கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியான ஐந்தாம் அத்தியாயத்தைப் படித்துப் பார்த்த சந்தானம் என்கிற வாசகர் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அவர் கேட்ட கேள்வி இது: ``ஒருவர் வெளிநாட்டில் இருக்கும்போது அவர் எப்படி கடன் பெறுவது?’’ என்பதே அவர் கேட்ட கேள்வி.
இதற்கு நான் அளித்த பதில் இனி... ``வீட்டுக் கடன், வீட்டு அடமானக் கடன் என்றால் இந்தியாவுக்கு வராமலே இங்குள்ள உறவினர்கள், நண்பர்களுக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்து கடன் வாங்க முடியும். வீட்டுக் கடனை பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன. வீட்டு அடமானக் கடனை சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன. தனிநபர் கடன் போன்ற மற்றக் கடன்களை என்.ஆர்.ஐ-களுக்கு இங்குள்ள வங்கிகள் வழங்குவதில்லை.’’
கேள்வி கேட்ட சந்தானத்துக்கு வாழ்த்துகள். இந்தக் கட்டுரைத் தொடரை படிக்கும் வாசகர்கள் கடன் தொடர்பான கேள்விகள் கேட்டால், பதில் அளிக்கத் தயாராக இருக்கிறேன். இனி, ஆறாம் அத்தியாயத்துக்குள் நுழைவோம். உங்கள் கடன் விண்ணப்பத்தை வங்கிகள் எப்படி பரிசீலிக்கின்றன என்பதை இன்று விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
கடன் விண்ணப்ப எண்
இன்றைய தேதியில் பெரும்பாலான வங்கிகள் கடன் விண்ணப்பத்துடன் அதற்குரிய ஆவணங்களுடன் சேர்த்துக் கொடுத்த உடனேயே, அந்தக் கடன் விண்ணப்பத்தைக் கொண்டு கடன் வழங்குவதற்கான பரிசீலனையை செய்யத் தொடங்கிவிடுகின்றன. அப்படித் தொடங்கும்பட்சத்தில் தங்களின் மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புவார்கள். அந்தக் குறுஞ்செய்தியில் லாகின் நம்பர் (Login Number / Acknowledgement Number) அதாவது, கடன் விண்ணப்ப எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தக் கடன் விண்ணப்ப எண்ணை வைத்தே உங்களின் கடன் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்று நீங்கள் வங்கியில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
ஆவணங்கள் சரியாக இருத்தல் வேண்டும்
வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கடன் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்யத் தொடங்கிய பின் தங்களின் இருப்பிட விவரத்தையும், அலுவலகம் தொடர்பான விவரத்தையும் நேரடியாகச் சென்று சரிபார்ப்பார்கள். வங்கி அதிகாரிகள் அவ்வாறு செய்யும்போது தங்களின் வீட்டிலும் மற்றும் அலுவலகத்திலும் உங்களைப் பற்றிய சரியான தகவல்களைச் சொல்வது அவசியம். உங்களைப் பற்றிய தகவல்களைக் கூறும்போது அவை நீங்கள் அளித்துள்ள ஆவணங்களுடன் பொருந்திப்போவது அவசியம். இல்லையெனில், அந்த நிமிடமே உங்களின் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதேபோல், நீங்கள் கடனுக்காக விண்ணப்பிக்கும்போது கொடுத்த ஆவணங்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கச் செய்வார்கள். அதாவது, உங்களின் வங்கிக் கணக்கு அறிக்கை 12 மாதத்துக்குக் கொடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்தக் குறிப்பிட்ட வங்கிக்குச் சென்று நீங்கள் கொடுத்துள்ள வங்கிக் கணக்கு அறிக்கை உண்மையானதுதானா, அதில் உள்ள தகவல்கள் சரியானதுதானா என்று பார்ப்பார்கள்.
Also Read: வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்கிறீங்களா... இந்த கே.ஒய்.சி பிரச்னைகளை தெரிஞ்சுக்கோங்க! #LoanVenumaSir -5
ஜாமீன் கையெழுத்து
எல்லா வகை கடன்களிலும் கடன் விண்ணப்பதாரரான நீங்களும் உங்களின் ரத்த சம்பந்தமான உறவு ஒருவரும் கடன் விண்ணப்பப் படிவத்திலும், கடன் ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட வேண்டும். அவ்வாறு கையெழுத்து போடும் நபர், கடனுக்கு உத்தரவாதம் அளிப்பவராகவும் (Guarantor), இணைக் கடன் விண்ணப்பதாரர் (Co-applicant) ஆகவும் கருதப்படுவார்.
கடனுக்கு உத்தரவாதம் அளித்தவர், கடனுக்கான இணை விண்ணப்பதாரர் - இவை இரண்டுக்கும் சட்டரீதியாக சில வேறுபாடுகள் இருப்பினும், நீங்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்தாதபட்சத்தில், கடனுக்கு உத்தரவாதம் அளித்த நபரிடமிருந்து கடனை வசூலிக்கும் நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கோள்ளும்.
எந்த வகையான கடன்களை நீங்கள் பெற்றிருந்தாலும் உங்களுக்குக் கடன் வழங்கிய வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வழங்கல் கடிதத்தையும், மாதாந்தரத் தவணை அட்டவணையையும் மற்றும் கடன் ஒப்பந்த நகலையும் மறக்காமல் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். கடன் வழங்கியதிலோ, கடனை திருப்பிச் செலுத்துவதிலோ ஏதாவது பிரச்னைகள் ஏற்படுமாயின் இந்த ஆவணங்களை வைத்தே தீர்வு காண வேண்டியிருக்கும்.
கேள்விக்கு பதில் சொல்லுங்க
இந்த அத்தியாயத்தைப் படித்து முடிக்கும் முன் இந்தக் கேள்விக்கான பதிலை கமென்ட் பகுதியில் சொல்லுங்கள்.
தனிநபர் கடன் எங்கு வாங்கினால் வட்டி குறைவாக இருக்கும்?
1. பொதுத் துறை வங்கிகள்
2. தனியார் துறை வங்கிகள்
3. வங்கிசாரா நிதி நிறுவனங்கள்
4. தனியார் நிதி நிறுவனங்கள்
இதற்கான பதிலையும், கடன் குறித்த கூடுதல் வழிகாட்டுதல்களையும் வரும் செவ்வாய்க்கிழமை தொடரில் பார்ப்போம்.
- வாங்குவோம்
source https://www.vikatan.com/business/banking/how-banks-are-processing-your-loan-application-loan-venuma-sir-6
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக