ஜெயலலிதா... தமிழ் சினிமாவின் பொற்காலங்களில் ஒன்றான அறுபதுகளில்தான் நடிகையாக உள்ளே நுழைந்தார். எம்ஜியாரும், சிவாஜியும் முழுவீச்சில் வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது.
எம்ஜியார், ப.நீலகண்டன், கே. சங்கர் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து வெற்றிகரமான 'ஃபார்முலா' படங்களைக் கொடுத்து வந்தார். சிவாஜி கணேசன், பீம்சிங் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பா வரிசை படங்களை (பாசமலர், பாவமன்னிப்பு போன்ற) கொடுத்து வந்தார். இயக்குநர் ஸ்ரீதர் அப்போதைய வழக்கத்தில் இருந்து ஒரு இயக்குநரின் படம் என்று தனித்துத் தெரியும் வகையில் அவருக்கான பிரத்யேக காட்சி அமைப்புகள், வசனம், இசை என தனிக்கவனம் செலுத்தி படங்களை இயக்கி வந்தார்.
கே. பாலசந்தரும் தன் பயணத்தை அறுபதுகளில்தான் துவங்கியிருந்தார். இதுபோக ஸ்க்ரிப்ட் சார்ந்த இயக்குநர் கே. கோபாலகிருஷ்ணன் தன் பங்கிற்கு 'சித்தி', 'கற்பகம்' என அட்டகாசப் படங்களை கொடுத்து வந்தார். இவர்கள் போக ஏ.பி. நாகராஜன் 'திருவிளையாடல்' போன்ற புராணப் படங்களை இயக்கி தன் பங்கிற்கு தமிழ் சினிமாவை அலங்கரித்துக் கொண்டிருந்தார். எஸ்.எஸ். வாசன் அவர்களின் ஜெமினி, ஏவிஎம், விஜயா வாகினி போன்ற தயாரிப்பு நிறுவனங்களும் ஏராளமான படங்களை இந்தக் காலகட்டத்தில் தயாரித்து வந்தன. தேவர் பிலிம்ஸ், மேகலா பிக்சர்ஸ் போன்ற பட்ஜெட் படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனங்களும் தொடர்ச்சியாகப் பல படங்களை தயாரித்து வெளியிட்டார்கள்.
இந்தக் கலைஞர்களுக்கெல்லாம் திரைப்படத்துறைக்கு உள்ளே நுழையும் கருவியாக இருந்தது நாடகங்கள்தான். ஒரு நாடகத்தில் சிறப்பாக நடிப்பதன் மூலம் படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கண்ணில் பட்டு அவர்களை தங்கள் திறமையால் கவர்ந்து வாய்ப்பு பெறுவதுதான் அப்போது முக்கிய வழியாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் சென்னையில் ஏராள நாடக கம்பெனிகள் இயங்கி வந்தன. கே.பாலசந்தர், சோ ராமசாமி, ஒய்.ஜி பார்த்தசாரதி போன்றோர் தொடர்ச்சியாக நாடகங்களை நடத்தி வந்தார்கள். ஜெயலலிதாவின் தாயாரான சந்தியா சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டினாலும் இதுபோன்ற நாடக கம்பெனிகளில்தான் அதிகளவில் நடித்து வந்தார்.
ஜெயலலிதாவும் இதைப் பின்பற்றி சோ, ஒய்.ஜி. பார்த்தசாரதி போன்றோரின் நாடகங்களில் பள்ளியில் நடிக்கும்போதே நடிக்க ஆரம்பித்தார். அப்போது தென்னக சினிமாவின் தலைமையகமாக சென்னைதான் விளங்கியது. ஏராளமான தெலுங்கு படங்கள் இங்கே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சில கன்னட படங்களும். இதனால் சென்னையில் இருந்த ஜெயலலிதாவுக்கு சில தெலுங்கு, கன்னட படங்களில் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி விடுமுறையில் இப்படங்களில் நடித்தார்.
1965-ம் ஆண்டு, இயக்குநர் ஸ்ரீதர் புதுமுகங்களை வைத்து 'வெண்ணிற ஆடை' என்ற படத்தை தொடங்கினார். அதில் நிர்மலா, மூர்த்தி ஆகியோர் அறிமுகமானார்கள். இன்னொரு நாயகி வேடத்திற்கு ஹேமமாலினி வரவழைக்கப்பட்டு ஸ்க்ரீன் டெஸ்ட்டில் நிராகரிக்கப்பட்டார். பின்னர் அந்த வேடத்திற்குத்தான் 16 வயது ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். 'வெண்ணிற ஆடை' வெற்றி பெற்றது. நிர்மலாவும், மூர்த்தியும் 'வெண்ணிற ஆடை' என்ற பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்டார்கள். ஆனால் ஜெயலலிதா அந்த அடைமொழியைப் பெறவில்லை. அதையெல்லாம் தாண்டி அவர் பலப்பல அடைமொழிகளைப் பெறுவார் என மற்றவர்களுக்குத் தோன்றியதோ என்னவோ! தன் முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார் ஜெயலலிதா.
'வெண்ணிற ஆடை' வெற்றிக்குப் பின் ஜெயலிதாவிற்கு மிகப்பெரிய ஏற்றமாக அமைந்தது 'ஆயிரத்தில் ஒருவன்'. சிவாஜிகணேசனை வைத்துப் பல படங்களை இயக்கிய பி.ஆர் பந்துலு எம்ஜியாரை வைத்து இயக்கிய முதல் படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. அதில் கன்னித்தீவு இளவரசி வேடத்தில் நடித்தார் ஜெயலலிதா. அப்போது எம்ஜியார் மிகப்பெரிய நாயகன். ஆனால் 17 வயது ஜெயலலிதா அவருக்கு இணையான நடிப்பை வழங்கி அந்த கேரக்டரை நிலைநிறுத்தியிருந்தார்.
ராஜா ராணி கால சரித்திர படமான 'ஆயிரத்தில் ஒருவன்' இந்தக் கால 'பாகுபலி' போல பெரு வெற்றி அடைந்த படம். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்குப் பின்னர் ஜெயலலிதாவிற்கு ஏறுமுகம்தான். எம்ஜியாருடன் 'குடியிருந்த கோயில்', 'ரகசிய போலீஸ் 115', 'அடிமைப் பெண்', சிவாஜி கணேசனுடன் 'பட்டிக்காடா பட்டணமா', 'கலாட்டா கல்யாணம்' எனக் கிட்டத்தட்ட 15-க்கும் அதிகமான படங்கள், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் என அப்போதிருந்த அடுத்த நிலை நடிகர்களுடனும் நிறையப் படங்கள் என தமிழ்சினிமாவை ஆட்சி செய்தார் ஜெயலலிதா. தெலுங்கிலும் என் டி ஆர், நாகேஸ்வர ராவ் போன்ற முன்னணி நடிகர்களுடனும், கிருஷ்ணா, சோபன்பாபு போன்ற அடுத்த நிலை நடிகர்களுடனும் பல வெற்றிப்படங்களில் நடித்தார். கன்னடத்திலும் பல வெற்றிப்படங்கள். நடிக்க வந்த முதல் 10 ஆண்டுகளில் பல மொழி வெற்றிப்படங்களின் மூலம் முக்கிய தென் இந்திய திரை நட்சத்திரமாக மாறினார் ஜெயலலிதா. இவர் ஏற்று நடித்த பல்வேறு கேரக்டர்களின் மூலம் ஏராளமான தமிழக மக்களின் அபிமானத்தையும் பெற்றார்.
எப்படி அறுபதுகளில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களிடையே கடும் போட்டி இருந்ததோ அதேபோல நடிகைகளிடமும் கடும் போட்டி இருந்தது. பானுமதி, வைஜெயந்தி மாலா உச்சத்தில் இருந்தார்கள். இதில் வைஜெயந்திமாலா இந்திக்குப் போய் இருந்தார். பானுமதியும் ஃபீல்டில் இருந்தார். பத்மினி, சாவித்திரி, தேவிகா ஆகியோரும் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்தார்கள். ஜெயலலிதாவிற்கு சில வருடங்கள் முன் அறிமுகமாயிருந்த சரோஜா தேவி, கே.ஆர் விஜயா ஆகியோர் தங்கள் கரியரின் உச்சத்தில் இருந்தனர். ஜெயலலிதாவிற்குப் பின் அறிமுகமான லதா, மஞ்சுளா போன்றோரும் கடும் போட்டியை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இத்தனை பேரையும் மீறி ஜெயலலிதா தனக்கான வெற்றிகளைக் குவித்தார். அவர் கணக்கில் ஏராளமான வெள்ளிவிழா படங்கள் இருந்தன. பெருவாரியான திரைத் துறையினரின் முதல் தேர்வாக ஜெயலலிதா இருந்தார். அதற்கு முக்கிய காரணம் எந்த கேரக்டரையும் ஏற்று நடித்து அதைச் சிறப்பிக்கும் திறமை அவருக்கு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் துடுக்குத்தனமான நவநாகரீகப் பெண் வேடத்திற்கு போட்டியே இல்லாத தேர்வாக ஜெயலலிதா இருந்தார். அவர் இயல்பே அதுதான் என்பதால் அதை மிகச்சிறப்பாக செய்தார். இளவரசி வேடமும் அவருக்கு கனகச்சிதமாகப் பொருந்தும். அதற்கேற்ற தோற்றம், தோரணை, குரல் எல்லாம் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. அதே சமயம் நடுத்தர குடும்பப் பெண் வேடம், அப்பாவி கிராமத்துப் பெண் வேடம் போன்றவற்றையும் சிறப்பாகவே செய்தார். இந்த பன்முகத்தன்மைதான் அவரை திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக நிலை நிறுத்தியது.
'ராமன் தேடிய சீதை' படத்தில் ஜெயலலிதாவுக்கு, எம்ஜியாரை பல வேடங்கள் போட்டு ஏமாற்றும் கதாபாத்திரம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வேடங்கள். அனாயாசமாக அதைச் செய்திருப்பார். முத்துராமனுடன் நடித்த 'சூரியகாந்தி' திரைப்படத்தில் வேலைக்குச் செல்லும் பெண் உரிமையில் நம்பிக்கை கொண்ட கதாபாத்திரம். அதையும் செம்மையாக செய்திருப்பார். அதற்காக பெரியாரின் பாராட்டையும் பெற்றார்.
நகைச்சுவை வேடங்களும் அவருக்கு எளிதுதான். 'கலாட்டா கல்யாணம்' போன்ற படங்களில் கலக்கியிருப்பார். வழக்கமான கவர்ச்சி கதாநாயகி வேடங்கள் சொல்லவே வேண்டாம். ஏராளம்! அதிலும் சிறப்புற நடித்திருப்பார். இது தவிர மனநிலை பாதிக்கப்பட்ட வேடங்களிலும் வித்தியாசமாக நடித்திருக்கிறார் ஜெயலலிதா. 'நவரத்தினம்', 'எங்கிருந்தோ வந்தாள்' போன்ற படங்களில் அந்த வித்தியாசத்தைக் காட்டியிருப்பார். எந்த வகை வேடமாக இருந்தாலும் சரி, எந்த நாயகர்களுடன் நடித்தாலும் சரி, ஜெயலலிதா தனித்து தன் திறமையைக் காட்டத் தவறியதேயில்லை.
1970-களின் மத்தி வரை ஜெயலலிதா வெற்றிகரமான கதாநாயகியாக இருந்தார். பின்னர் பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரய்யா போன்ற புதிய அலை இயக்குநர்கள் வர ஆரம்பித்தார்கள். ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா போன்ற நாயகிகளின் வருகை, கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் தலைதூக்கல் தொடங்கியதும் ஜெயலலிதாவின் நாயகி அந்துஸ்து குறையத் தொடங்கியது. இனி இரண்டாம் நாயகி, சகோதரி, அம்மா கேரக்டர்களில் தான் நடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதுபோல சில குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1980-ல் ரஜினியின் 'பில்லா' படத்தில் அவருக்கு நெருக்கமான தயாரிப்பாளர் பாலாஜியால் ஸ்ரீபிரியா நடித்த வேடத்திற்கு முதலில் நடிக்க அழைக்கப்பட்டார். ஆனால், ஜெயலலிதா கடைசியில் நடிக்கவில்லை. அதே ஆண்டில் அவர் நடித்த 'நதியை தேடி வந்த கடல்' அவரின் கடைசிப் படமாயிற்று.
அவர் உச்சத்தில் இருந்த பத்தாண்டுகளில் அவர் சேர்ந்து நடிக்காத பெரிய நடிகர்கள் இல்லை, வித்தியாச வேடங்கள் இல்லை. எந்தக் காட்சியிலும் அவர் தன் கதாபாத்திரத்தை மீறி நடித்ததில்லை. அந்த கேரக்டருக்கு எவ்வளவு நடிக்க வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இருந்தது. ஒரு காட்சியில் மற்றவர்களை மீறி தன்னை கவனிக்க வைக்கும் திறமையும் அவரிடம் இருந்தது. எந்த மொழித் திரைப்படமாக இருந்தாலும் அந்தக் கலாசாரத்திற்கு ஏற்ப, மொழிக்கு ஏற்ப முன் தயாரிப்பு செய்து பாவனைகளை கொடுக்கக்கூடியவர். இந்தத் திறமைகள்தான் அவருக்கு தென் இந்திய திரைத்துறையிலும் பொது மக்களிடையேயும் பெரிய மரியாதையைப் பெற்றுக் கொடுத்தது.
தமிழக அரசியலில் மட்டுமல்ல, தமிழக சினிமா உலகிலும் தவிர்க்கமுடியாத பிம்பம் ஜெயலலிதா! அவரின் நான்காம் நினைவு நாள் இன்று!
source https://cinema.vikatan.com/tamil-cinema/how-jayalalithaa-ruled-the-cinema-industry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக