Ad

திங்கள், 25 ஜனவரி, 2021

`10 நாடுகள்தான் உலகின் 95% தடுப்பூசியை பயன்படுத்துகின்றன!' - WHO சொல்வது என்ன?

உலகமே கொரோனாவிடம் சிக்கியுள்ள நிலையில், உலகளவில் மொத்தம் 10 நாடுகள்தான் கிட்டத்தட்ட 95% தடுப்பு மருந்தை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுதுவம் பரவி மக்களிடையே பெரும் இழப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. கொரோனாவைத் தடுக்கும் விதமாக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பல நாடுகளிலும் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

COVAXIN

தற்போது, இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு இந்த மாத தொடக்கத்தில் அனுமதி அளித்தது. இதனடிப்படையில், முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

பிரிட்டன், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள 'கோவிஷீல்டு' தடுப்பூசியை புனேவிலுள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்த தடுப்பூசியை வளரும் நாடுகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பு சீரம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகின் மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நாடான இந்தியா, தெற்காசியாவில் பல நாடுகளுக்கும் கோவிட் தடுப்பூசியை அனுப்ப முடிவெடுத்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை பூட்டான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து கோவிஷீல்டு தடுப்பூசி இலவசமாக அனுப்பிவைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் அந்த நாடுகளிலுள்ள சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்கு விரைவாக தடுப்பூசி போட முடியும், மேலும் கொரோனா பரவலும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது.

கடந்த ஜனவரி 20-ம் தேதி, முதற்கட்டமாக மாலத்தீவுக்கும் பூட்டானுக்கும் இந்தியா தடுப்பூசிகளை அனுப்பிவைத்தது. 1,50,000 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை பூட்டானுக்கும் 1,00,000 டோஸ்களை மாலத்தீவுக்கும் அனுப்பியது. அதை தொடர்ந்து அந்நாடுகள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல கடந்த வியாழன் அன்று, 2 மில்லியன் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியா வங்கதேசத்திடம் பரிசாக ஒப்படைத்தது. மேலும் வியாழன் அன்று நேப்பாளத்துக்கும் இந்தியா ஒரு மில்லியன் டோஸ்கள் தடுப்பூசியை ஒப்படைத்தது. மியான்மர், செஷில்ஸுக்கும் வெள்ளியன்று தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கைக்கு ஜனவரி 27-ம் தேதி தடுப்பூசிகள் அனுப்பப்படவுள்ளன. இந்நாடுகள் அனைத்து இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Corona Vaccine

இதற்கிடையில், இன்னோர் அதிர்ச்சித் தகவலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. உலகமே கொரோனாவிடம் சிக்கியிருந்தாலும் 10 பணக்கார நாடுகள்தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளை 95% அளவில் பயன்படுத்தி வருவதாகவும், ஏழை நாடுகளுக்கு தடுப்பு மருந்து கிடைக்காத நிலை இருப்பதாகவும் ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. உலகளவில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இஸ்ரேஸ், ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, இத்தாலி, துருக்கி, ஸ்பெயின் மற்றும் ரஷ்யாவில் தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருவதாக, ஆக்ஸ்ஃபோர்டு பலகலைக்கழகத்தின் தடுப்பூசி கண்காணிப்பு மையம் தெரிவிக்கிறது. எனவே, ஏழை நாடுகள் தடுப்பூசி பெற வளர்ந்த நாடுகள் உதவுமாறு ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசிகளுக்கு இந்நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கட்டும் தடுப்பூசி.

- ஆனந்தி ஜெயராமன்



source https://www.vikatan.com/government-and-politics/healthy/95-of-covid-vaccine-doses-limited-to-10-countries-says-who

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக