காவிரி கடைமடைப் பகுதிகளான டெல்டா பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. தை மாதம் 1-ம் தேதி அறுவடை செய்ய ஏதுவாக சாகுபடி செய்யப்பட்ட பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி, நெல் முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுநிலையாக வலுப்பெற்று தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால், அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா, தாளடிப் பயிர்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், திருமருகல், கீழையூர், வேதாரண்யம் பகுதிகளில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி, குத்தாலம், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், மழை நீர், காவிரி நீர் என பாசன நீர் போதிய அளவில் கிடைத்ததாலும் சம்பா சாகுபடியில் விவசாயிகள் முழுமூச்சாக ஈடுபட்டனர்.
Also Read: `புயலை விட பெரிய பாதிப்பு!’ - தொடர் மழையால் கலங்கிநிற்கும் டெல்டா விவசாயிகள்
அண்மையில், டெல்டா பகுதிகளைப் பாதித்த நிவர் புயல், புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் அப்பகுதியிலுள்ள சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. தொடர் மழையால் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. உரிய இழப்பீடு வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து, வயல்களில் தண்ணீர் வடிந்ததும் பயிருக்கு உரம், பூச்சி மருந்து தெளித்து விவசாயிகள் ஒரளவுக்குப் பயிர்களைக் மீண்டும் காப்பாற்றி வந்தனர். செப்டம்பர் மாதத்தில் நடவு செய்யப்பட்ட பயிர்கள், தை மாதம் 1-ம் தேதி அறுவடை செய்யும் அளவுக்குத் தயார் நிலையில் இருந்ன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நிவர், புரவி புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக வடிகால் வாய்க்கால் முழுவதும் நீர் நிரம்பியுள்ளதால், தற்போது பெய்யும் கனமழையால் கதிர் வந்த பயிர்கள் வயலில் சாயத் தொடங்கியுள்ளன. கதிர்கள் முற்றிய பயிர்கள் தண்ணீரில் முளைக்கத் தொடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கதிர் முற்றாமல் இருக்கும் பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தால் நெல்மணிகள் பதராக மாறிவிடும் என்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய மயிலாடுதுறை மாவட்டம் கற்கோயில் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ், ``டெல்டா மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயலால் கனமழைக்கு ஏற்கனவே 3.50 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் நாசமாகின. இந்நிலையில் மீண்டும் தொடர் கனமழையால் பால் பிடிக்கும் பருவம் மற்றும் 10 நாளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. கதிருடன் நெற்பயிர்கள் சாய்ந்ததால் அறுவடை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் ஆளாகி உள்ளோம். இனி மகசூல் கிடைக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் முளைத்துவிடுவதோடு, பலத்த சேதம் ஏற்படும்" என்றார்.
``25 ஆண்டுகளாக விவசாய பணிகள் மேற்கொண்டு வருகிறோம். இது போன்று இயற்கை இதுவரை எங்களைப் பழி வாங்கியதில்லை. இதே நிலை தொடர்ந்தால் நெற்கதிர்கள் அறுவடை செய்ய முடியாது. அறுவடை செய்தாலும் நெல்லில் ஈரப்பதம் இருக்கும். அதை வியாபாரிகள் கொள்முதல் செய்ய மாட்டார்கள். தைத் திருநாள் கொண்டாடாமல் விவசாயிகள் அனைவரும் வயலில் சோகத்தில் மூழ்கியுள்ளோம். அரசு உரிய இழப்பீடு வழங்க வில்லை என்றால் விவசாயிகள் தற்கொலை மரணங்கள் அதிகரிக்கும்" என்கிறார் பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பரணிதரன்.
ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் விவசாயிகள் நிவாரணம் கேட்ட நிலையில் தற்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒரு ஹெக்டேருக்கு (2.5 ஏக்கர்) 20 ஆயிரம் ரூபாய் என்பது விவசாயிகள் செலவு செய்த அளவையும் விட குறைவு என்பதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும், கணக்கெடுப்பு என்ற பெயரில் தாலுகா வாரியாக இழப்பீட்டுத் தொகை மாறுகிறது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கியுள்ள பயிர்களை அறுவடை செய்து, அப்புறப்படுத்தி மீண்டும் விவசாயப் பணிகளை மேற்கொள்ள இரட்டிப்பு செலவாகும் என்பதால் அரசு போதிய அளவு நிவாரணமும், 100 சதவிகித காப்பீடும் வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
source https://www.vikatan.com/news/agriculture/tn-delta-district-farmers-affected-in-continuous-rains
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக