிழகம் முழுக்க நடத்தி வருகிறது. அதற்காக தி.மு.க-வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாள்கள் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் ஒருபகுதியாக நேற்று இரவு கோட்டக்குப்பத்துக்குச் சென்றார்.
அப்போது பேசிய அவர், ``எடப்பாடி ஆட்சியில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. சாலை அமைத்ததில் ரூ.4,600 கோடி, பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்ததில் ரூ.2,000 கோடி ஊழல் செய்திருக்கின்றனர். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கோட்டக்குப்பம் பகுதியில் தீயணைப்பு நிலையம், துணை மின் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை கட்டித் தரப்படும். அதேபோல சின்ன முதலியார்சாவடி, பெரிய முதலியார்சாவடி, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் தூண்டில் முள்வளைவு அமைத்துத் தரப்படும். கோட்டக்குப்பம் பகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும். பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் வெற்றி உறுதியாகி உள்ளது. தந்திராயன்குப்பம் பகுதியில் கலைஞர் ஆட்சியில்தான் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. மீனவர்களுக்கு எப்போதும் தி.மு.க உறுதுணையாக இருக்கும். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அந்தத் துறை தொடர்பாக எதுவும் பேசமாட்டார். ஆனால், மற்ற அனைத்து விஷயங்களையும் பேசுவார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு எப்படி ஆப்பு வைத்தீர்களோ, அதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் ஆப்பு வைக்க வேண்டும்” என்றார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் புகைப்படத்தைப் பொதுமக்களிடம் காட்டிய உதயநிதி ஸ்டாலின், ``எடப்பாடி எப்படி ஆட்சிக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி காலில் விழுந்து ஆட்சிக்கு வந்த இந்தப் படத்தை பல இடங்களில் காட்டியதற்காக போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் அதற்காக மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு வாபஸ் பெறப்படும் என்று கூறுகின்றனர். என் மீது எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயார். ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டேன். காலைப் பிடித்துதான் நீங்கள் முதல்வரானீர்கள். அதற்கான ஆதாரம் இதோ இருக்கிறது. கடைசியில் அந்த அம்மா காலையும் வாரி விட்டுவிட்டார். அந்தம்மா ஜெயிலுக்கு போனதும் இவர் என்ன சொன்னார் தெரியுமா... `நீயா என்னை முதலமைச்சராக்கியது?’ என்று கேட்டார்” என்றார்.
Also Read: `பகிரங்கமாகச் சொல்கிறேன்; பாலியல் வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்குத் தொடர்பு!' - உதயநிதி
முன்னதாக விழுப்புரத்தில் பல்வேறு பகுதிகளில் பேசிய அவர், ``தமிழகத்தில் இந்த முறை தி.மு.க ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நீங்கள் அதனை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். இன்னும் தேர்தலுக்கு நான்கு மாத காலமே உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வினால் அனிதா உள்ளிட்ட 15 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க பிரமுகர்கள் ஈடுபட்டு, தற்போது கைது செய்யப்பட்ட சம்பவங்களை மக்களிடையே கொண்டுசேர்க்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும். தற்போது நீட் தேர்வை போன்றே, சட்ட மேற்படிப்புக்கும் நுழைவுத்தேர்வு என்ற புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளார்கள்.
Also Read: ''ஒரு குடும்பத்துக்கு தி.மு.க சொந்தம் அல்ல!''- உதயநிதி குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்
மாநில அரசுகளிடம் கூட கருத்து கேட்காமல் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசும் தட்டிக்கூட கேட்கவில்லை. அதேபோல் மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையால் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுத வேண்டும். இது தேவையா? மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் தேடிக்கொள்ளும் அ.தி.மு.க அரசு, இந்தியாவின் தலை சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்கிறது. இன்றைய சூழலில் ஊழலில்தான் முதலிடத்தில் உள்ளது” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/udhayanidhi-stalin-slams-cm-eps-in-villupuram-election-campaign
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக