Ad

புதன், 23 டிசம்பர், 2020

``அன்றிரவு எனக்கும் சித்ராவுக்கும் சண்டை நடந்தது... ஆனால், காரணம்?!'' - ஹேமந்த் #VikatanExclusive

சித்ரா மரணத்தின் மர்ம முடிச்சுகள் எப்போது அவிழும் எனத் தமிழகமே தவித்துக்கொண்டிருக்கிறது. 'சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டார்' எனப் போலீஸ் அறிவித்தபிறகும் சித்ராவின் பெற்றோர், நண்பர்கள், சின்னத்திரை நடிகர்கள் எனப் பலரும் பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகிறார்கள். ''ஹேமந்த் அடித்துக்கொலை செய்துவிட்டார்'' என்பது சித்ரா தாயாரின் பகிரங்கமான குற்றச்சாடு.

சமூக ஊடகங்களில் பலரும் இப்படி நடந்திருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம் என யூகங்களின் அடிப்படையில் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், ஹோட்டல் அறையில் என்ன நடந்தது என்பது சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் மட்டுமே தெரியும். சித்ரா மரணித்துவிட்ட நிலையில் ஹோட்டல் அறையில் நடந்தது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஹேமந்த்துடன் பேச முயற்சிகள் எடுத்தோம். சிறையில் இருக்கும் ஹேமந்த்திடம் அவரது வழக்கறிஞர் மூலமாகப் பேசினோம். முதல்முறையாக விகடனிடம் அவர் தரப்பு விளக்கங்களை அளித்தார் ஹேமந்த்.

நடிகை சித்ரா

''சித்ரா உங்களுக்கு எப்போது, எப்படி அறிமுகமானார்?''

''2019... அதாவது போன வருஷம்தான் என்னுடைய சில நண்பர்கள் மூலமா சித்ரா எனக்கு அறிமுகமானாங்க. ரெண்டு பேருக்கும் பிடிச்சுப்போக கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தோம். ரெண்டு பேர் வீட்டிலும் விருப்பத்தைச் சொன்னோம். அவங்களும் சம்மதிக்கவே, ஊரறிய நிச்சயதார்த்தமும் நடந்தது.''

''சித்ரா அம்மாவுக்கும் உங்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகச் சொல்கிறார்களே?''

''எனக்கும் சித்ராவின் அம்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது உண்மைதான். நிச்சயதார்த்தம் முடிஞ்சப் பிறகு திடீர்னு ஒருநாள் அவங்க அம்மா என்னிடம், 'சித்ராவுக்கு நிறையக் கடன் இருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி அந்தக் கடனை அடைக்கணும். நீங்க பணம் தர முடியுமா' எனக் கேட்டார்கள். 'என்கிட்ட பணம் கிடையாது. எங்க அப்பாகிட்ட வேணும்னா கேட்டுப் பார்க்கிறேன்'னு சொன்னேன். அதுல இருந்தே சித்ரா அம்மாவுக்கு என்னைப் பிடிக்கலை. சித்ராகிட்ட என்னைப் பத்தி இல்லாததும் பொல்லாததுமா சொல்லத் தொடங்கினாங்க. 'இப்பவே பணம் இல்லைங்கிறான்; இவன் கூட என்னன்னு வாழப் போறியோ'னுலாம் பேசியிருக்காங்க. நான் பணம் தராத அந்த ஒரு காரணத்தாலேயே திருமணத்தை தள்ளிப் போட நினைச்சாங்க.''

''உங்களுக்கும், சித்ராவுக்கும் இடையே நிறைய சண்டைகள் வந்ததாகச் சொல்கிறார்களே?''

''இல்லவே இல்ல. சின்ன சின்ன வாக்குவாதங்கள்தான்.''

சித்ரா

''சீரியலில் நெருக்கமான காட்சிகள் வைக்கப்பட்டது தொடர்பாக அந்த சீரியல் சம்பந்தப்பட்டவர்களிடமோ, சித்ராவிடமோ நீங்கள் எதுவும் பேசினீர்களா?''

''சித்ராவிடமோ, சீரியல் யூனிட்டிலோ நான் எதுவுமே பேசலை. நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு சீரியல்ல நெருக்கமான காட்சிகள் வெச்சதுல சித்ராவுக்கே உடன்பாடில்லை. இதுதான் உண்மை. அதனால நான் சித்ரா அம்மாகிட்ட மட்டும் 'இதுபத்தி சேனல்கிட்ட பேச முடியுமா'னு கேட்டேன். அவங்களும் சேனலுக்குப் பேசினாங்கன்னு நினைக்கிறேன்.''

''அவசர அவசரமாகப் பதிவுத் திருமணம் செய்தது ஏன்?''

''சித்ரா அம்மா கேட்ட பணத்தை நான் தரலைனதும் அவங்க கல்யாணத்தைத் தள்ளிப் போட நினைச்சாங்க. அவங்கம்மா இப்படிப் பண்றது ஒருகட்டத்துல சித்ராவுக்கும் தெரியவர, சித்ராதான் 'உடனே திருமணத்தைப் பதிவு பண்ணிடுவோம்'னு சொன்னாங்க. உண்மையில் எங்க அப்பா, அம்மாவுக்கு இப்படி அவசரமா பதிவு திருமணம் பண்ணதுல உடன்பாடே இல்லை.''

சித்ரா, ஹேமந்த் ரவி

''உங்களுக்கு சில அரசியல்வாதிகள், அவர்களின் மகன்களுடன் தொடர்பு இருப்பதாகக் சொல்லப்படுகிறதே?''

''என்னுடைய சில நண்பர்களின் அப்பாக்கள் அரசியல்ல இருக்கலாம். அதனால யாருக்கு என்ன பிரச்னை?''

''போலீஸ் விசாரணையில் நீங்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறதே?''

''அப்படிச் சொல்வதில் உண்மை இல்லை.''

''உண்மையில் அந்த இரவு என்னதான் நடந்தது... சித்ராவை ஷூட்டிங் முடிந்து ஹோட்டலுக்கு அழைத்துவந்தது நீங்கள்தானா?''

''நான் கூட்டிட்டு வரலை. நான் ஹோட்டலில்தான் இருந்தேன். ஷூட்டிங் முடிஞ்சதும் அவங்களேதான் செல்ஃப் டிரைவ் பண்ணிட்டு ஹோட்டலுக்கு வந்தாங்க. வந்தவங்க நைட் 8 மணிக்கு அவங்க அம்மா போன் பண்ணதா சொன்னாங்க. 'அம்மா ஒண்ணு சொல்றாங்க; நீங்க ஒண்ணு சொல்றீங்க... என்னை யாருமே நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறீங்க'னு என்கிட்ட கோபமா கத்துனாங்க. பதிலுக்கு நானும் கோபமாகப் பேச எங்களுக்கிடையில் சின்னதா ஒரு வாக்குவாதம் வந்தது. தொடர்ந்து அங்க இருந்தா பிரச்னை பெருசாகிடுமோன்னு நினைச்சு நான் புகைப்பிடிக்க வெளியில் வந்துட்டேன். நான் வந்ததும் அவங்க உள்ள கதவைச் சாத்திக்கிட்டாங்க. இதுதான் நடந்தது.''

ஹேமந்த்

''உங்களது அப்பா 'சித்ராவின் மன அழுத்தத்துக்கு என் மகன் மட்டும் காரணமா இருக்க முடியாது' என்கிறாரே?''

''உண்மை கண்டுபிடிக்கப்படணும்னு அப்படிச் சொல்லியிருப்பார். எனக்கும் சித்ராவுக்கும் இடையில் சின்னப் பிரச்னை கூட இருந்ததில்லை என்பது மட்டும்தான் உண்மை.''

''நீங்களும் உங்களது பெற்றோரும் சித்ராவின் இறுதிச்சடங்கில் ஏன் கலந்துகொள்ளவில்லை?''

''சித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அங்கு நானும் என் பெற்றோரும் சென்றோம். அங்கு சித்ரா குடும்பமும் இருந்தது. ஆனால் சித்ராவின் அம்மா எங்கள் மீது புகார் தந்த பிறகு, மறுநாள் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள எங்களை போலீஸ்தான் அனுமதிக்கவில்லை. அங்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரலாம் எனச் சொல்லி அனுமதிக்க மறுத்து விட்டார்கள்.''



source https://cinema.vikatan.com/television/anchor-chithras-husband-hemanth-exclusive-interview-about-the-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக