Ad

சனி, 2 ஜனவரி, 2021

திருப்பூர்: `அதிகாலையில் பரிகார பூஜை; கொள்ளைக்காக மூதாட்டி கொலை!’ - அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே அகலராயபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்கள் அப்பகுதியில் ஃபர்னிச்சர் கடை நடத்தி வந்துள்ளனர். கடந்த டிசம்பர் 30-ம் தேதி காலையில் இவர்களது ஃபர்னிச்சர் கடையின் உள்ளிருந்து ஷட்டரைத் தட்டும் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் ஷட்டரை திறந்துள்ளனர்.

உள்ளே தலையில் பலத்த காயத்தோடு ரத்தம் வழிய ஆறுமுகம் உட்கார்ந்தபடி இருந்துள்ளார். அவரது மனைவி ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்க, விரைந்து வந்த காவல்துறையினர் ஆறுமுகத்தைச் சிகிச்சைக்காகவும், ஈஸ்வரியின் உடலை உடற்கூராய்வுக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

அதன் பின்னர்தான் குழந்தையின்மைக்குப் பரிகாரம் செய்வதாக வந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் என்பவர், 5 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக இக்கொலையை செய்தது தெரிய வந்தது.

இது குறித்து வெள்ளகோவில் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் நம்மிடம், ``திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சின்னம்மநாயக்கனூரைச் சேர்ந்தவர் சக்திவேல். 2009-ம் ஆண்டு இரண்டு பேருடன் சேர்ந்து ஒரு பெண்ணைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டான். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் இக்கொலை சம்பவம் காரணமாக அவனது குடும்பத்தினரே அவனை ஒதுக்கி விட்டனர். குடும்பம் ஒதுக்கி விட்டதால் அங்கிருந்து கிளம்பி காங்கேயம் பகுதிக்கு வந்து லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளான். அடுத்ததாக 2017ம் ஆண்டு ஓர் கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளான்.

காங்கேயம் பகுதிக்கு வந்ததுமே வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளான். ஒன்றேகால் லட்சம் ரூபாய்க்கு ஹோண்டா சிட்டி காரும், புதிய ஆட்டோ ஒன்றையும் கடனில் வாங்கியுள்ளார். வருமானத்துக்கும் மீறி செலவு செய்கிற பழக்கம் கொண்டவர் என்பதால் பணத்தேவை அதிக அளவிலிருந்திருக்கிறது. ஆட்டோ டிரைவர் தொழில் மட்டுமின்றி அவ்வப்போது பரிகார பூஜைகளும் செய்து வந்துள்ளான்.

ஈஸ்வரி

இந்நிலையில் ஆறுமுகம் ஈஸ்வரி தம்பதியினர் தங்களது மகன் உதயகுமாருக்கு திருமணமாகி 11 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததற்கு பரிகாரம் செய்யச் சொல்லி சக்திவேலிடம் கேட்டிருக்கின்றனர். காலை 5 மணிக்கு யாரிடமும் தெரிவிக்காமல் ஃபர்னிச்சர் கடைக்கு வரும்படியும், அங்கு வைத்தே பரிகாரத்தை முடித்துக் கொள்ளலாம் என்றும் சக்திவேல் கூறியிருக்கிறான். அதன்படி டிசம்பர் 30-ம் தேதி காலையில் பரிகாரத்துக்காகச் சென்ற அத்தம்பதியினரைக் காலில் விழச் சொல்லியிருக்கிறான். அப்போது சுத்தியல் கொண்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கி விட்டு, ஈஸ்வரி கழுத்தில் இருந்த 5 சரவன் நகையையும், 10 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளான்” என்று விவரித்தார்.

கொலை நடந்த அன்றே காங்கேயம் டி.எஸ்.பி தனராசு தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு சக்திவேலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ``தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கொண்டு திருச்சியில் விட்டுவிட்டு சக்திவேல் மதுரைக்குச் சென்றார். தகவலறிந்து சென்ற நாங்கள் வாடிப்பட்டியில் கைது செய்தோம்” என்கிறார் பார்த்திபன்.

-கி.ச.திலீபன்



source https://www.vikatan.com/news/crime/man-murdered-woman-for-jewelry-in-tiruppur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக