கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதால், அலங்காநல்லூர் உட்பட ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கடந்த 8 மாதங்களாக கொரோனா பேரிடரால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. இதனால், வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் நடத்த அரசு அனுமதிக்குமா என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் பல்வேறு அமைப்புகளும் கவலையுடன் இருந்தனர்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்ததால், தமிழக மக்கள் ஒன்றிணைந்து பெரும் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு அவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதித்தது.
அப்படி போராடி மீட்ட ஜல்லிக்கட்டை தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் நடத்த அரசு அனுமதிக்குமா என்ற கவலையில் மக்கள் இருந்தனர். உரிய வழிகாட்டு நடைமுறைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
Also Read: 625 காளைகள்.. 500 காளையர்கள்.. தேனி அய்யம்பட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு!
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து அறிவித்துள்ளது.
`கொரோனா பரிசோதனை செய்த 300 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். ஐம்பது சதவிகிதப் பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்’ என்று அரசு கூறியுள்ளது. இதனால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/madurai-alanganallur-people-celebrated-after-jallikkattu-announcement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக