Ad

செவ்வாய், 12 ஜனவரி, 2021

சென்னை: அமித்ஷா பி.ஏ-வுக்கு போன் செய்தால்..! - ஓசி சிக்கன் ஃபைரைடு ரைஸ் கேட்டு பா.ஜ.க பிரமுகர் ரகளை

சென்னை ஐஸ்ஹவுஸ் முத்தையா தெருவில் MSM மலேசியன் பரோட்டா என்ற ஃபாஸ்ட் புட் உணவகத்தை அபுபக்கர் என்பவர் நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு 11-ம் தேதி இரவு 11.30 மணியளவில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வாங்க பைக்கில் மூன்று பேர் வந்தனர். அவர்கள், பார்சலை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் பைக்கில் செல்லப் புறப்பட்டனர். உடனே கடை ஊழியர்கள், அவர்களிடம் பணத்தைக் கேட்டிருக்கின்றனர். அதனால், கடை ஊழியர்களுக்கும் பார்சல் வாங்கியவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

பா.ஜ.க பிரமுகர் பாஸ்கர்

அதனால், கடை ஊழியர்கள் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பார்சல் வாங்கியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், நாங்கள் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸாரிடம் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். ஒருவழியாக அவர்களை போலீஸார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால், வாக்குவாதம் நடந்ததை செல்போனில் வீடியோவாக எடுத்த ஒருவர், அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Also Read: விவசாயிகள் போராட்டம்: `பறவைக் காய்ச்சலைப் பரப்ப சிக்கன் பிரியாணி!’- சர்ச்சையில் பா.ஜ.க எம்.எல்.ஏ

அந்த வீடியோவில், `எங்களிடமே பணம் கேட்கிறாயா, நான் யார் தெரியுமா... திருவல்லிக்கேணி பா.ஜ.க பகுதிச் செயலாளர். என்னோட வந்த இவரு இந்து முன்னணியில இருக்கிறார். நான் அவரை கன்ட்ரோல் பண்ணி வைத்திருக்கிறேன்’ என்று பேசுகிறார். அதற்கு போலீஸார், `அமைதியாக இங்கிருந்து செல்லுங்கள்’ என்று கூறுகின்றனர். ஆனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர், `நான் என்ன ரௌடியா, அமித்ஷாவின் பி.ஏ-வுக்கு போன் செய்தால் போதும் இங்கு 100 பேரு வந்து கலவரம் செய்துவிடுவார்கள்’ என்று கூறுகிறார். அதற்கு போலீஸார், `அமைதியாகச் சென்றுவிடுங்கள், இல்லைன்னா கை வைக்க வேண்டியது வரும்’ என்று கூறுகின்றனர். அதன்பிறகு அவர்கள் பைக்கில் புறப்பட்டுச் செல்கின்றனர்.

பாஸ்கர்

Also Read: பிரியாணி கடையில் தகராறு செய்தவர்கள் நீக்கம்! உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக கடைக்காரர் தரப்பில் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் வீடியோ ஆதாரம் அடிப்படையில் சிக்கன் ரைஸை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தவர்களைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திருவல்லிக்கேணி பா.ஜ.க பகுதிச் செயலாளர் பாஸ்கர் மற்றும் அவரின் நண்பர்கள் எனத் தெரியவந்தது. அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் `ஓசி சிக்கன் ரைஸ் பா.ஜ.க' என்ற ஹேஸ்டாக் ரெண்ட்டாகி வருகிறது.

ஏற்கெனவே சென்னையில் பிரியாணி கடையில் தி.மு.க-வினர் ரகளை செய்த வீடியோ வேகமாகப் பரவியது. உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், பிரியாணி கடைக்குச் சென்று ஆறுதல் மற்றும் வருத்தத்தை கூறினார். தற்போது பா.ஜ.க பிரமுகர்கள் உணவகத்தில் ரகளை செய்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கருத்துக்களைப் பதிவு செய்துவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-secured-bjp-cadres-over-problem-in-hotel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக