தமிழகத்தில் நிலத்தடி நீர் திருடப்படுவதைத் தடுக்க தனியாக ஆணையம் ஒன்றை அமைக்க தமிழக பொதுப்பணித்துறை, தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. நிலத்தடி நீர் முறைகேடாகத் திருடப்படுவதே முக்கிய காரணம். தமிழகத்தில் நிலத்தடி நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம் சார்பில் மாநிலம் முழுவதும் அபாயகரமான பகுதி, பாதுகாப்பான பகுதி, அதிநுகர்வு பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாதுகாப்பான பகுதியைத் தவிர, மற்ற இரண்டு வகை பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளன.
தடை இருந்தாலும், மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பில் இதைத் தடுக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவால், சட்ட விரோதமாகச் செயல்பட்டு வந்த தொழிற்சாலைகள், குடிநீர் கேன் ஆலைகள் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர்களால் சீல் வைக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தப் பணிகளை நிலத்தடி நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் மேற்கொள்ளும் வகையில், அதன்கீழ் நிலத்தடி நீர் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பி இருக்கிறது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆணையம்தான் நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகளுக்கு தடையில்லாத சான்று வழங்குவது, நிலத்தடி நீர் திருடப்பட்டால் நடவடிக்கை எடுப்பது, அபராதம் வசூலிப்பது, சிறைத்தண்டனைக்குப் பரிந்துரை செய்வது உள்ளிட்ட செயல்களைச் செய்யும்.
புதுச்சேரியில் மாநில நிலத்தடி நீர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழகத்திலும் நிலத்தடி நீர் ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணையம் நிலத்தடி நீர் திருட்டைத் தடுக்க கடுமையாக நடவடிக்கை எடுக்கும். இதன்மூலம் நிலத்தடி நீர் அதிகமாகப் பயன்படுத்துவது மற்றும் நிலத்தடி நீர் திருடப்படுவது தடுக்கப்படும் என நம்பலாம்.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/new-authority-to-be-set-up-in-tamilnadu-to-prevent-groundwater-exploitation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக