இந்தியத் திரையுலகில் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையைப் பெற்றவர் விஜயசாந்தி. இவர் நடித்த நேரடித் தெலுங்குப் படங்கள் பலவும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வெற்றிகளைக் குவித்தன. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, டோலிவுட் சென்றவர் ஒருகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். 1990-களின் தொடக்கத்தில், இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் சினிமா நட்சத்திரங்கள் பட்டியலில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இருவரையும் தொடர்ந்து மூன்றாம் இடம் பிடித்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகர்களையே மிரளச் செய்தவர்.
சினிமாவில் புகழுடன் இருந்தபோதே, அரசியலில் இறங்கினார். பி.ஜே.பி-யில் இருந்தவர், தனித் தெலங்கானா பிரிவினைக்காக, `தல்லி தெலங்கானா' கட்சியைத் தொடங்கினார். பிறகு, தற்போதைய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சியில் தனது கட்சியை இணைத்தார் விஜயசாந்தி. அவருடனான மோதலில் அந்தக் கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தன் திரைப்படங்களைப் போல, அரசியலிலும் பல அதிரடி நிலைப்பாடுகளை எடுத்தவர், சமீபத்தில் மீண்டும் பி.ஜே.பி-யில் இணைந்திருக்கிறார். 14 வருடங்களுக்குப் பிறகு இவர் நடித்த `சரிலேரு நீக்கெவரு' படமும் இந்த ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அரசியல் பணிகளில் மீண்டும் பிஸியாகியிருக்கும் விஜயசாந்தியிடம் பேசினோம். வழக்கம்போல, ``தமிழ்நாட்டு மக்கள் நல்லா இருக்காங்களா?" என விசாரித்த பிறகே பேசத் தொடங்கினார்.
``1999-ல் நடந்த தேர்தல்ல `தனித் தெலங்கானா கோரிக்கையை கைவிட்டாதான் கூட்டணி'ன்னு உறுதியா இருந்தார் சந்திரபாபு நாயுடு. அதை பி.ஜே.பி ஏத்துகிச்சு. அதனாலதான், அந்தக் கட்சியில் இருந்து வெளியேறினேன். அப்போதிலிருந்து இப்பவரைக்கும் அவர்மேல தெலங்கானா மக்களுக்குக் கோபம் குறையலை. அதேபோல, டி.ஆர்.எஸ் கட்சியில் நான் சேர்ந்த பிறகு அவரைவிட நான் பெரிசா உயர்ந்திடுவேன்னு பயந்த சந்திரசேகர ராவ், அவரது கட்சியில் இருந்து என்னைக் காரணமின்றி நீக்கிப் பழிவாங்கினார். இவங்க இருவரும்தான் என் அரசியல் எதிரிகள்.
சோனியா காந்தி மேடம் வலியுறுத்தவேதான் காங்கிரஸ் கட்சியில சேர்ந்தேன். இந்த மாநிலத்துல கடந்த சட்டமன்ற தேர்தல்ல சந்திரபாபு நாயுடுவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைச்சு போட்டிபோட்டது பெரிய தவறு. அதை முன்கூட்டியே சொன்னேன். என் பேச்சை அந்தக் கட்சியில் யாரும் பெரிசா எடுத்துக்கலை. காங்கிரஸ் கட்சியுடன் சந்திரசேகர ராவ் மறைமுகமா கூட்டு வெச்சு, அவர் கட்சியின் வெற்றிக்குச் சாதகமா காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களைத் தேர்வு செய்யுறமாதிரி பார்த்துகிட்டார். விளைவு காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் தோல்வியே கிடைச்சது. பிறகும், கட்சியைப் பலப்படுத்த நான் எது சொன்னாலும் கண்டுக்காமலேயே இருந்தாங்க.
தனித் தெலங்கானா மாநிலம் உருவாகணும், மக்கள் நலனை உறுதி செய்யுற நல்ல ஆட்சி மாநிலத்தில் நடக்கணும். இதுதான் என் அரசியல் நோக்கம். இதில் ரெண்டாவது நோக்கம் இன்னும் நிறைவேறலை. கடந்த ஏழு வருஷமா முதல்வரா இருக்கிற சந்திரசேகர ராவ், மக்கள் நலனில் சுத்தமா அக்கறையில்லாம சுயநலத்துடன் இருக்கார். மக்களை நேரில் சந்திக்கப் போகாதவர், அதிகாரிகளுடன்கூட மக்கள் நலனுக்கான பெரிசா ஆலோசனைகள் எதுவும் பண்றதில்லை. எந்நேரமும் தன்னோட பண்ணை வீட்டுலயேதான் இருக்கார்.
மாநிலத்தின் கடன் சுமையை பல லட்சம் கோடியா உயர்த்திட்டாரு. ஒருகாலத்துல ஒரு லட்சம் ரூபாய்க்கே கஷ்டப்பட்ட சந்திரசேகர ராவ், இன்னிக்கு ஒரு லட்சம் கோடி சொத்துகளைக் குவிச்சு வெச்சிருக்கிறதா புகார் சொல்றாங்க. சமீபத்துல ஹைதராபாத்துல வெள்ளம் ஏற்பட்டப்போகூட, மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அவர் நேரில்போய்கூட பார்க்கலை. இப்படியொரு பொறுப்பற்ற முதல்வரை இந்தியாவுல எந்த மாநிலத்துலயும் பார்க்க முடியாது. அவர் செய்யுற தவறுகளைச் சுட்டிக்காட்டி பொறுப்பா செயல்பட வேண்டிய எதிர்க்கட்சியான காங்கிரஸும் அவர் கட்டுப்பாட்டுலதான் இருக்குது.
இந்த விஷயமெல்லாம் சோனியா மேடத்துக்கும் ராகுல் காந்திக்கும் தெரியுமானு தெரியலை. அவங்க இருவரையும் சந்திக்க முயற்சி செஞ்சேன். அதையும் தடுத்துட்டாங்க. இந்தச் சூழல்லதான் கடந்த ஒரு வருஷமா அதிருப்தியில் இருந்தேன். மாநிலத்துல மக்கள் நலனில் பா.ஜ.க-தான் அக்கறையுடன் செயல்படுது. அதுக்காக மக்கள் கொடுத்த ஆதரவுதான், சமீபத்துல ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்ல பா.ஜ.க-வின் பெரிய வெற்றி. `நீங்க பா.ஜ.க-வில் இணைஞ்சா மக்களுக்கான பணிகளை இன்னும் உத்வேகத்துடன் செய்யலாம்'னு வலியுறுத்தினாங்க. ரொம்பவே யோசிச்சுத்தான் மறுபடியும் பி.ஜே.பி-யில் சேர்ந்தேன்.
அரசியல் சூழலால்தான் என் தாய் வீடான பா.ஜ.க-வில் இருந்து விலகினேன். நான் அங்கம் வகிச்ச கட்சிகளின் நிலைப்பாடுகளாலதான் கடந்த காலங்கள்ல பி.ஜே.பி-யை விமர்சிச்சேன். ஆனா, ஒருபோதும் அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் தனிப்பட்ட வெறுப்புகள் எதுவும் எனக்கு இருந்ததில்லை. வாஜ்பாய், அத்வானி, வெங்கய்யா நாயுடுனு பி.ஜே.பி தலைவர்கள் பலரின் அன்பையும் பாசத்தையும் பெற்றிருந்தேன். விரைவில் மோடி சாரை சந்திக்கத் திட்டமிட்டிருக்கேன். தெலங்கானா மக்கள் நலன்தான் எங்க பா.ஜ.க-வின் நலன். அதுக்காக முன்பைவிட இப்போ பல மடங்கு உத்வேகத்துடன் வேலை செய்யப்போறோம். அடுத்த சட்டமன்ற தேர்தல்ல பா.ஜ.க ஆட்சியைப் பிடிச்சு மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுபோகப்போறோம்" என்பவரின் பேச்சு தமிழக அரசியல் பக்கம் திரும்பியது.
``அரசியல்ல என்னோட இன்ஸ்பிரேஷன் ஜெயலலிதா அம்மாதான். அவங்க என்மீது அதிக அன்பு கொண்டிருந்தாங்க. சொத்துக்குவிப்பு வழக்குப் பிரச்னையால், அவர் முதல் முறை பதவியை இழந்த நேரம். நேரில் கூப்பிட்டுப் பேசினாங்க. என்னை முதல்வராக்க நினைச்சதோடு, அ.தி.மு.க-வில் இணைஞ்சு தமிழ்நாட்டு அரசியல்ல பணியாற்றவும் வேண்டுகோள் விடுத்தாங்க. தெலங்கானா மக்களுக்கு நல்லது பண்ற ஒரே நோக்கத்துக்காகவே முழுநேர அரசியலுக்கு நான் வந்தேன். அதை அழுத்தமா அவங்ககிட்ட சொன்னேன். என்னை வாழ்த்தி அனுப்பினாங்க. அதன் பிறகுதான் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.
தமிழ்நாட்டுக்கு நான் வந்து சில வருஷங்கள் ஆகிடுச்சு. தெலங்கானா அரசியல் விஷயங்களால தமிழக அரசியல் நிலவரங்களை நான் முழுமையா கவனிக்கலை. தெலங்கானா, தமிழ்நாடு அரசியல் சூழல்கள் வெவ்வேறானவை. 1990-களின் இறுதியில பா.ஜ.க-வில் இருந்தப்போவே, தமிழ்நாட்டுக்கு வந்து ஜெயலலிதா அம்மாவுக்காகப் பிரசாரம் செஞ்சேன். அவங்க மேலயும், சசிகலா அம்மா மேலயும் எனக்கு இருக்கும் தனிப்பட்ட பாசம் எப்போதும் குறையாது. அதனாலதான், ஒருமுறை சசிகலா அம்மாவைச் சிறையில் சந்திச்சுப் பேசினேன்.
அவங்க இப்போ ரிலீஸ் ஆகப்போறாங்க. நிச்சயம் அவங்களை நேரில் சந்திச்சு நலம் விசாரிப்பேன். ஆனா, அரசியலுக்கு அப்பாற்பட்ட அன்பின் நிமித்தமான சந்திப்பா இருக்கும். சினிமாவில் நான் கோடிக்கணக்கில் சம்பாதிச்சிருக்கலாம். ஆனா, நான் வளர்ந்துடக்கூடாதுனு நிறைய பழிவாங்கப்பட்டேன். தெலங்கானா மக்கள்தான் என் உயிர். அவங்க நலனுக்காக நிறைய நல்ல வாய்ப்புகளையெல்லாம் தவிர்த்திருக்கேன். இந்த நிலைப்பாட்டுல இனியும் மாறப்போறதில்லை. நான் பிறந்து வளர்ந்த தமிழ்நாட்டையும் எப்போதும் மறக்க மாட்டேன்" என்று புன்னகையுடன் கூறுகிறார்.
``அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் இருந்து முழுமையா விலகியிருந்தேன். `கோடிகளில் சம்பளம் கொடுக்கிறோம்’னு நிறைய தயாரிப்பாளர்கள் சொல்லியும்கூட என் முடிவில் உறுதியா இருந்தேன். இந்த நிலையில, சமூகத்துக்கு நல்ல மெசேஜ் சொல்ற மாதிரி போல்டான ரோல்ல நடிக்க வலியுறுத்தினாங்க. அதனாலதான் `சரிலேரு நீக்கெவரு' படத்துல நடிச்சேன். அதனாலேயே பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம் பெரிய ஹிட்டாச்சு. இப்ப இன்னும் அதிகமான சினிமா வாய்ப்புகள் வருது. ஆனா, இப்போதைக்கு அரசியல் பயணத்துக்குத்தான் முன்னுரிமை. எனவே, சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்ல" என்றவர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/vijayashanti-speaks-about-why-she-joined-in-bjp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக