கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சுற்றுச்சூழல் மன்றம், வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி இணைந்து செயல்படுத்தும், தமிழ்நாட்டிலேயே முன்னோடி முதல் திட்டமான, ஊக்கத்தொகையுடன்கூடிய 'ஒரு மாணவர், ஒரு மரம்' என்ற வீட்டுக்குச் சென்று மரம் வளர்க்கும் திட்டம், இயற்கை ஆர்வலர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஒரு மாவட்டத்தில் 32 சதவிகிதம் அளவு காடுகள் இருந்தால்தான், அந்த மாவட்டத்தில் நல்ல இயற்கை வளம் அமைந்திருக்கிறது என்று சொல்வார்கள். அதனால், சீராக மழைப்பொழிவும் இருக்கும் என்பார்கள். ஆனால், கரூர் மாவட்டத்தில் வெறும் 4 சதவிகித அளவே காடு உள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில் காவிரி, நொய்யல், அமராவதி போன்ற ஆறுகள் பாய்ந்தாலும், இங்குள்ள 70 சதவிகித பகுதிகள் வறட்சி மிகுந்தே காணப்படுகின்றன.
இதை மாற்றி, கரூரை பசுமையான மாவட்டமாக மாற்றத்தான், கரூர் மதுரை சாலையில் உள்ள வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மற்றும் வள்ளுவர் அறக்கட்டளை நிர்வாகியான செங்குட்டுவன், `ஒரு மாணவர், ஒரு மரம்' என்ற அசத்தல் திட்டத்தை முன்னெடுத்துள்ளார். நன்றாக மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு, 3 மாதம், 6 மாதம், ஒரு வருடம் என்று மூன்று முறை ஊக்கத்தொகை தர இருக்கிறார். முதல்கட்டமாக, மலைக் கோவிலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 98 மாணவர்களைக் கொண்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது.
Also Read: பள்ளியில் காய்கறித் தோட்டம், வீட்டுக்கு வீடு விதை... அசத்தும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை!
கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பெ.மகேஸ்வரி கலந்துகொண்டு, இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நாகம்பள்ளி பஞ்சாயத்து தலைவர் தமிழ்மணி, கணக்குவேலம்பட்டி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் வேலுமணி, கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செ.ஜெரால்டு, ரோட்டரி கிளப் தலைவர் பாரதி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அமுதா மற்றும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இறுதியாக, இந்தத் திட்டத்தில் பங்கெடுத்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாணவர்களையும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்தி, மரக்கன்றுகள் நடப்பட்டு, மரக்கன்றுகளைப் பாதுகாக்கும் வகையில் மரக்கூண்டுகளும் அமைக்கப்பட்டன.
இதுகுறித்து, வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவனிடம் பேசினோம்.
"கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி பகுதி, கடந்த மூன்று வருடங்களாகத் தமிழகத்திலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக மாறியிருக்கிறது. மழைப்பொழிவும் குறைவாக உள்ளது. இப்படியே போனால், கரூர் மாவட்டம் பாலைவனமாகிவிடும்.
அதனால், இங்கு இயற்கையை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வருங்கால சந்ததியினரான மாணவர்கள் மூலம் மரம் வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டால், நல்ல பலன் கிடைக்கும் என்று யூகித்தோம். அதேபோல், வெறுமனே மரக்கன்றை நட்டுவைத்துவிட்டு, அதோடு விட்டுவிட்டால் அதை மரமாக்குவது யார்? அதனால், மாணவர்களைத் தொடர்ந்து மரக்கன்றுகளை மரமாக்கும் வரையில் செயல்பட வைக்க, அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்க நினைத்தோம்.
அதன்படி, மரம் வளர்க்க விருப்பப்படும் மாணவர்களுக்கு, வீடுகளுக்கே சென்று மரக்கன்றுகள் வழங்குவோம். மரக்கன்றுகள் வளர்வது பற்றி, மாதா மாதம் அவர்கள் எங்களுக்கு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். எங்கள் கண்காணிப்பு குழுவும் தொடர்ந்து மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று, மரக்கன்றுகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கும். அப்படி, சிறப்பாக மரக்கன்றுகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுக்கும் மாணவர்களின் பெயரில், மூன்று மாதத்தில் அருகிலுள்ள வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கி, 100 ரூபாயை ஊக்கத் தொகையாகச் செலுத்துவோம்.
தொடர்ந்து, மரக்கன்றுகளை நன்றாக வளர்க்கும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில், ஆறு மாதம் கழித்து 200 ரூபாயை ஊக்கத்தொகையாகச் செலுத்துவோம். தொடர்ந்து, ஒரு வருடம் கழித்தும் சிறப்பாக மரக்கன்றுகளைப் பராமரிக்கும் மாணவர்களைக் கண்டுபிடித்து, அவர்களின் வங்கிக் கணக்குகளில் 300 ரூபாயை ஊக்கத்தொகையாகச் செலுத்துவோம். தொடர்ந்து, சிறப்பாக மரக்கன்றுகளை வளர்க்கும் மாணவர்கள், கல்லூரிப் படிப்பை முடித்ததும், அவர்களுக்கு பிரபல தனியார் வங்கியில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர இருக்கிறோம். வரும் மார்ச் மாதத்துக்குள், கரூர் மாவட்டத்தில் 2,000 மாணவர்களை இந்தத் திட்டத்தில் இணைக்கவுள்ளோம்.
அதேபோல், தமிழ்நாடு முழுக்க குறைந்தப்பட்சம் 2 லட்சம் மாணவர்களை இந்தத் திட்டத்தின் கீழ் இணைத்து, 2 மரங்களை வளர்த்துக் காட்டும் லட்சியத்தோடு, இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல இருக்கிறோம். இதன்மூலம், பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான இயற்கை சீரழிவைத் தடுத்து, இயற்கையை பழையபடி கட்டமைக்க முடியும். அதேபோல், செல்போன்களில் மூழ்கி, சமூக பிரக்ஞை இல்லாமல் இருக்கும் வருங்கால சந்ததியினரை, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கையோடும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம்" என்றார்.
source https://www.vikatan.com/social-affairs/environment/karur-volunteer-initiated-new-scheme-for-students-to-encourage-them-to-plant-trees
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக