Ad

செவ்வாய், 12 ஜனவரி, 2021

`பித்தளைப் பானை முதல் நெய் வரை!’ - விஜயபாஸ்கரின் பொங்கல் சீர்; கொதிக்கும் எதிர்க்கட்சிகள்

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், எம்.எல்.ஏ-க்கள் பலரும் தங்களுக்கே தொகுதியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றனர். இதனால், பலரும் தொகுதிக்குள் அறிவித்து முடிக்காத பல திட்டங்களையும் தற்போது விரைந்து முடித்துவருகின்றனர். அதோடு, அவ்வப்போது நலத்திட்ட உதவிகளையும் செய்து மக்கள் மத்தியில் செல்வாக்கைச் சம்பாதித்துவருகின்றனர். அந்த வரிசையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா நேரத்தில் தன்னை எம்.எல்.ஏ-வாக்கிய விராலிமலை தொகுதி முழுவதும் வீட்டுக்கு வீடு அரிசி, மளிகைப்பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களைக் கொடுத்து அவர்களை நெகிழவைத்தார்.

அந்த வரிசையில், தற்போது தொகுதி முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு `நம்ம விஜயபாஸ்கர் வீட்டுப் பொங்கல் சீர்' என்ற பெயரில் பித்தளைப் பானை, பச்சரிசி, வெல்லம், நெய், கரண்டி என பொங்கல்வைக்கத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வழங்கி, தொகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் அரசு சார்பில், ஏற்கெனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில்,விராலிமலைத் தொகுதி மக்களுக்கு அமைச்சர் வழங்கிய பொங்கல் சீர் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

இதற்கிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும்போது பொங்கல் தொகுப்பு குறித்து தவறாதச் செய்தி வெளியிட்டதாக, குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சியின் மைக்கை தூரத்தில் எடுத்துவைத்து அந்தத் தொலைக்காட்சிக்குப் பேட்டியளிக்க மறுத்துவிட்டார். இந்தச் சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றி தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர் சிலரிடம், கேட்டபோது, ``இப்போ பொங்கல் பரிசு கொடுத்தது மட்டுமில்ல, கஜா, கொரோனா நேரத்திலும் அமைச்சர் தொடர்ச்சியா நிவாரண உதவிகள் செஞ்சுக்கிட்டுவர்றாரு. கொரோனா ஊரடங்கால ரொம்ப சிரமப்பட்டுக்கிட்டு இருந்த நேரத்துல எங்களுக்கெல்லாம் இரண்டு முறை நிவாரணம் கிடைச்சிருக்கு.

பொங்கல் பரிசு

வயசானவங்க கண்ணு தெரியாம கஷ்டப்படக் கூடாதுன்னு வீடு தேடி வந்து கண்ணாடி கொடுத்தாரு. இப்போ, பொங்க சீர் கொடுத்திருக்காரு" என்றனர்.

தி.மு.க மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தென்னலூர் பழனியப்பன் கூறும்போது, ``தமிழகம் முழுவதுமே அனைத்து குடும்பங்களுக்கும் அரசு சார்பில் ரூ.2,500 பணத்துடன் பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கு.

அதைக் கேவலப்படுத்துகிற மாதிரிதான் இப்போ அமைச்சர், தன் தொகுதிக்குள் தனியாகப் பொங்கல் பரிசு கொடுத்துக்கிட்டு இருக்காரு. கடந்த 10 வருஷமா பொங்கல் வந்துக்கிட்டுதான் இருக்கு. இத்தனை ஆண்டுகளில் கொடுக்காத பொங்கல் பரிசை இந்த வருடம் மட்டும் கொடுப்பதற்கு, வரப்போகிற தேர்தல்தான் காரணம் என்று மக்கள் அனைவருக்குமே நன்றாக தெரியும். மக்கள் ரொம்ப தெளிவாக இருக்காங்க. அவரைப் பாராட்டினா ஏத்துக்குவாரு.

தென்னலூர் பழனியப்பன்

அதேநேரத்துல, உள்ள கருத்தைச் சொன்னதுக்காக ஆக்ரோஷப்பட்டு தொலைக்காட்சி மைக்கை தூக்கிப் போட்டிருக்காரு. இது பற்றி கண்டனத்தைத் தெரிவித்திருக்கும் எங்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலின், அதிகார மமதையில் அமைச்சர் செயல்பட்டிருக்கிறார். அவரையும், அவரது அமைச்சரவையையும் மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது’ என்று கூறியிருக்கிறார். அதன்படி அவர்களின் எதிர்வினை கண்டிப்பாக இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/vijayabaskar-pongal-gift-the-minister-covered-the-people-of-his-constituency

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக