Ad

திங்கள், 11 ஜனவரி, 2021

மாற்றங்களோடு சித்தார்த்... குழப்பங்களோடு அபி... என்ன முடிவெடுப்பாள் இனி? #VallamaiTharayo

அபி பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வரும் சித்தார்த், `தெரியும் எனக்கு... இதெல்லாம் நடக்கும்னு சொல்லிட்டு’ என்கிறான். உடனே அபி அதிர்ச்சியோடு நிற்கிறாள். நான் ஒரு காலில் இருக்கேன், காபி கொடு என்றவுடன்தான் நிம்மதியாகிறாள் அபி!

இரவு... சித்தார்த்திடம் மகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறாள் அபி. காரணம் கேட்கும் அவனிடம், ``நீங்க குழந்தைகளை ரொம்ப நல்லா பார்த்துட்டீங்க. செகரட்டரி ஆன்ட்டிகிட்ட என்னை விட்டுக் கொடுக்காம பேசினீங்க. போன்ல கோபத்துல பேசினீங்களேன்னு பயந்துட்டே வந்தேன்... நீங்க கோபப்படவும் இல்லை. அதான் தேங்க்ஸ் சொல்லணும்னு தோணுச்சு” என்கிறாள் அபி.

Vallamai Tharayo

``இதெல்லாம் புதுசா இருக்கு. எங்கிட்ட ஏதாவது மறைக்கிறியா? `பாண்டிச்சேரி போய் சேர்ந்துட்டேன்'னு ஒரு மெசேஜ் போட்டியா? நல்லபடியா போனியான்னு எனக்குப் பதற்றமா இருக்காதா? குழந்தைங்க என்ன பண்றாங்கன்னு விசாரிச்சியா? நானா போன் பண்றப்பவும் எடுக்கல. அப்ப கோபம் வராதா? நான் என் குழந்தைகளைப் பார்த்துக்கறதுக்கு எதுக்கு நீ தேங்க்ஸ் சொல்றே? எனக்கும் பொறுப்பு இருக்கு. என்னை ஒரு மோசமானவனா எல்லார்கிட்டேயும் உருவாக்கி வச்சிருக்கே. அந்த மாதிரி ஆன்ட்டிகிட்டேயெல்லாம் உன்னை விட்டுக் கொடுப்பேன்னு எப்படி நினைக்கிறே?” என்று சித்தார்த் கேட்கிறான்.

அவன் கேள்விகளில் நியாயம் இருக்கவே செய்கிறது. ஓர் அப்பா தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கு எதற்கு நன்றி? சித்தார்த் இந்தக் கேள்வியைக் கேட்டது மிகப் பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது.

காலையில் அபி லேட்டாக எழுந்து வருகிறாள். அதற்குள் டிபன், லஞ்ச் எல்லாம் ரெடி செய்து, குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பிக்கொண்டிருக்கிறான் சித்தார்த். அதைப் பார்த்த அபி, பதறிப் போய் சாரி கேட்கிறாள்.

Vallamai Tharayo

``உன் பிளான்படிதானே போயிட்டிருக்கு. அப்புறம் எதுக்கு சாரி? நீ ஆபிஸ் போகணும். நான் இந்த வேலைகளைப் பார்த்துக்கணும். என் வீடு, என் பசங்க. நான் பார்த்துப்பேன்” என்கிறான் சித்தார்த்.

``உங்களுக்கு உதவியா இருக்கட்டுமேன்னுதான் நான் ஆபிஸ் போறேன். நீங்க இவ்வளவு கஷ்டப்படறீங்கன்னா, நான் ரிசைன் பண்ணிடறேன்” என்கிறாள் அபி.

``நீ வேலையை விட்டால் உன் கம்யூனிஸ்ட் அண்ணன் கொடி பிடிப்பான். உன் ஆபிஸ் ஃபிரெண்ட்ஸ் என்னைக் கேவலமா பார்ப்பாங்க. ஏற்கெனவே நீ எனக்கு வாங்கிக் கொடுத்த பேர் ரெண்டு ஜென்மத்துக்குத் தலையில் நிக்கும். நீ ஆபிஸ் கிளம்பு” என்கிறான் சித்தார்த்.

அபி ஆபிஸில் கெளதமைப் பார்க்கிறாள். அவன் `ஏதாவது பிரச்னையா' என்று கேட்கிறான். ``எனக்கு அவரைப் பார்க்கும்போது குற்றவுணர்வா இருக்கு. ரிசைன் பண்றேன்னுகூட சொன்னேன்” என்கிறாள்.

Vallamai Tharayo

தவறு செய்யாமல் எதற்காகக் குற்றவுணர்வு கொள்ள வேண்டும்? இது கெளதமையும் சங்கடப்படுத்தாதா? அபி தானும் குழம்பி எல்லோரையும் குழப்பிக்கொண்டிருக்கிறாளே!

அடுத்து என்ன?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-56

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக