கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகத்தான், மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகவும், இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாகப் பாதிப்படுவார்கள் எனவும் பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த பல வாரங்களாக, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் ரிலையன்ஸ் ரிறுவனத்துக்கு எதிராகக் கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. இந்நிலையில்தான் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையைவிட கூடுதல் விலை கொடுத்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய கர்நாடகாவில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள், இதுகுறித்து காட்டமான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். ``விவசாயிகளின் எதிர்ப்பை திசை திருப்புவதற்கான கண் துடைப்பு நடவடிக்கை இது. ஆனால், இதிலேயே கூட ஏகப்பட்ட கெடுபிடிகள்... வேளாண் சட்டங்கள் தீவிரமாக முழுமையாக நடைமுறைக்கு வந்து, அரசு கொள்முதல் நிறுத்தப்பட்டால், விவசாயிகளின் நிலை என்னவாகும் என்பதற்கு இதுவே ஆரம்ப கட்ட உதாரணம். ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே விவசாயிகள் நம்பியிருக்கக்கூடிய நிலை வந்தால், இவர்கள் எந்தளவுக்கு நசுக்கப்படுவார்கள் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்’’ என்கிறார் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன்.
கர்நாடகம் மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிந்தனூர் தாலுகாவில் உள்ள விவசாயிகளிடம், நெல் கொள்முதல் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இங்கு செயல்பட்டு வரும் ஸ்வஸ்திய விவசாயிகள் கூட்டமைப்பு என்ற நிறுவனத்தின் மூலமாக, இப்பகுதி விவசாயிகளிடம் இருந்து சோனா மசூரி என்ற நெல் ரகத்தைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டமைப்பில் ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளார்கள்.
Also Read: "கார்ப்பரேட் விவசாயத்தில் விருப்பமில்லை" - நீதிமன்றத்தில் ஜியோ... விவசாயிகள் போராட்டம் காரணமா?
இந்த ஒப்பந்தம் குறித்தும், இதில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் கருத்து தெரிவிக்கும் பெ.மணியரசன், ``புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் சொல்லி வந்தது. தங்களது நிறுவனம் உணவு தானிய உற்பத்தியில் ஈடுபடப்போவதில்லை எனவும் அறிவித்தது. அது பொய் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
இது ஒரு புறமிருக்க, விளைபொருள்களுக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையைவிட தாங்கள் கூடுதல் விலை கொடுப்போம் என விவசாயிகளை நம்ப வைத்து, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை மழுங்கடிப்பதற்கான நய வஞ்சகம் இது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு 1,950 ரூபாய் விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுவதாக ரிலையன்ஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட 82 ரூபாய் கூடுதலாக வழங்குவது போன்ற தோற்றத்தை இது எற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளோ, விவசாயிகளை வஞ்சிக்கக்கூடியது. 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு கொள்முதல் செய்யும் நெல்லில் 18 சதவிகிதத்துக்கும் மேல் ஈரப்பதம் அனுமதிக்கப்படுகிறது.
Also Read: `மறு அறிவிப்பு வரும் வரை வேளாண் சட்டங்களுக்கு தடை!’ - அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் விவசாயிகள் தங்களது நெல்லை 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதத்தில் காய வைக்க, உழைப்பும் செலவும் அதிகரிக்கும். கூட்டமைப்புக்கு 1.5 சதவிகிதம் விவசாயிகள் கமிஷன் தர வேண்டும் எனவும் நெல்லை மூட்டையாகக் கட்டி, விவசாயிகள்தான் குடோனில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் எனவும் நிபந்தனையில் சொல்லப்பட்டுள்ளது. குடோனில் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட நெல்லை, மூன்றாம் தரப்பு பிரதிநிதிகள் ஆய்வு செய்வார்கள். அவை ரிலையன்ஸ் நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்ட தரத்தில் இருந்தால்தான் நெல் ஏற்கப்பட்டு, விவசாயிகளின் கணக்கு பணம் வரவு வைக்கப்படும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் விவசாயிகளுக்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தும். அரசு கொள்முதல் நிறுத்தப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே விவசாயிகள் நம்பி இருக்கக்கூடிய நிலை வந்தால், எவ்வளவு ஆபத்துகள் நேரிடும் என்பதற்கு இதுவே உதாரணம். இதனால்தான் புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கிறோம்’' என்றார்.
source https://www.vikatan.com/news/agriculture/conditions-which-are-in-reliance-retails-new-deal-with-karnataka-farmers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக