ஷிவானியின் வெளியேற்றத்திற்குப்பிறகு போட்டியாளர்களின் எண்ணிக்கை அறுவராகக் குறைந்திருக்கிறது. இரண்டு பெண்கள், நான்கு ஆண்கள். மூன்று பெண்களாக இருந்திருந்தால் பாலின நோக்கில் சமமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இறுதிக்கட்ட போட்டிகள் உடல் பலத்தை மட்டும் கோராமல் மூளைத்திறனையையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
இந்த சீஸனில் சீக்ரெட் ரூம், இரண்டாம் கட்ட வைல்ட் கார்ட் எண்ட்ரி போன்ற சில விஷயங்கள் நிகழவில்லை. அதெல்லாம் நிகழ்ந்திருந்தால் இன்னமும் சுவாரஸ்யம் கூடியிருக்கும். கடந்த சீஸன்களின் போட்டியாளர்கள், இப்போதையை போட்டியாளர்களை வாழ்த்துவதற்காக கொரானோ நடைமுறை சிரமங்களைத் தாண்டி வீட்டிற்குள் வந்தால் நன்றாக இருக்கும். வருவார்களா?
ஓகே... நாள் 98-ல் என்ன நடந்தது?!
உறுத்தாத சந்தன நிறத்தில் கோட் அணிந்து வந்தார் கமல். டை வித்தியாசமாக இருந்தது. மரம் மற்றும் உலாகத்தால் ஆனதாம். ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் தான் அணிந்திருக்கும் டையிலேயே வாயைத் துடைத்துக் கொள்வார் விவேக். அதைப் போல கமல் அணிந்திருக்கும் டை பாணியை பள்ளி மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தினால் அவசரத்திற்கு பேப்பரில் மார்ஜின் போட ஸ்கேலாக அது உதவும். (இப்படில்லாம் நிறைய ஐடியா எனக்குத் தோணும்... யார் கேக்குறா?!).
"செல்போன் விக்கறவணும் லாபம் சம்பாதிக்கறான். செருப்பு விக்கிறவணும் பணக்காரனாகிறான்... ஆனா நமக்கு சோறு போடுற விவசாயி நொடிஞ்சு போறானே... ஏன்?" என்கிற ஆதாரமான அவலத்தை கேள்வியாக முன்வைத்த கமல் ‘பொங்கல் வாழ்த்துகளை’ தெரிவித்தார்.
‘காலர் ஆஃப் தி வீக்கில்’ கார்த்திக் என்றொருவர் அழைத்தார். இவரின் குரலைக் கவனித்தால் இயக்குநர் வசந்த்தின் குரல் போலவே இருந்தது. இப்படி வருகிறவர்கள் முதலில் ‘உலக நாயகன்’ என்று ஆரம்பித்து கமலைப் புகழ்ந்தால்தான் அனுமதியே தருவார்கள் போலிருக்கிறது. இவரும் அப்படி ஆரம்பித்து, "அனைத்து தலைமுறையினருக்கும் உங்கள் அறிவுரை என்ன?” என்று கேட்க, "நேர்மை... சாக்ரடீஸ் காலத்துல இருந்து ஆரி பகவான் இருக்கும் சமகாலம் வரைக்கும் அதுதான் அவசியமான தேவை" என்றார் கமல். (ஆரிதான் வின்னர்-ன்ற குறியீடோ இது?!).
வந்த காலர் ஆரியை நோக்கி துணிச்சலாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டார். (ஆரி ஆதரவாளர்களை நினைச்சு உங்களுக்கு பயம் வரலையா பிரதர்?!) “மத்தவங்களை தகுதிப்படுத்தறேன்னு ஊரு முழுக்க குறை சொல்றீங்களே பிரதர். உங்ககிட்ட குறையில்லையா?” என்பதுதான் கார்த்திக்கின் கேள்வி. “என்கிட்ட இருக்குற குறையை யாராவது சுட்டிக் காண்பிச்சா... மாத்திக்க முயல்வேன், மன்னிப்பு கேட்பேன்" என்றார் ஆரி.
மீண்டும் கமலை நோக்கி வண்டியைத் திருப்பிய கார்த்திக், ‘விருமாண்டி’ படத்தைப் பற்றிய நினைவுகளை எழுப்பி விட, "நான் வெச்ச செல்லப் பெயர் ‘சண்டியர்’தான். அந்தப் பெயர்லதான் கூப்பிடுவேன்" என்று அடம்பிடித்தார் கமல். கலைஞர்களின் சுதந்திரம் பறிபோகக்கூடாது என்பது உண்மைதான். ஆனால் தன்னுடைய கலை முயற்சியால் சமூகத்தின் அமைதி பாழ்படுகிறது என்றால் அது குறித்த சுயப்பொறுப்பும் கவனமும் கலைஞர்களுக்கும் இருக்க வேண்டும்.
மற்றபடி தொழில்நுட்ப அளவிலும் சரி. திரைக்கதை அமைப்பிலும் சரி ‘விருமாண்டி’ ஓர் உன்னதமான முயற்சி என்பதில் சந்தேகமில்லை. ‘live sound’ என்னும் நுட்பம் தமிழ் சினிமாவிற்கு இதன் மூலம்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. கமல் இது போல் பல விஷயங்களை தமிழ் சினிமாவிற்குத் தந்திருக்கிறார். ‘ரஷோமான் உத்தி’யில் அமைந்த திரைக்கதை என்பதையும் கூடவே சொல்லியிருக்கலாம்.
'விருமாண்டி' படப்பிடிப்பு அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்ட கமல், "சாரி... அதுல கொஞ்சம் மூழ்கிட்டேன்" என்று பிக்பாஸிற்கு திரும்பி வந்தார். "பரவால்ல சார்... உங்க மூலமா பழைய விஷயங்களைத் தெரிஞ்சக்கறது நல்லா இருக்கு" என்று போட்டியாளர்கள் நெகிழ்ந்தார்கள்.
"பிக்பாஸ் டைட்டில் வின் பண்ணா என்ன பேசுவீங்க?” என்பதுதான் போட்டியாளர்களிடம் கமல் வைத்த கேள்வி. இதுவொரு சம்பிரதாயம். ‘அதுக்குண்டான பரிசுப்பணத்தை முதலில் கையில கொடுத்துட்டு அப்புறம் இந்தக் கேள்வியைக் கேளுங்க’ என்று யாரும் கோக்குமாக்காக கேட்பதில்லை. எனவே ‘நான் பிரதமர் ஆனால்’ என்று பள்ளிக்கூட கட்டுரையை போட்டியாளர்கள் எழுத ஆரம்பித்தார்கள்.
"எனக்கு சந்தோஷமா இருக்கு. சமயங்கள்ல எனக்கே என் மேல நம்பிக்கையா இருந்ததில்ல. ஆனா நீங்க என்னை நம்பினது மகிழ்ச்சி. தப்பு இருந்தா திருத்திப்பேன். நல்ல விஷயங்களை வெச்சுப்பேன்" என்றார் ரியோ. "நான் நானா இருந்தேன்" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் சோம். "இது மக்களின் வெற்றி" என்று முழங்கினார் ஆரி. "என்னையும் மதிச்சு ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி" என்றார் கேபி. அதையே வழிமொழிந்தார் ஷிவானி.
"என் அடையாளத்திற்காகத்தான் இங்கே வந்தேன். ஜெயிக்கணும்னு நெனக்கல. அப்படி நெனச்சா கேமை வேற மாதிரி விளையாடியிருப்பேன். நான் நானாத்தான் இங்க இருந்தேன். என்னோட கோபத்தையெல்லாம் மன்னிச்சு ஜெயிக்க வெச்சிருக்கீங்கன்னா. உங்களோட பிரதிபலிப்பாதான் என்னைப் பார்த்திருக்கீங்க போல. உங்களில் ஒருவனா என்னை நினைச்சதுக்கு நன்றி" என்று ஆத்மார்த்தமாக பேசினார் பாலாஜி. (பயபுள்ள இப்படில்லாம் பேசித்தான் நம்மளை கவுத்திருது!).
“ஒருத்தருக்கு நம்மளை பிடிச்சாலே சந்தோஷமா இருக்கும். கோடிப் பேரு பார்த்து பிடிச்சு வாக்களிக்கிறாங்கன்னா அது பெரிய விஷயம். பிக்பாஸ் என்னோட ஏரியா கிடையாது. நான் ஒரு பிரைவேட் பர்ஸன். இருந்தாலும் தாக்குப் பிடிச்சு தத்தி தத்தி வந்திருக்கேன்" என்று புன்னகைத்தார் ரம்யா. (மேற்பத்தியின் அடைப்புக் குறியில் சொல்லியிருப்பதை அப்படியே இங்கு நகல் செய்து கொள்ளலாம்).
“ரியோ... உங்க முழியே சரியில்லையே... சரியாச் சொல்லாம போயிட்டோம்னு வருத்தப்படாதீங்க. அரியர் எழுத சான்ஸ் தர்றேன். மறுபடியும் எக்ஸாம் எழுதறீங்களா?” என்று கமல் கேட்க "போதும் சார்... நான் பார்டர்ல பாஸ் ஆனதே சந்தோஷம்" என்று அமர்ந்து விட்டார் ரியோ.
"சரி... ஒருத்தரைக் காப்பாத்தலாம்னு தோணுது. ஒரு சிறிய இடைவேளை –ன்னு சொல்லட்டுமா?” என்று கமல் வழக்கமான விளையாட்டு காண்பிக்க, "பிரேக்ன்னு வேணா சொல்லுங்க சார்..." என்று மொக்கை போட்ட ரம்யாவை ‘அடியேய். சும்மா இருந்து தொலையேண்டி’ என்பது போல் இதர போட்டியாளர்கள் கொலைவெறியுடன் பார்த்தார்கள்.
"என்ன பாலாஜி... செளக்கியமா?” என்று கமல் விசாரிக்க, பாலாஜி திருதிருவென்று விழிக்க, "நீதான்யா சேவ்..." என்றார் கமல். ஆரியைப் போலவே பாலாஜியும் கீழே விழுந்து மண்ணைத் தொட்டு எழுந்தார். பிறகு குழந்தை போல் கேவிக் கேவி அழ ஆரம்பித்தார். மற்றவர்கள் பாலாஜியைத் தேற்றி வாழ்த்து சொன்னார்கள். "என் நல்லதுல்லாம் மறைஞ்சு மக்கள் என்னை கெட்டவன்னு நெனச்சிடுவாங்களோன்னு பயமா இருந்தது. இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு" என்று தன் அழுகைக்கான காரணத்தைச் சொன்னார் பாலாஜி.
"மன்னிப்பு கேட்கற குணம்தான் பெரிசு... நீ என்கிட்ட ரெண்டாவது முறை கிஸ் வாங்கியிருக்கே" என்று கணக்கு சொன்னார் ஆரி. (சோம் சொன்னது உண்மைதான் போல. இந்த சீஸனின் ரியல் லவ் ஸ்டோரி பாலாஜி –ஆரிதான்).
அகம் டிவி வழியாக திரும்பி வந்த கமல், "தை மாசம் வருது... போன வாரம் ஒருத்தர் குடுமியை ஒருத்தர் பிடிச்சு நல்லா ஏர் உழுதீங்க. இந்த வாரம் என்ன அறுவடை பண்ணப் போறீங்க? உங்ககிட்ட இருக்கற நல்ல/கெட்ட குணங்கள் என்னென்ன?” என்று பட்டியல் கேட்க ஆரம்பித்தார்.
ரியோவிலிருந்து ஆரம்பிக்காமல், ‘அவர் யோசிக்க நேரம் வேண்டும்’ என்பதால் இம்முறை ரம்யாவிலிருந்து ஆரம்பித்தார் போலிருக்கிறது. "நாமினேஷனுக்கு யோசிக்கறதுதான் பெரிய கஷ்டம். இன்னொருத்தர் கிட்ட இருக்க குறையைத் தேடி சொல்றது எனக்குப் பிடிக்காத விஷயம்” என்றார் ரம்யா. (இதை அந்த தவில் அடிக்கறவன் காதுல விழற மாதிரி சத்தமா சொல்லுங்க!). “அந்தக் குறையை விட்டுட்டுப் போயிடுவேன். எடுத்துட்டுப் போறதுன்னா... என்கிட்ட இருக்கற குறையை யாராவது சுட்டிக் காட்டினா அதை மாத்திக்க முயல்வேன்" என்று சொல்லி முடித்தார் ரம்யா.
"ஓ... விதையும் அதுவே... களையும் அதுவே" என்று ரம்யா சொல்லியதை சுருக்கமாக ‘ட்வீட்’ மொழியில் எழுதிக் காட்டினார் கமல்.
"கோபம்தான் என் பிரச்னை. அதை விட்டுட்டுப் போவேன்" என்ற பாலாஜி அதைத் தொடர்ந்து, "Unity in diversity-ன்றதை இனி ஃபாலோ பண்ணுவேன்" என்றெல்லாம் இஷ்டத்திற்கு அடித்து விட ‘அமாவாசை... நீயா பேசறது?' என்று நமக்குத்தான் ஆச்சர்யமாக இருந்தது. இது கூட பரவாயில்லை. இதையும் விட, "ஆரி சொன்ன ஆலோசனைப் படி ஊர்ல நிலம் வாங்கி விவசாயம் பண்ணப் போறேன்" என்று பாலாஜியின் உதார்கள் தொடர்ந்த போது ‘அமாவாசை... இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல’ என்று நாம்தான் அலற வேண்டியிருந்தது.
"பொறுமையை எடுத்துட்டு போவேன்" என்றார் ஷிவானி.
"கேள்வி கேக்கறதை விடமாட்டேன் சார். அது என் சமூகக் கடமை சார்… வெளியே போனாலும் கேள்வி கேட்டுட்டுதான் இருப்பேன். ‘என் கேள்விக்கென்ன பதில்?’ன்ற பாட்டுதான் எனக்குப் பிடிச்ச பாட்டு’" என்றெல்லாம் கேள்வியின் நாயகனாக முழங்கிய ஆரி, "சுருக்கமா சொல்ல கத்துப்பேன்" என்ற போதுதான் சற்று ஆறுதலாக இருந்தது.
"பொதுவா எனக்கு அழுகை வராது. ஆனா இங்க வந்து அழுதிருக்கேன். இனி அழுவதைக் கத்துப்பேன்" என்று வித்தியாசமாக சொன்னார் சோம். இதற்கு மறுமொழியாக, "இது நல்ல விஷயம். வெள்ளைக்காரன்தான் அழறதுக்கு வெட்கப்படுவான்" என்று கமல் சொன்ன தகவல் சரியா என்று தெரியவில்லை. பொதுவிடங்களில் அழுவதற்கு மேற்கத்திய மக்கள், குறிப்பாக ஆண்கள் கூச்சப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் இங்கோ அழுவது, ‘ஆண்களுக்கு இழுக்கு’ என்று மீசையை முறுக்கிக் கொண்டு நிற்பார்கள். ஆனால் உள்ளே ஆறாக அழுகை ஓடிக் கொண்டிருக்கும்.
"ஒருத்தர எனக்குப் பிடிக்கலைன்னா அவங்க கிட்ட இருந்து தள்ளிப் போயிடுவேன். அதுதான் என் வழக்கமா இருந்தது. பிக்பாஸ் வந்தப்புறம் அவங்க கிட்டயும் நெருங்கிப் பார்த்தா நல்ல விஷயங்கள் இருக்கும்ன்றதை தெரிஞ்சுக்கிட்டேன்" என்று ‘பின்பற்ற வேண்டியதாக’ ரியோ சொன்னது மிக முக்கியமான விஷயம். அடிக்கோடிட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டியது. ‘துஷ்டரைக் கண்டால் தூர விலகு’ என்பது நல்ல விஷயம்தான். ஆனால் துஷ்டர்களிடமும் சில நற்குணங்கள் இருப்பதைக் கண்டுபிடித்து பாராட்டலாம்.
"பத்து பைசாக்கு பிரயோசனமில்லை. எனவே கோபத்தை கட்டுப்படுத்தி வெடிக்கறதை விட அப்பப்ப வெளிப்படுத்தி விடலாம்னு இருக்கேன்" என்று ரியோ சொன்னதற்கு, ‘Store up the Anger’ என்னும் ஆப்பிரிக்க நாவலை உதாரணம் காட்டிய கமல் "ஆத்திரத்தை தேக்கி வைத்துக் கொள்வது ஒரு நல்ல உத்தி" என்று உபதேசித்தார். "‘ரெளத்திரம் பழகு’ன்னு பாரதி இதைத்தான் சொன்னார். அவரு வீட்டுக்கு சமீபத்தில் போயிருந்தேன். அதுவொரு நல்ல அனுபவம்’ என்று சிலாகித்து மகிழ்ந்தார் கமல்.
‘மக்களே... இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை. இவிய்ங்க சொல்றதை நம்பாதீங்க’ என்று கவுண்டமணி அலறுவதைப் போல மக்கள் இந்தப் பகுதியில் தங்களின் நற்குணங்களைப் பட்டியலிடும் போது நாமும் உள்ளுக்குள் அலற வேண்டியிருந்தது.
‘நான் பிரதமர் ஆனால்….’ என்கிற கட்டுரையைத் தொடர்ந்து ‘நான் விடுமுறைக்குச் சென்றிருந்த போது…’ என்னும் ஹோம்ஒர்க்கை பிள்ளைகளுக்குத் தந்தார் கமல் என்னும் ஆசிரியர். ‘பிக்பாஸ் முடிஞ்சப்புறம் முதல்ல என்ன பண்ணுவீங்க?’ என்பதுதான் கேள்வி.
"பாடி மசாஜ் வேணும்" என்றார் ரம்யா. "வெவசாயம் பண்ணப் போறேன்" என்ற பாலாஜி. (அமாவாசை நம்பற மாதிரி சொல்லேன்). "கோவா போகப் போறேன் சார்..." என்று தொடர்ந்தார். (ம்... இது நம்புற மாதிரி இருக்கு!). "மகளைப் பார்க்கணும்" என்று நெகிழ்ந்தார் ஆரி. (தங்க மீன்கள்). "சாப்பிட்டுட்டு காட்டுக்குள்ள போயிடணும் சார்" என்றார் ரியோ. ('அங்கேயே செட்டில் ஆயிடுங்க’ என்பது எதிர்ஆர்மியின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்).
"நீங்கள்லாம் நல்ல பசங்க. செல்போன் வேணும்னு ஒருத்தர் கூட கேட்கலை பார்த்தீங்களா. அங்க நிக்கறீங்க” என்று சிலாகித்து மகிழ்ந்தார் கமல். (கமல் இவ்வளவு அப்பாவியாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இவங்க வெளியே போனவுடனே முதல் வேலையா அதைத்தான் பண்ணப் போறாங்க. அது Default-ஆன விஷயம்ன்றதால ‘இதையெல்லாமா சொல்றது?”-ன்னு விட்டிருப்பாங்க. என்னதான் மாரல் கிளாஸ்ன்னாலும் இவ்ளோ டிராமா தேவையா வாத்தியாரே?!)
“ஓகே... காப்பாற்றப்பட்டவர்கள்லாம் சேர்ந்து உக்காருங்க" என்று கமல் சொன்னதும் ரியோ பரிதாபமாக எழுந்து நாமினேஷன் வரிசையில் அமரப் போக... “ரியோ... நீங்க அங்கயே உக்காருங்க" என்றார் கமல் (ட்விஸ்ட் கொடுக்கறாராமாம்). எதிர்பார்த்தபடியே ரியோவின் வெற்றியை அன்புக்கூட்டணி குதூகலித்து மகிழ்ந்தது. ரியோவிற்கு முத்தமெல்லாம் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார் பாலாஜி.
கமல் இடைவேளை விட்டுச் சென்றவுடன், "நான் ஃபைனலுக்கு வரமாட்டேன்னு சொன்னவன் எவண்டா? இப்ப வந்து லைன்ல நில்லுங்க" என்று ஜாலியாக சவடால் விட்டார் ரியோ. "என் பேரு இன்னமும் வரலையே" என்று கேபி ஆதங்கப்பட ரம்யாவும் ஷிவானியும் கவலை தோய்ந்த முகத்துடன் வெளியே உலவிக் கொண்டிருந்தார்கள். (ஷிவானி கண்லலாம் தண்ணி!).
‘வாரம் ஒரு புத்தகம்’ பகுதியில் தேனி சீருடையான் எழுதிய ‘நிறங்களின் மொழி’ என்கிற நூலை அறிமுகப்படுத்தினார் கமல். தனது அற்புதமான ஓவியங்களின் மூலம் இந்தப் படைப்புக் கூட்டணியில் இணைந்திருப்பவர் மனோகர் தேவதாஸ். எழுத்தாளர் தேனி சீருடையான் கடந்து வந்த பாதை என்பது துயரப்படுகுழிகளால் நிறைந்தது. அவல நகைச்சுவையில் தோய்ந்தது.
மிக மிக வறுமையான பின்னணியில் சிரமப்பட்ட சீருடையானுக்கு இளமைப்பருவத்தில் பார்வை பறிபோனது. மிக எளிமையான சிகிச்சையின் மூலம் சரி செய்து விட்டிருக்கக்கூடிய குறைதான் அது. ஆனால் வறுமை அதற்கு இடங்கொடுக்கவில்லை. பார்வையற்றோர் பள்ளியில் படித்து கல்வி பெற்றவருக்கு பிறகு ஒரு நல்லவரின் வழிகாட்டுதலில் பார்வை திரும்பியிருக்கிறது. ஆனால் ‘பார்வையற்றோர் பள்ளியில் படித்துப் பெற்ற சான்றிதழ்’ என்பதால் அது செல்லாததாகி விட்டது. அதனால் பணி கிடைப்பதும் சிரமமாகி விட்டது. இருமுனை துயரத்தில் தவித்தவருக்குப் பார்வை திரும்பினாலும் கஷ்டம் தீரவில்லை. எனவே சாலையில் வேர்க்கடலை விற்கும் தந்தையின் தொழிலை தானும் ஏற்ற சீருடையான் பின்பு பழக்கடை வைக்கும் அளவிற்கு சிறிது முன்னேறினார்.
இளமையில் பார்வை பறிபோனாலும் நிறங்களை மங்கலாக காணும் திறன் மட்டும் அவருக்கு மிஞ்சியிருந்தது. அதைக் கொண்டு அவர் படைத்த உலகம்தான் ‘நிறங்களின் மொழி’. சீருடையான் கடந்த வந்த துன்பங்களைக் காணும் போது நம்முடைய துன்பமெல்லாம் தூசு என்றே தோன்றுகிறது.
புத்தக அறிமுகத்தை முடித்து விட்டு டிஜிட்டல் பார்வையாளர்களைத் துரத்தி விட்டு எவிக்ஷன் சடங்கிற்கு வந்தார் கமல். ‘பெட்டி வந்திருச்சே’ என்று கத்துவது போல ‘கார்டு வந்திருச்சு’ என்று டென்ஷனை மறைத்துக் கொண்டு ஜாலியாக கத்தினார் ரம்யா. முப்பெரும் தேவியர் போல ரம்யா, ஷிவானி, கேபி அமர்ந்திருந்தாலும் மூவரின் முகங்களிலும் டென்ஷன் வழிந்தது. குறிப்பாக ஷிவானியின் முகத்தில் கலக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.
‘இந்த மூன்று பெண்களில் யார் காப்பாற்றப்படுவார்-ன்னு நெனக்கறீங்க?” என்று ஆண் போட்டியாளர்களிடம் கேட்ட போது அவர்கள் சுத்தி சுத்தி எதையோ சொன்னார்களே தவிர நேரடி பதில் தரவில்லை. ‘சரி போங்கப்பா…’ என்று நொந்து போன கமல், ரம்யா காப்பாற்றப்பட்ட செய்தியை அறிவித்தபோது அம்மணிக்கு பல்லெல்லாம் வாய்.
பிறகு சற்று பில்டப் தந்த கமல், வெளியேற்றப்படவிருக்கிறவரின் பெயராக ஷிவானியின் கார்டை காட்டிய போது அதை எதிர்பார்த்தது போல் தோளைக் குலுக்கினார் ஷிவானி. ஒரு பதற்றமான செய்திக்குக் காத்திருக்கும் நேரம்தான் கொடுமையானது. அதை அறிய நேரும் போது உள்ளுக்குள் ஏற்படும் ஆசுவாசம் இருக்கிறதே... ஆஹா... அந்தப் பரவசம் ஷிவானியின் கண்களில் தெரிந்தது.
‘உன்னை நெனச்சு பெருமைப்படறேன்’ என்று கின்னஸ் சாதனையாளரை வாழ்த்துவது போல் ஷிவானியை வாழ்த்தினார் பாலாஜி. பிறகு குடுகுடுவென்று ஓடிச் சென்று செடியில் இருந்து பூவைக் கொண்டு வந்து அசத்தினார். (அம்மா பார்க்கறாங்க!) கலங்கிய முகத்துடன் இருந்தாலும் புன்னகையை அதன் மேல் பூசிக் கொண்டு வெளியேற முனைந்த ஷிவானியை ‘சிங்கப்பெண்ணே’ பாடலைப் பாடி இதர போட்டியாளர்கள் உற்சாகப்படுத்த முயன்றார்கள். ‘போதும்ப்பா... விடுங்க’ என்று கூச்சப்பட்டார் ஷிவானி. தான் தவற விட்ட காயினை ஷிவானியின் காலருகே இருந்து எடுத்துக் கொண்டார் பாலாஜி. (இவரு பெரிய தேவயானி... சரத்குமார் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கறாரு!).
"இதுவரைக்கும் சும்மாத்தான் இருந்தா. ஆனா வெளியே போறப்ப கஷ்டமான டாஸ்க்ல சாதிச்சிட்டா..." என்று ஷிவானியின் பெருமையை பிறகு பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘கரகாட்டக்காரி போஸ்ல வந்தீங்க’ என்று ரம்யாவை கமல் முன்பு கிண்டல் அடித்திருந்ததாலோ என்னமோ. ‘கரகாட்டக்காரன் – பார்ட்-2’ எடுத்தா எப்படியிருக்கும்... என்று ரம்யா குழு பேசிக் கொண்டிருந்தது சுவாரஸ்யமான கிண்டல் உரையாடலாக அமைந்தது. ‘கோவை சரளா’ கேரக்டர் யாருக்கு’ என்று கேட்டு எல்லோரும் கேபியைத் திரும்பிப் பார்த்தது அட்டகாசமான நகைச்சுவை. பாலாஜிதான் மைனர் குஞ்சுவாம். இது சோமுவின் ஆலோசனை.
மேடைக்கு வந்தவரை ‘ஷிவானி’ என்று உரிமையுடன் சற்று அதட்டியே கூப்பிட்டார் கமல். "பரவால்ல... அம்மா என்ன ஆசைப்பட்டாங்களோ. அதைக் கடைசில செஞ்சிட்டீங்க. ஆக்ஷன் காட்சில அசத்திட்டீங்க..." என்று பாராட்டிய கமல், "ரெண்டு வாரம் முன்னாடியே அம்மா வந்திருந்தா நல்லாயிருந்திருக்குமோ" என்று சொன்னது நல்ல நையாண்டி.
‘இப்ப உங்க அம்மா சந்தோஷப்பட்டிருப்பாங்கள்ல’ என்று மகிழ்ந்தார் கமல். ஷிவானி பயப்படுகிறாரோ, இல்லையோ... கமல்தான் அந்த அம்மணியை நினைத்து அதிகம் பயப்படுகிறார் போலிருக்கிறது. "19 வயசுதான். இருந்தாலும் நல்ல குணம் உங்க கிட்ட இருக்கு. யாரையும் புண்படுத்தாதது. அம்மா வந்து திட்டினப்ப கூட நீங்க எதிர்த்து ஒரு வார்த்தை பேசலை. நீங்க சண்டை போட்டிருந்தா நல்லாயிருந்திருக்காது" என்று முன்பு சொன்னதையே இப்போதும் பாராட்டாகச் சொல்லி மகிழ்ந்தார் கமல். (ஒருவேளை ஃபைட் சீனை எதிர்பார்த்தாரோ?!).
“இங்க வரும் போது எதையும் யோசிக்கலை. ஜாலியா இருக்கலாம்னு வந்தேன். (?!). பொறுமையா இருக்கறதைக் கத்துக்கிட்டேன்” என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னார் ஷிவானி. "ஆனா... அல்மோஸ்ட் வெற்றிக்கு கிட்ட வந்துட்டு வெளியே போறீங்க" என்று கமல் சொன்னதுக்கு "அதான் மனசுக்கு கஷ்டமாயிருக்கு" என்றார். (நீங்க இத்தனை நாள் இருந்ததே ஆச்சர்யம்தான்).
ஷிவானியின் பயண வீடியோ ஒளிபரப்பானது. அவரின் குரலில் ‘இஞ்ஞாயி’ என்று கேட்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்திருப்பார்கள். எனவே எடிட்டர் ஏமாற்றவில்லை. வீடியோவில் தான் வரும் காட்சிகளைப் பார்த்து பல இடங்களில் சிரித்தும் கலங்கியும் நவரசங்களை வெளிப்படுத்தினார் ஷிவானி.
"உன்னோட AVல சண்டைக்காட்சியே இருந்திருக்காதே?!” என்று பிறகு கிண்டலடித்தார் ஆரி. "இருந்தது. ரெண்டு இருந்தது" என்று பெருமையுடன் சொன்னார் ஷிவானி. "உங்களுக்கு நான் என்னத்த சொல்றது. ஹேப்பியா இருங்க" என்று சக போட்டியாளர்களை வாழ்த்திய ஷிவானியை, "பெரிய நட்சத்திரமாக வர வாழ்த்துகள்" என்று வழியனுப்பி வைத்தார் கமல்.
‘அக்கடா’ என்று கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போட்டியாளர்கள் திடீரென்று தொலைக்காட்சியில் கமல் வந்ததைப் பார்த்ததும் பதறியடித்துக் கொண்டு எழுந்தார்கள். "ஒண்ணுமில்ல... நடுவுல உங்களைப் பார்க்க முடியாது. பொங்கல் வாழ்த்துகள்" என்று சொல்லி விட்டு போனார் கமல். (இதுக்கா சாமி... மறுபடியும் வந்து பயமுறுத்தினீங்க!).
"ஷிவானி சரியாக விளையாடாமல் அப்படியே சென்றிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். கடைசி வாரத்தில் முழு முயற்சியையும் இட்டு விட்டு சென்றிருப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது" என்று வித்தியாசமாக யோசித்து பாலாஜி பேச "கடைசியிலாவது அவ முயற்சி பண்ணதுதான் நல்லது. அப்பதான் வீட்லயும் சந்தோஷப்படுவாங்க" என்று சரியான காரணத்தைச் சொல்லி ஆறுதல் சொன்னார் ரம்யா.
"நாங்க வாக்கிங்லாம் போவோம்... எனக்கு மேக்கப்லாம் போடுவா... பாவம். ஃபைனல் மேடைல இருக்கணும்னு ஆசைப்பட்டா” என்று தன் தோழியின் பிரிவை எண்ணி அனத்தினார் ரம்யா. "ரொம்ப பொறுமையான பொண்ணு" என்று பாலாஜியும் கூடவே புலம்பினார்.
எடை பார்க்கும் இயந்திரம் என்றொரு வஸ்து முன்பெல்லாம் திரையரங்குகளில் வணிகக் கட்டிடங்களில் இருக்கும். மக்கள் அந்த கார்டில் வரும் எடையைக் கவனிக்கிறார்களோ, இல்லையோ, அதில் அச்சிடப்பட்டிருக்கும் ‘ஆருட வாக்கியங்களுக்காகவே’ காசு போடுபவர்கள் அதிகம் இருப்பார்கள். உண்மையில் அந்த மெஷின் ஜோசியம் எல்லாம் பார்க்காது. அச்சிடப்பட்ட கார்டு Random ஆக வரும். இது மக்களுக்குத் தெரியும். என்றாலும் அதற்கு சந்தோஷப்படுவதில் ஒரு ‘இது’.
கமல் நடித்த ‘சத்யா’ திரைப்படத்தில் இந்த விஷயத்தை நன்றாக கிண்டல் செய்திருப்பார்கள். கமல் ஒரு குப்பைக்கூடையை எடுத்து எடை மெஷினின் மீது வைக்க ‘உங்கள் காதல் விரைவில் கைகூடும்’ என்கிற சீட்டு வரும். இதைப் போலவே பிக்பாஸ் வீட்டு வாசலில் ஒரு மெஷின் வைக்கப்பட்டிருக்க, மக்கள் தங்களின் ஜோசிய வாக்கியங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள்.
"பிக்பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார்?” என்கிற ஜோசியத்தை அந்த இயந்திரம் சரியாகச் சொல்லும் என்றால் நிகழ்ச்சி இந்த வாரமே முடிந்திருக்கும். ம்... விதி வலியது!
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/shivani-evicted-bigg-boss-tamil-season-4-day-98-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக