Ad

வியாழன், 14 ஜனவரி, 2021

அசுரனுக்கு மெசேஜ் சொன்ன சிம்புவுக்கு, `ஈஸ்வரன்' என்ன சொல்கிறார்?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

காட்சி - 1

இயக்குநர்: ''சார், நீங்க கிரிக்கெட் ப்ளேயர். முதல் அஞ்சு பால் டொக் வெச்சிட்டு, கடைசி பால்ல சிக்ஸர் அடிச்சி கப்பு ஜெயிக்கிறீங்க.''

நடிகர்: ''ஓகேண்ணே சிறப்பா பண்ணிடலாம்.''

இயக்குநர்: ''தம்பி, முக்கியமான விஷயம் லுங்கி கட்டிக்கிட்டேதான் கிரிக்கெட் விளையாடுறீங்க... அதுதான் ஹைலைட்!''

நடிகர்: ''தரமான சம்பவம்ணே!''

காட்சி - 2

ஈஸ்வரன்

இயக்குநர்: "தம்பி, தோட்டத்துக்குள்ள மூணு பாம்பு புகுந்துடுது!''

நடிகர்: "தூக்கிப்போட்டு மிதிக்கணுமான்ணே?!"

இயக்குநர்: "இல்ல தம்பி... கையாலயே பிடிச்சி கபடி ஆடுறீங்க. ஆனா, ஒரே ஒரு பாம்பு உங்களைக் கொத்திடுது, கொஞ்சம் மயக்கநிலைக்குப் போயிடுறீங்க. ஆனா, பாம்பு கடியெல்லாம் ஒரு மேட்டரே இல்லைன்னு மீண்டுவந்து வில்லன்களை சிதைக்கிறீங்க, பன்ச் வசனங்களால் பஞ்சராக்குறீங்க!"

நடிகர்: '"சூப்பர்ணே சூப்பர்ணே..."

இப்படி படம் முழுக்க 'வாவ்' சொல்லவைக்கும் பல அற்புதக் காட்சிகளை லாக்டெளன் காலத்தில் உட்கார்ந்து யோசித்து உருவாக்கியிருக்கிறது இயக்குநர் - நடிகர் கூட்டணி.

ஊர் பெரியவரான பாரதிராஜாவை அவரது பிள்ளைகள் ஊரில் தனியாகவிட்டுவிட்டு, சென்னையில் செட்டிலாகிவிடுகிறார்கள். வில்லன்களால் உயிருக்கு ஆபத்திருக்கும் பாரதிராஜாவைக் காக்க 'ஈஸ்வரன்' சிம்பு ஊருக்குள் வருகிறார். பிள்ளைகளைப் பார்க்காமல் தவிக்கும் பெரியவருக்குப் பேருதவியாக வருகிறது மோடிஜியின் லாக்டெளன் அறிவிப்பு. இ-பாஸ் உதவியோடு சென்னையிலிருந்து பாரதிராஜாவின் ஒட்டுமொத்தக் குடும்பமும் ஊருக்குள் வர, அங்கே நடக்கும் சிறப்பான சம்பவங்களே படம். சிம்பு யார், அவர் ஏன் இந்த கிராமத்துக்குள் வந்தார், பெரியவர் பாரதிராஜா வீட்டுக்குள் நிகழக்காத்திருக்கும் ஆபத்து என்ன, சிம்பு அசுரன்களை அழிக்கிறாரா, 'மன்னிக்கிறாரா' என்கிற இந்த அத்தனை கேள்விகளுக்கும் நமக்கும் பதில் தெரியும் என்றாலும், பெரிய குறைகள் ஏதுமின்றி படமாக்கியிருக்கிறார் சுசீந்திரன்.

ஈஸ்வரன்

ஈஸ்வரன் யார் தெரியுமா, ஈஸ்வரன் எப்படிப்பட்டவர் தெரியுமா என ஏகப்பட்ட பில்ட்அப்களோடு படம் ஆரம்பிக்கிறது. போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஈஸ்வரன் யார் எனத்தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் எஃப்ஐஆர் போடத் துடிக்க, ஈஸ்வரனுக்காக இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி, அமைச்சர் என எல்லா இடங்களிலிருந்தும் போன் வருகிறது. பணிந்து, குனிந்து ஈஸ்வரனை வெளியே அனுப்புகிறார் சப் இன்ஸ்பெக்டர். ''அட, அப்ப ஈஸ்வரன் யாருப்பா?'' என நிமிர்ந்து உட்கார்ந்தால், பழனி கோயிலுக்கு வரும் விஐபிகள், அவர்கள் நண்பர்களுக்கெல்லாம் சாமியைப் பார்க்க ஏற்பாடு செய்துதரும் ஏஜென்ட் எனச் சொல்லி சஸ்பென்ஸை உடைக்கும்போது நிமிர்ந்து உட்கார்ந்த நம் நெஞ்சில் ஈட்டி இறங்குகிறது. இப்படிப் பல ஈட்டிகள் படம் முழுக்க இறங்குகின்றன.

ஸ்லிம் சிம்பு, படம் முழுக்க செம எனர்ஜியோடு சுற்றிச் சுழன்றிருக்கிறார். தன்னைக் காதலிக்க வரும் பெண்களைத் திருத்துகிறார், எதிரிகளுக்கு (படத்தில் அல்ல) பன்ச் வசனங்களால் பதிலடி கொடுக்கிறார், பாம்பை வெறும் கையால் பிடிக்கிறார், வில்லன்களை ஓட ஓட விரட்டுகிறார், சென்ட்டிமென்ட்டாகப் பேசி திருத்துகிறார் எனப் பல அதிசய அற்புதங்களை நிகழ்த்துகிறார்.

கிரிக்கெட் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தினாலும் புளியம்பட்டி பும்ரா, லாஸ்ட் ஓவர் கேதர் ஜாதவ் என ட்ரெண்டிங்காக யோசித்ததற்காகப் பாராட்டுகள்.

ஈஸ்வரன்

நந்திதா, நிதி அகர்வால் என இரண்டு கதாநாயகிகள். சிம்பு கால்ஷீட்டே மூன்று வாரங்கள்தான் என்பதால், இவர்களை எல்லாம் 2-3 நாட்களில் இயக்குநர் ஷூட் செய்து அனுப்பிவிட்டிருப்பார்போல் தெரிகிறது.

பாரதிராஜா, முனீஷ்காந்த், பாலசரவணன், மனோஜ் பாரதிராஜா, ஆதவன், ஸ்டன்ட் சிவா எனப் படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள். எல்லோருமே தங்கள் பங்களிப்பை மிகச்சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்கள். பாலசரவணன், முனீஷ்காந்த், ஆதவன் என மூவரும் சில இடங்களில் மெல்லிய நகைச்சுவையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

Also Read: விஜய்யின் குட்டி ஸ்டோரியும், விஜய்சேதுபதியின் `முட்டை' ஸ்டோரியும்! `மாஸ்டர்' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

இசையமைப்பாளர் தமன் பின்னணி இசையில் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார். திருவின் ஒளிப்பதிவு கிராமத்தை இயல்பாகப் பதிவுசெய்திருக்கிறது. ஆன்டணியின் எடிட்டிங் படத்தைத் தொய்வில்லாமல் கொண்டுபோயிருக்கிறது. ஜோசியர் காளி வெங்கட் வரும் காட்சிகளில் எல்லாம் திருவும் ஆன்டணியும் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.

ஈஸ்வரன்

இருந்தும் அப்படியொரு சீரியஸான இடைவேளை காட்சிக்குப் பிறகு கொரோனாவை வைத்து காமெடி செய்தது, 'ஆனந்தம்' டெம்ப்ளேட் குழந்தைக்கு ஹார்ட் ஆபரேஷன், முன்னர் பாசம் காட்டியவர்கள், பின் 'நீ என் குடும்பமல்ல' என 'நம்ம வீட்டுப் பிள்ளை' நாயகனை வீட்டைவிட்டே விரட்டுவது போன்றவற்றில் செம 'சீரியல்' வாடை! தத்துவம் என சீரியஸாக சில வசனங்களைப் பேசியிருக்கிறார்கள். ஆனால்..! குறிப்பாக, அக்கால குழந்தைத் திருமணங்களை எல்லாம் நியாயப்படுத்திப் பேச முற்பட்டிருப்பது, அதுவும் பாரதிராஜா போன்றோரே அதைப் பேசுவது அபத்தத்தின் உச்சம்!

படத்தில் பாரதிராஜாவிடம் ''நேரத்தை விடுங்க... அது வரும் போகும். ஆனா, காலத்தைப் பிடிச்சிக்குங்க'' என்கிறார் சிம்பு. உங்க நேரம், காலம் எல்லாம் உங்ககிட்டதான் இருக்கு சிம்பு ப்ரோ... களத்துல இறங்குங்க!


source https://cinema.vikatan.com/tamil-cinema/simbu-and-suseenthirans-eeswaran-tamil-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக