Ad

திங்கள், 11 ஜனவரி, 2021

இலங்கை: பிரபாகரன் மரணம் குறித்த கருத்து! - அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சுற்றும் சர்ச்சை

இலங்கை அம்பாறை மாவட்டத்தில் உள்ள லாத்துகல கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்கேற்றார். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் `கிராமத்துடன் உரையாடல்’ என்ற நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அப்படியான ஒரு நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறப்பு குறித்து அவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

கோத்தபய ராஜபக்‌சே

தற்போதைய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கை உள்நாட்டுப் போரின்போது பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றியவர். இன்றளவிலும் பெரும்பான்மையான சிங்கள மக்களால், போரில் விடுதலைப் புலிகளை அளித்ததற்கு இவரே முக்கிய காரணம் என்று கூறப்பட்டவர்.

அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, அதிபரை பற்றிக் குறிப்பிட்டுப் பேசும் போது கோத்தபய ராஜபக்சே என்று குறிப்பிடாமல் அவரின் முழு பெயரான நந்தசேன கோத்தயபய ராஜபக்சே என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஹரின் பெர்னாண்டோ

இந்த பேச்சுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய கோத்தபய ராஜபக்சே, ``ஹரின் பெர்னாண்டோ பேசிய விதத்தைப் பார்த்தீர்கள் அல்லவா. அதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆம், நான் நந்தசேன கோத்தபய தான். நந்தசேன கோத்தபயவுக்கு இரண்டு முகங்கள் உள்ளது. அதிபர் கோத்தபயவை விட, பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபய தான் தங்களுக்கு வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள். கடுமையாக இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படி என்னால் இருக்க முடியும். எங்கள் ஆட்சியில் எந்த பழிவாங்கும் குற்றங்களும் நடைபெறவில்லை. ஆனால், அவர்களின் ஆட்சியில் பல்வேறு குற்றங்கள் நடைபெற்றது. சட்டத்துக்கு முரணாக நான் நடந்திருந்தால், என் மீது சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளுங்கள்" என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ``போரின் போது எதிரிகள் என்னைக் குறிவைத்து தற்கொலை நடத்தினர். பிரபாகரன் தன் வேலையை ஆரம்பித்தார். இறுதியில் நந்திக்கடலில் இருந்து நாயைப் போன்று இழுத்து வந்தோம். அந்த நிலைமைக்கும் என்னால் கொண்டுவர முடியும். அனைத்துக்கும் தயாரானவன் நான். தற்போது மக்களுக்கு பணியாற்றுவதே எனது தேவை. எதிர்க்கட்சிகள் போன்று மோசமான அரசியல் செய்ய எனக்கு விருப்பம் இல்லை" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்‌சே தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஹரின் பெர்னாண்டோ பாதுகாப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்த பேச்சுக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/international/gotabhaya-rajapaksa-controversy-statement-over-prabakaran-death

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக