Ad

வெள்ளி, 8 ஜனவரி, 2021

`சீமானை சிறைக்குள் தள்ளியிருப்பார் ஜெயலலிதா!' - `எம்.ஜி.ஆர்’ விஸ்வநாதன் காட்டம்

உள்ளூர் தலைவர்களில் ஆரம்பித்து உலக நாயகன் வரையில், அனைவருமே 'எம்.ஜி.ஆர் ஆட்சி அமைப்போம்!' என்று டயலாக் விட... கொதித்துக்கிடக்கிறார் `எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி'யின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் விஸ்வநாதன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, `டார்ச் லைட்’ சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கியிருந்த தேர்தல் ஆணையம், தற்போது, எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கிவிட்டது. பறிகொடுத்துவிட்ட `டார்ச் லைட்' சின்னத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் நீதிமன்றப் படியேற... எம்.ஜி.ஆர் விஸ்வநாதனோ 'டார்ச் லைட்' சின்னத்தைத் திரும்பவும் தேர்தல் ஆணையத்திடமே ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்!

எதிர்பாரா திருப்பம் நிறைந்த இத்தருணத்தில் எம்.ஜி.ஆர்' விஸ்வநாதனை சந்தித்துப் பேசினேன்...

கமல்ஹாசன்

``தேர்தல் ஆணையம் உங்களுக்கு வழங்கியிருந்த டார்ச் லைட் சின்னத்தை திரும்ப ஒப்படைத்துவிட்டீர்களாமே... என்ன நடந்தது?''

``ஆமாம்.... சிலர் என்னிடம் வந்து `டார்ச் லைட் சின்னத்தை விட்டுக் கொடுத்துவிடுங்கள்’ என்றெல்லாம் பேசினார்கள். அவர்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் விதிகளைப் பற்றி சரிவரத் தெரியவில்லை. `எங்கள் கட்சிக்கு இந்தச் சின்னம் வேண்டும்' என்று ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்தல் ஆணையத்திடம் கமல்ஹாசன் கேட்டிருக்க வேண்டியதுதானே... ஆக, அவருக்கும் விவரம் தெரியவில்லை. இப்போது தன்னம்பிக்கை இல்லாமல், `டார்ச் லைட்' சின்னம் கேட்டு கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொடுக்கும் தன்னம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மக்கள், தலைவர்களைப் பார்த்துத்தான் வாக்கு அளிக்கிறார்கள். எனவே, எங்களுக்கு சின்னம் முக்கியம் அல்ல! எனவே, டார்ச் லைட் சின்னத்துக்கு மாற்றாக வேறு சின்னத்தை எங்கள் கட்சிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதிவிட்டோம். பரிசீலனையிலிருக்கிறது! இதையே `காசு வாங்கிவிட்டு சின்னத்தை கொடுத்துவிட்டார்' என்று சிலர் பேசுகிறார்கள். இன்னும் சிலர், 'கமல்ஹாசனுக்கு எம்.ஜி.ஆர் விஸ்வநாதன் போட்ட பிச்சை' என்றும் சொல்கிறார்கள்.''

சீமான்

`` `எம்.ஜி.ஆர் ஆட்சி நல்லாட்சி இல்லை’ என்று சீமான் கூறுகிறாரே..?''

``பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு நல்லாட்சி கொடுத்தவர் எம்.ஜி.ஆர் மட்டும்தான். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு சீமானுக்கு எந்தவிதத் தகுதியும் கிடையாது. தனது சொந்தக்காரர்களைக் கட்சியில் வைத்துக்கொண்டு தவறுகள் செய்துகொண்டிருக்கும் சீமான், எம்.ஜி.ஆர் பற்றி விமர்சனம் செய்யலாமா? அ.தி.மு.க-வினர் வெறும் உதட்டளவில்தான் சீமானைக் கண்டிக்கின்றனர். ஆனால், எங்கள் கட்சியினர்தான் சீமானின் பேச்சைக் கண்டிப்பதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிவருகிறோம். `எம்.ஜி.ஆர் ஆட்சி மோசமானது’ என்று இப்போது விமர்சித்துவரும் சீமான், எம்.ஜி.ஆர் உயிரோடிருந்தபோதே ஏன் விமர்சிக்கவில்லை?''

``எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தின்போது, சீமான் அரசியலுக்கே வராத பள்ளி மாணவனாகத்தானே இருந்திருப்பார்?’’

``சரி... அப்படியென்றால், கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின்போது ஏன் அவர் எம்.ஜி.ஆர் பற்றி விமர்சிக்கவில்லை? தனிப்பட்ட வகையில் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்கவில்லை என்றாலும்கூட, தங்கள் கட்சியின் நிறுவனத் தலைவரை விமர்சித்தால், நிச்சயம் சீமானை சிறைக்குள் தள்ளியிருப்பார்தானே!’’

ஜெயலலிதா

``நீங்களேகூட, ஜெயலலிதா ஆட்சியின்போது 'எம்.ஜி.ஆர் ஆட்சி அமைப்போம்' என்று கட்சி தொடங்கவில்லையே?’’

``ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே 'அனைத்துலக எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று கட்சி ஆரம்பித்துவிட்டேன் நான். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவையே எதிர்த்து போட்டியிடவும் தீர்மானித்தேன். ஆனால், எல்லோருமே `அம்மாவை எதிர்க்க வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டதால், என் முடிவை மாற்றிக்கொண்டு அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டுவிட்டேன்!''

Also Read: `19 எம்.எல்.ஏ-க்களில் 11 பேர் விலக முடிவு; கோமாவில் கட்சி!’ - பீகார் காங்கிரஸ் சலசலப்பு

``எம்.ஜி.ஆர் பெயரில், நீங்கள் கட்சி நடத்திவருவதன் நோக்கம்தான் என்ன?''

``எம்.ஜி.ஆரின் வளர்ப்புத் தொண்டன் நான். ஏழ்மை நிலையில் இருந்த என்னைப் படிக்கவைத்து, மாநகராட்சி ஆசிரியராகப் பணி வாய்ப்பையும் வழங்கியவர் எம்.ஜி.ஆர். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, எம்.ஜி.ஆரைப்போல் நல்லாட்சி நடத்த வேண்டும் என்ற நோக்கிலேயே 'எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி'யை ஆரம்பித்திருக்கிறேன்.

என்னுடைய ஓய்வூதியப் பணத்தில்தான் சிரமப்பட்டு கட்சி நடத்திவருகிறேன். லஞ்சம், ஊழலை எதிர்க்கும் எம்.ஜி.ஆர் வாரிசான நான் யாரிடமும் ஒரு பைசா வாங்கவும் மாட்டேன்... தேர்தலில் வாக்குக்குப் பணமும் கொடுக்க மாட்டேன்!''

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.

``இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்-ஸில் ஆரம்பித்து கமல்ஹாசன் வரையிலும் எல்லோருமே 'எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு' என்கிறார்களே..?''

``எம்.ஜி.ஆரோடு நெருங்கிப் பழகி, அவரது சேவையை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன் நான். 1972-லிருந்தே அ.தி.மு.க உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். ஆனால், 'ஆனந்த ஜோதி' என்ற ஒரு படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்ததற்காக கமல்ஹாசன், எம்.ஜி.ஆரைச் சொந்தம் கொண்டாடலாமா?

Also Read: நாகை: வாயை மூடி கோயிலுக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை! - விதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

Also Read: எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா? - ஒரு விரிவான அலசல்!

அடுத்து, எம்.ஜி.ஆர் கலந்துகொண்ட கூட்டத்தில் தாங்கள் இருப்பதான ஒரு போட்டோ ஆதாரத்தைக்கூட இதுவரை இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் காட்டவில்லை! சசிகலா மூலமாகத்தான் இவர்கள் இருவரும் ஜெயலலிதாவுக்கே அறிமுகமாகி அ.தி.மு.க-வுக்குள் வந்திருக்கிறார்கள்! எனவே, எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்வதற்கு இவர்களில் யாருக்குமே தகுதி இல்லை! நான்தான் எம்.ஜி.ஆரின் ஒரிஜினல் அரசியல் வாரிசு!''

எம்.ஜி.ஆர் விஸ்வநாதன்

`` சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி வெற்றி பெற்று நீங்கள் முதல்வரானால், நாட்டு மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?''

(சிரிக்கிறார்) ``நான்தான் முதல்வர் என்று நானே சொல்லக் கூடாது... இல்லையா. இலவசக் கல்வியை வழங்குவேன். லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான எம்.ஜி.ஆர் ஆட்சியை வழங்குவேன்!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/jayalalithaa-would-have-put-seeman-in-jail-says-mgr-viswanathan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக