Ad

சனி, 2 ஜனவரி, 2021

அடிமனைப் பிரச்னை: `50,000 ஓட்டுகளும் நோட்டோவுக்குத்தான்!’ ஸ்ரீரங்கம் மக்கள் ஆவேசம்

`ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்திவருகிறோம் என முதல்வர் எடப்பாடி சொல்கிறார். ஆனால், ஜெயலலிதா வாக்குறுதி அளித்த ஸ்ரீரங்கம் அடிமனைப் பிரச்னையை மட்டும் ஏன் எடப்பாடி பேசவில்லை' என்று மக்கள் ஆதங்கப்படுவதோடு, `இந்தத் திட்டத்தை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், ஐம்பதாயிரம் வாக்குகளை நோட்டாவுக்குப் போடுவோம்’ என்கிறார்கள்.

முதல்வர் வருகைக்காகக் காத்திருக்கும் மக்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள்களாகத் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். அந்த வகையில், கடந்த 30-ம் தேதி திருச்சி மாவட்டம், தொட்டியம், முசிறி, துறையூர், மணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டார்.

தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தந்து, ரங்கநாதர் மற்றும் ரங்கநாயகி தாயாரை தரிசித்துவிட்டு, பின்னர் ராஜகோபுரம் எதிரே பொது மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அப்போது முதல்வர் பேசுகையில்,``அம்மா இந்தத் தொகுதிக்காகப் பல திட்டங்களை அறிவித்திருக்கிறார். அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்திவருகிறோம். அத்தோடு ஸ்ரீரங்கம் தொகுதிக்குப் பல ஆயிரம் கோடி அளவுக்குத் திட்டங்களை அறிவித்தார். அவை அனைத்தையும் செயல்படுத்தியிருக்கிறோம்" என்றார். மிகவும் எதிர்பார்ப்புடன் தமிழக முதல்வர் பேச்சைக் கேட்க வந்த ஸ்ரீரங்கம் மக்கள், அடிமனைப் பிரச்னை குறித்து அவர் ஒரு வார்த்தைகூடப் பேசாமலிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக ஆவேசப்படுகிறார்கள்.

ஸ்ரீரங்கம் அடிமனை உரிமை மீட்புக்குழு அரங்கமா நகர் நலச் சங்கத்தின் தலைவர் ஹேமநாதனிடம் பேசினோம். ``ஸ்ரீரங்கம் தொகுதியைப் பொறுத்தவரை, பத்தாயிரம் குடும்பங்களுக்கு மேலாக இந்தப் பகுதியில் வாழ்ந்துவருகிறோம்.

அரங்கமா நகர் நலச் சங்கத்தின் தலைவர் ஹேமநாதன்

நாங்கள் வசிக்கும் இடத்துக்கான ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன. நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லையென்றும், இவை அனைத்தும் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலம் எனக் கூறி கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு பல வருடங்களாக நீடித்துவரும் நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிமனைப் பிரச்னையைத் தீர்ப்போம் எனத் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அந்த வாக்குறுதியை, `அம்மாவழியில் செயல்பட்டுவருகிறோம்’ எனக் கூறிவரும் அ.தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசாமலிருந்தது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.

பிரசார மேடையில் முதல்வர்

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஒன்றரை மாத காலத்துக்குள் அடிமனைப் பிரச்னை குறித்துத் தீர்வு காணாவிட்டால், ஸ்ரீரங்கம் தொகுதியிலுள்ள 50,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கக்கூடிய நிலை வந்துவிடும். எனவே, இந்தப் பிரச்னையை விரைந்து தீர்க்க முதல்வர் பரிசீலிக்க வேண்டும். இல்லையேல், கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்றார் ஆவேசமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/srirangam-people-urges-cm-eps-to-resolve-adimanai-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக