யூ டியூப் சேனல்கள் புற்றீசல்கள் போல முளைத்துவிட்டன. கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் வீடியோவை எடுத்து தங்களின் யூ டியூப் சேனல்களில் பதிவிடுவதைப் பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இவ்வாறு பதிவிடப்படும் வீடியோக்கள் வைரலாக வேண்டும் என கருதும் சிலர், எல்லைமீறி செயல்படுகின்றனர். இந்தநிலையில் குறிப்பிட்ட யூடியூப் சேனல் மீது சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் பொது இடத்தில் பெண்களிடம் ஆபாசமாகப் பேட்டி எடுத்த அந்த யூடியூப் சேனல், வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றையும் அவர் காவல் நிலையத்தில் கொடுத்தார்.
புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட யூ டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கும்படி அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவிட்டார். இதையடுத்து யூ டியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் (31) மற்றும் ஊழியர்கள் ஆசின் பத்சா (23), அஜய்பாபு (24) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது 4 பிரிவின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார் கூறுகையில், ``நீலாங்கரை, திருவான்மியூர் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்க தீவிர ரோந்து பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read: கேரளா: தரக்குறைவான வீடியோ... யூடியூப் சேனல் நிர்வாகியை வீடுபுகுந்து தாக்கிய பெண்கள்!
சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எலியட்ஸ் பீச் பகுதியில் விடுமுறை நாள்களில் காலை, மாலை நேரங்களில் பொழுது போக்குக்காகவும் உடற்பயிற்சிக்காகவும் ஆண்கள், பெண்கள் வந்து செல்வதுண்டு. இந்தநிலையில் பெசன்ட் நகர் பகுதியில் பிராங்க் (prank) என்ற பெயரில் ஆபாசமாகப் பெண்களை நேர்காணல் செய்வதுபோல நகைச்சுவையாகத் தூண்டி அவர்களை ஆபாசமாகப் பேச வைத்து, அந்த வீடியோவை யூடியூப் சேனல் ஒன்றில் தினேஷ் (31) மற்றும் ஊழியர்கள் ஆசின் பத்சா (23), அஜய்பாபு (24) ஆகிய 3 பேரும் பதிவு செய்து வந்திருக்கின்றனர்.
ஆபாசமாகப் பேசுவதை பொதுமக்கள் தட்டிக்கேட்டால் அவர்களையும் இவர்கள் மிரட்டியிருக்கின்றனர். நல்லூர் பஜனைக் கோயில் பகுதியைச் சேர்ந்த தினேஷ், 2019-ம் ஆண்டு முதல் இந்த யூ டியூப் சேனலை நடத்திவருகிறார். பெருங்குடியைச் சேர்ந்த அஜய்பாபு கேமராமேனாகவும் நீலாங்கரையைச் சேர்ந்த ஆசின் பத்சா தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்திருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அந்த யூடியூப் சேனலில் பதிவு செய்திருக்கின்றனர். அதை 7 கோடி பொதுமக்கள் பார்வையிட்டிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்’’ என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-you-tube-channel-workers-over-abusive-content
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக