உருப்படாத மகனுக்கும் கணவனுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படும் துர்கா, பொறுக்க முடியாமல் தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டார். அபி மிகவும் உடைந்து போகிறாள். ``பெத்தவங்களையோ கணவரையோ என்னை மாதிரி நீ சார்ந்து வாழக் கூடாது. உன்னுடைய தனித்திறமையை யாருக்காகவும் விட்டுக் கொடுத்துடாதே. தைரியமா இரு” என்று துர்கா சொன்ன விஷயங்களை அபி நினைத்துப் பார்க்கிறாள். துர்கா சொன்னதுபோலவே வாழ வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறாள்.
சித்தார்த் வரும்போது வீடு பூட்டியிருக்கிறது. தகவல் சொல்லாமல் எங்கே போயிருப்பாள் என்று போன் செய்கிறான். அழைப்பை கட் செய்த அபி, சாவி இருக்கும் இடத்தை மெசேஜ் செய்கிறாள். அவள் எங்கே போயிருக்கிறாள் என்று தெரியாததும் தன்னிடம் சொல்லாமல் போய்விட்டாளே என்கிற கோபமும் சேர்ந்து சித்தார்த்தை வழக்கம்போல ஆவேசம் கொள்ள வைத்துவிட்டன.
சற்று நேரத்தில் அபி வருகிறாள். காரணம் கேட்கிறான். இன்டர்வியூ போனதாகச் சொல்கிறாள். கிண்டலாக, ``பிபிஓவா? முதல் ரவுண்ட்லேயே ரிஜக்ட் பண்ணிருப்பாங்களே” என்று சித்தார்த் கேட்க, செலக்ட் ஆகிவிட்டதாகச் சொல்கிறாள் அபி.
அதிர்ச்சியடைந்த சித்தார்த், ``ஓ... பொண்ணுன உடனே வேலை கொடுத்துட்டாங்களா, ஆறாயிரம் சம்பளமா?” என்று கேட்க, 43,000 என்கிறாள் அபி.
தான் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக இருந்ததால் ஏமாற்றமடைந்த சித்தார்த், ``மேடம் வேலைக்குப் போகப் போறீங்க. என்னால யூஸ் இல்லைன்னு முடிவு பண்ணிட்டீங்க. ஹர்ஷிதா மூலம் வேலை வாங்கிருக்கே... அவளைப் பத்தி எவ்வளவு மோசமா சொன்னே? இப்ப உன்னையும் அப்படித்தான் எல்லோரும் பார்ப்பாங்க. எனக்கு நீ வேலைக்குப் போறதுகூட பிரச்னை இல்ல... அதுக்காக ஒரு டிராமா போட்டியே” என்று எரிந்து விழுகிறான்.
சொல்லாமல் இன்டர்வியூக்குப் போனதைக் குற்றமாகச் சொல்லும் சித்தார்த், சொன்னால் மட்டும் அனுப்பி வைத்துவிடுவானா? அப்போதும் இதே புராணத்தைத்தான் பாடிக்கொண்டிருப்பான். எப்படியோ சித்தார்த் புராணம்தான் பாடப் போகிறான், அதை இன்டர்வியூவுக்குப் போய்விட்டு வந்து கேட்டுக்கொள்ளலாம் என்று அபி நினைத்திருக்கலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை.
அடுத்து என்ன?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா
source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-28
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக