பாகிஸ்தானில் ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அந்நாட்டு தூதரகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஜாஃபர் ஹிலாலி (Zafar Hilaly) கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், 2019-ல் இந்தியா நடத்திய பால்கோட் தாக்குதலில் பாகிஸ்தான் 300 பேரை இழந்ததாகக் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், ``அந்தத் தாக்குதல் ஒரு போர்செயல். ஆனால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தவறிவிட்டது’’ என்றார். அதேபோல், தாக்குதல் குறித்த பாகிஸ்தானின் பதிலும் பலவீனமாக இருந்ததாக அவர் விமர்சித்திருக்கிறார்.
பாகிஸ்தானின் பல்வீனமான பதிலாலயே அதேபோன்று மீண்டுமொருமுறை தாக்குதல் நடத்துவோம் என இந்தியா கூறியதாக அவர் குறிப்பிட்டார். 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27-ல் பாகிஸ்தான் விமானப் படை நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் கால்பந்து மைதானங்களில்தான் குண்டுவீசினோம் என்று சொன்னது. இதை மறுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்தின் 25வது படைப்பிரிவின் தலைமையகத்தையும், ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தையும் குறிவைத்ததாக குற்றம்சாட்டியது.
ஆனால், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானின் ஐ.எஸ்.பி.ஆர் (ISPR- Inter Services Public Relations) அமைப்பின் நிர்வாக இயக்குநர் அசிஃப் காஃபர், தங்களது விமானப்படை இந்திய ராணுவத் தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்றார்.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், வீரமரணமடைந்தனர். அத்தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு என்பது தெரியவந்தது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானின் பால்கோட்டில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை 2019 பிப்ரவரி மாதம் 26-ம் தேதி, அதிகாலையில் தாக்குதல் நடத்தியது.
அதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்தியா கூறியது. ஆனால், பாகிஸ்தான் அதை மறுத்து வந்தது. தங்கள் மண்ணில் தீவிரவாதம் இல்லை என்று பாகிஸ்தான் கூறிவந்த நிலையில், இந்திய தாக்குதலில், 300 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு முன்னாள் தூதரக அதிகாரி கூறியிருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/international/former-pak-diplomat-admits-300-casualties-in-balakot-airstrike
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக