Ad

வியாழன், 7 ஜனவரி, 2021

`19 எம்.எல்.ஏ-க்களில் 11 பேர் விலக முடிவு; கோமாவில் கட்சி!’ - பீகார் காங்கிரஸ் சலசலப்பு

பீகார் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட 11 எம்.எல்.ஏக்கள் உடனடியாக கட்சியை விட்டு விலகுவார்கள் என்று பீகார் மாநில காகிராஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பாரத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க- ஐக்கிய ஜனதா தள கூட்டணியானது அதிக அளவிலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணியமைத்து 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 19 இடங்களில் மட்டுமே வென்றது. ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணிக்கு உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் தொடக்கம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், பீகார் காங்கிரஸின் மூத்த தலைவர் பாரத் சிங்கின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரத் சிங்

அவர் கூறுகையில், ``காங்கிரஸின் 19 எம்.எல்.ஏ-க்களில் 11 பேர் கட்சியை விட்டு உடனடியாக விலகுவார்கள். அவர்கள் தொடக்கம் முதலே கட்சியில் இருந்த தொண்டர் இல்லை. தேர்தலுக்காக பணம் கொடுத்து எம்.எல்.ஏ சீட்டுகளை வாங்கியவர்கள். காங்கிரஸின் மாநிலத் தலைவரான மதன் மோகன் ஜாவும், மாநிலங்களவை உறுப்பினரான அகிலேஷ் பிரசாத் சிங், மூத்த தலைவர் சதானந்த் சிங் ஆகியோரும் கட்சியை விட்டு விலகக் கூடும். அவர்கள் கட்சிக்குள் இருந்துகொண்டே கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,``ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடனான கூட்டணியை நான் எப்போதும் எதிர்த்தே வந்தேன். இவர்களின் மூலம் கட்சியின் தலைமைக்கு பீகார் காங்கிரஸ் குறித்த தவறான கருத்துக்களே சொல்லப்பட்டு வந்துள்ளது. இது தற்போது வெளியாகியுள்ளது’’ என்று தெரிவித்தார்.

சோனியா காந்தி

பாரத் சிங்கின் கருத்து குறித்து பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன், ``பீகார் காங்கிரஸ் கோமாவில் இருக்கிறது என்பதையே பாரத் சிங்கின் கருத்துகள் காட்டுகின்றன. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கட்சி உடையாமல் பாதுகாக்க வேண்டும். இந்த பிரச்னைகளை அறிந்தே சக்திசிங் கோஹில், தனது பொறுப்பில் இருந்து விலகியிருப்பார் என்று நினைக்கிறேன்’’ என்று கூறினார்.

பீகார் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளராக இருந்த சக்திசிங் கோஹில், அந்தப் பொறுப்பிலிருந்து சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பீகார் காங்கிரஸ் பொறுப்புகளிலிருந்து சக்திசிங் கோஹிலை விடுவித்து அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் டெல்லி காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் சக்திசிங் கோஹில் தொடர்ந்து நீடிக்கிறார். அவருக்குக் கடந்த 4-ம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார்.



source https://www.vikatan.com/news/politics/11-of-the-19-mlas-could-leave-party-soon-says-congress-leader-in-bihar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக