பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடி வரும் நிலையில் மதுரை மக்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளுடன் கூடுதல் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
காளைகளின் ஜல்லிக்கட்டு ஒருபக்கம் என்றால், அதைக்காண வரும் அரசியல் தலைவர்களால் அரசியல் ஜல்லிக்கட்டின் களமாக மதுரை மாறியது.
தமிழரின் பண்பாட்டு அடையாளமான பொங்கலும் ஜல்லிக்கட்டும் தேர்தலில் தங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு விழாக்களை கொண்டாடத் தொடங்கியுள்ளன.
சமீப நாள்ட்களாக பா.ஜ.க தமிழகம் முழுவதும் பொங்கல் விழாக்களை நடத்தியது. தி.மு.க ஒவ்வொரு ஆண்டும் சமத்துவ பொங்கலுடன் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டைக் காண காங்கிரஸ் எம்.பி-யும் அக்கட்சியி முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் வருகை தருகின்றனர்.
இன்று காலை மதுரை வில்லாபுரத்தில் எஸ்ஸார் கோபி ஏற்பாடு செய்த 2,000 பெண்கள் கலந்துகொண்ட சமத்துவ பொங்கலைத் தொடங்கி வைத்தார் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி. அப்போது அவர் பேசும்போது, ```மதுரைன்னாலே 2 விஷயம் நினைவுக்கு வரும். பாசம், வீரம்.
பொங்கல் என்பது சமூகநீதியை சமத்துவத்தை உருவாக்கும் வகையில் கலைஞர் உருவாக்கினார். விரைவில் தி.மு.க ஆட்சிக்கு வருவது உறுதி.நாம் இழந்த உரிமைகளை பெறுவோம். பா.ஜ.க-வுக்கு அடிமையாக உள்ள அ.தி.மு.க-வை அகற்றுவோம்" என்றார்.
அதைத்தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை காண சென்றார். மதியம் 12 மணிக்கு ராகுல் மதுரை வந்தார். அவருக்காக விமான நிலையம் முதல் மதுரை நகரமெங்கும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரை வரவேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் வந்திருந்தனர்.
ராகுல் காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்த்து ஒரு மணி நேரம் ரசித்துவிட்டு கிளம்பினார்.
வரும் 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வருகை தர உள்ளதால் அ.தி.மு.க-வினர் வரவேற்பு ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகிறார்கள். அரசியல் தலைவர்களின் தொடர்ச்சியான வருகையால் மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு களைகட்டியுள்ளது.
source https://www.vikatan.com/news/politics/rahul-udhayanishi-visits-avaniyapuram-over-jallikkattu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக