Ad

வெள்ளி, 4 டிசம்பர், 2020

இந்த 8 தொகுதிகளில் ஜெயிச்சா கோட்டையில் கொடி பறக்குமா?#TNElection2021

பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகள் எப்படியோ அப்படித்தான் அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல். எப்படியாவது முட்டி மோதி மக்கள் மனங்களை வென்று, பதவிகளைப் பிடித்து கோட்டையில் கொடியேற்றிவிட வேண்டும் என்கிற கனவு அனைத்துக் கட்சிகளுக்குமே இருக்கும். மக்கள் அளிக்கும் வாக்குகளே அரசியல்வாதிகளுக்கான மதிப்பெண்கள். அதைப் பெறுவதற்கு விதவிதமான யுக்திகளை தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் கையாள்வர்.. அதேபோல, இந்த ஊரில் இருந்துதான் பிரசாரம் தொடங்கவேண்டும், இந்த இடத்தில்தான் முடிக்க வேண்டும், இந்தக் காரில்தான் பிரசாரம் செல்லவேண்டும் இந்தக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் பொதுக்கூட்டம் நடத்தவேண்டும். என அரசியல்வாதிகளுக்குப் பல சென்டிமென்ட்கள் இருக்கும்.

தேர்தல் பிரசாரம்

அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, சில தொகுதிகளுக்கே அப்படி சென்டிமென்ட் கதைகள் உண்டு. இந்தத் தொகுதியில் வெற்றிபெறும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமரும் என்கிற சென்டிமென்ட் அதில் முதன்மையானது. அப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள, 234 தொகுதிகளில் எவ்வளவு தொகுதிகள் இருக்கின்றன என ஒரு ஜாலி கணக்கெடுப்பை நடத்தினோம்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 2011 தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு உருவான தொகுதிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோல. ஒரு கணக்குக்காக திராவிடக் கட்சிகள் தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த 1967 முதல் கடந்த 2016 வரை தேர்தல் முடிவுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டோம். அப்படிப் பார்க்கையில் மொத்தமாக ஆரணி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, நாமக்கல், இராமநாதபுரம், மொடக்குறிச்சி என மொத்தமாக ஏழு தொகுதிகளில் எந்தக் கட்சியின் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறதோ, அந்தக் கட்சிதான் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதிலும், சங்ககிரி, வீரபாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் நேரடியாகவே எந்தக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறதோ அந்தக் கட்சிதான் மாநிலத்தில் ஆட்சியையும் பிடித்திருக்கிறது. இனி ஒவ்வொரு தொகுதியாக விரிவாகப் பார்ப்போம்.

அண்ணா

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி. ஆரணி நகராட்சி, கண்ணமங்கலம் பேரூராட்சி, ஆரணி வட்டத்தில் உள்ள பல ஊராட்சிகள், செய்யாறு வட்டத்தில் உள்ள பல கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி இது. 1967 முதல் 2006 வரை நேரடியாகவே தி.மு.க, அ.தி.மு.க என ஆளும் கட்சியாக யார் வருகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றிருக்கின்றனர். 2011 தேர்தலில் மட்டும், அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்பட்டு, அந்தக் கட்சியின் சார்பாக பாபு முருகவேல் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். 2016-ல் பழையபடி அ.தி.மு.க வேட்பாளரே வெற்றி பெற்றிருக்கிறார்.

மேட்டூர்:

சேலம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி இது. மேட்டூர் நகராட்சி, மேச்சேரி, கொளத்தூர், வீரக்கல்புதூர் பி.என்.பட்டி ஆகிய பேரூராட்சிகளையும், மேட்டூர் தாலுகாவுக்குட்பட்ட பல கிராமங்களையும் உள்ளடக்கிய தொகுதி இது. இந்தத் தொகுதியில், 1967 மற்றும் 1971-ல் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த பிரஜா சோசலிசக் கட்சியும், 1977,80,84 ஆகிய மூன்று தேர்தல்களில் நேரடியாக அ.தி.மு.கவும், 1989-ல் தி.மு.க கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பிறகு 91-ல் அ.தி.மு.க, 96-ல் தி.மு.க, 2001-ல் அ.தி.மு.கவும் அடுத்ததாக, 2006-ல் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.கவும், 2011-ல் அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த தே,.மு.தி.கவும் கடைசியாக 2016-ல் நேரடியாக அ.தி.மு.கவும் வெற்றி பெற்றிருக்கின்றன. 1967-ல் இருந்து 2016 வரை மொத்தமாக நடந்த 12 தேர்தல்களில், 7 தேர்தல்களில் நேரடியாக, ஆட்சியைப் பிடித்த கட்சிகளும் ஐந்து முறை ஆட்சியைப் பிடித்த கட்சிகளின் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி. நாமக்கல் நகராட்சி, பெரியப்பட்டி மற்றும் மோகனூர் (பேரூராட்சி மற்றும் நாமக்கல் வட்டத்தில் உள்ள பல கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி இது. இந்தத் தொகுதியில், 1967-1996 வரை, மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளும், 2001 மற்றும் 2006-ல் காங்கிரஸ் கட்சியும்( முறையே அ.தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி), 2011 மற்றும் 2016-ல் நேரடியாக அ.தி.மு.கவும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இராமநாதபுரம்:

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி. இராமநாதபுரம் நகராட்சி, கீழ்க்கரை மண்டபம் பேரூராட்சி மற்றும் இராமநாதபுரம் தாலுகா, இராமேஸ்வரம் தாலுகாவை உள்ளடக்கிய பல கிராமங்களைக் கொண்ட தொகுதி இது. 1967-2001 வரை முறை, மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த கட்சிகளே நேரடியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றன. 2006-ல் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட ஹசன் அலியும், 2011-ல் அ.தி.மு.க கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் வெற்றி பெற்றிருக்கின்றனர். 2016-ல் நேரடியாக ஆட்சியைப் பிடித்த அ.தி.மு.கவே வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தொகுதியில் போட்ட்யிட்டு வெற்றி பெற்ற டாக்டர் மணிகண்டன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமநாதபுரம் தொகுதி

மொடக்குறிச்சி:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி. அவல்பூந்துறை, மொடக்குறிச்சி , பாசூர், அரச்சலூர், வடுகப்பட்டி, கிளாம்பட்டி, வெள்ளோட்டம்பரப்பு , சிவகிரி ,கந்தசாமிபாளையம் ஊஞ்சலூர் , வெங்கம்பூர், கொடுமுடி மற்றும் சென்னசமுத்திரம் ஆகிய பேரூராட்சிகளையும் ஈரோடு வட்டத்தில் பல கிராமங்களையும் உள்ளடக்குய தொகுதி. இந்தத் தொகுதியில்,1967-ல் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற சங்கத சோசலிசக் கட்சியும், 2006-ல் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் என ஆட்சியைப் பிடித்த கட்சிகளின் கூட்டணிக் கட்சிகளும் 1971,77,80,84,89,91,96,2001,2011,16 ஆகிய 10 தேர்தல்களில் நேரடியாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க என மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த கட்சிகள் நேரடியாகப் போட்டியிட்டும் வெற்றி பெற்றிருக்கின்றன.

Also Read: ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல்: `ட்ரம்ப் மட்டும்தான் பாக்கி!’ - பா.ஜ.க-வைச் சீண்டும் ஒவைசி

சங்ககிரி:

சேலம் மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதி. தாரமங்கலம் பேரூராட்சி, சங்ககிரி மற்றும் ஓமலூர் வட்டத்தில் உள்ள பல கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. இது இந்தத் தொகுதியில், 1967 முதல் 2016 வரை நேரடியாக மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த தி.மு.க அல்லது அ.தி.மு.க தான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றன. தமிழகத்தில் இரண்டு தொகுதிகள் மட்டுமே இத்தகய சிறப்புக்குச் சொந்தமுடையவை அதில் ஒன்று சங்ககிரி.

வீரபாண்டி:

இதுவும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியே. இந்தத் தொகுதியில், பனமரத்துப்பட்டி இளம்பிள்ளை ஆட்டையாம்பட்டி மல்லூர் ஆகிய பேரூராட்சிகளையும் சேலம் தாலுகாவில் உள்ள பல கிராமங்களையும் உள்ளடக்கிய தொகுதி இது. இந்தத் தொகுதியிலும், 1967 முதல் 2016 வரை நேரடியாக மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த தி.மு.க அல்லது அ.தி.மு.க தான் நேரடியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றன. தமிழகத்தில் இத்தகய சிறப்புக்குரிய தொகுதிகளில் இரண்டாவது தொகுதி இது. இரண்டுமே சேலம் மாவட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரியன்

வேடசந்தூர்:

இதுதவிர, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியிலும், மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சி அல்லது அதன் கூட்டணிக் கட்சிதான் வெற்றி பெற்றிருக்கிறது. 1977-ல் இந்தத் தொகுதி உருவாகியிருக்கிறது. தொடர்ந்து, 2006 தவிர மற்ற அனைத்துத் தேர்தல்களிலும், அ.தி.மு.க, தி.மு.க என மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. 2006-ல் மட்டும் அப்போது ஆட்சியைப் பிடித்த தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது.

இதுகுறித்துப் பத்திரிகையாளர் பிரியன் பேசும்போது

''இந்தத் தொகுதிகளில் வெல்லும் கட்சிகள், மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப்பதற்குச் சிறப்புக் காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இது மிகவும் இயல்பாக நடப்பது என்றே நினைக்கிறேன்'' என்கிறார் பத்திரிகையாளர் பிரியன். அதனால், அரசியல்வாதிகளே இந்த எட்டு தொகுதிகளில் மட்டும் உங்கள் கவனத்தைச் செலுத்தாமல், ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் தீயாக வேலை செய்யுங்கள்...



source https://www.vikatan.com/government-and-politics/politics/political-beliefs-in-tn-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக