சமீபகாலமாக அ.தி.மு.க-வின் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க. தமிழகத்தில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பா.ஜ.க. அறிவிக்கும் என்பதை பா.ஜ.க மாநிலத்தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், வி.பி துரைசாமி உள்ளிட்ட பலர் கருத்து தெரித்துவந்த நிலையில், `அ.தி.மு.க தான் பெரும்பான்மையான கட்சி. அவர்கள் தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். கே.பி முனுசாமியின் பேச்சைப் பொருட்படுத்தப்போவதில்லை’ என்று இருகட்சிகளுக்கு நடக்கும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பா.ஜ.க மாநில பார்வையாளர் சி.டி.ரவி.
பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் மற்றும் மாநில பார்வையாளர் சி.டி.ரவி திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டை பகுதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கட்சி நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ``தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சியாக இருப்பது அ.தி.மு.க தான். அவர்களுக்கு பிறகுதான் பா.ஜ.க. எனவே அவர்களை முன் வைத்துத்தான் நாங்கள் இந்தத் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். தமிழக மக்கள் அ.தி.மு.க கூட்டணிக்கு சரியான வெற்றியை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
பிரதமர் மோடி செய்துள்ள நன்மைகள் பற்றி மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அத்தோடு மோடியின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் மக்கள். அவரை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
தமிழகத்தில் அ.தி.மு.க பெரும்பான்மையான கட்சி என்பதால் அவர்கள் தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். கே.பி முனுசாமி சொல்லும் கருத்து நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் எடுப்பதே இறுதி முடிவு. அவர்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.
யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பா.ஜ.க அறிவிக்கும் என்று உங்களது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து பேசிவருகிறார்களே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, `அதெல்லாம் ஒன்றுமில்லை. எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்’ என்று பட்டும் படாமல் சொல்லிச் சென்றார்.
முன்னதாக அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, `தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை அவர்கள் ஒன்று அ.தி.மு.க அல்லது தி.மு.க மேல் ஏறிதான் பயணம் செய்யவேண்டும். அவர்களால் இங்கு எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது’ என்றார் அதிரடியாக.
கே.பி முனுசாமி பற்ற வைத்த நெருப்பால் தான் இன்று பா.ஜ.க இறங்கி வந்திருப்பதாகவும், பா.ஜ.க-வை எடப்பாடி சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் என்று அ.தி.மு.க வட்டாரத்தினர் பேசத்தொடங்கியிருக்கிறார்கள்
source https://www.vikatan.com/news/politics/ct-ravi-says-admk-will-decide-the-cm-candidate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக