Ad

புதன், 23 டிசம்பர், 2020

``விஜய், அஜித் பேட்டிக்கு வெயிட்டிங்... கால்வலி பெட்டர்... அடுத்த வருஷம் கம்பேக்!" - டிடி

சின்னத்திரைத் தொகுப்பாளர்கூட சினிமா நட்சத்திரத்துக்கு இணையாகப் புகழ்பெற முடியும் என்பதற்கு நீண்டகால உதாரணம் டிடி (திவ்யதர்ஷினி). பல ஆண்டுகளாகக் கால் வலியால் அவதிப்பட்டுவந்தவர், அதைப் பொருட்படுத்தாமல் தொகுப்பாளராகப் பணியாற்றிவந்தார். இதற்கான சிகிச்சை எடுத்து வந்த நிலையில், லாக்டெளன் தொடங்கிய நேரத்தில் டிடி-யின் இடது முட்டியில் முறிவு ஏற்பட்டது. வாக்கர் பிடித்து நடப்பதுபோன்ற படத்துடன், ` கடும் வலி இருந்தது. விரைவில் இதிலிருந்து மீண்டு வந்து நிச்சயம் உங்கள் அன்பைப் பெறுவேன்' என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Dhivyadharshini

லாக்டெளன் தளர்வுகளுக்குப் பிறகு, சின்னத்திரை ஷூட்டிங் பணிகள் மீண்டும் வேகமெடுத்தன. ஆனால், `டிடி எங்கே?’ எனச் சின்னத்திரை வட்டாரம் ஆவலாகக் கேட்கும் அளவுக்கு முகம் காட்டாமலேயே இருந்தார். இந்த நிலையில், ஆல்பம் ஒன்றை இயக்கி, அதில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு வெளியான அந்த ஆல்பத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, `காபி வித் டிடி' இப்போது `ஹேப்பி டிடி'யாகக் கால்வலியை மறந்து மகிழ்ச்சியில் இருக்கிறார். ஓய்வில் இருந்தவரிடம் பேசினோம்.

``எனக்குப் பல வருஷங்களாவே கால்வலி இருக்கு. சிகிச்சைக்குப் போனபோதுதான், இது `ஆர்தோ இம்யூன் கண்டிஷன்’னு தெரியவந்துச்சு. இது நோய் கிடையாது. ஒருவித கண்டிஷன். இந்தப் பிரச்னையால் உண்டாகும் வலியைப் பொருட்படுத்திக்காமதான் தொடர்ந்து தொகுப்பாளரா வேலை செஞ்சேன். தொடர் சிகிச்சையும் எடுத்துகிட்டேன். இந்த நிலையில லாக்டெளன் நேரத்துல இடது கால்ல ஃப்ராக்ச்சர் ஏற்பட்டுச்சு. கால் வலி அதிகமாகவே, முழுமையா ஓய்வெடுக்கும் நிலை ஏற்பட்டுச்சு. அதை என் இன்ஸ்டாகிராம் பக்கத்துல தெரிவிக்க, பல தரப்பினரும் நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லி ஊக்கப்படுத்தினாங்க.

நண்பர்களுடன் டிடி

ரொம்ப நேரம் நிற்க முடியாம, ஏழு மாதங்களா வாக்கர் பயன்படுத்தித்தான் நடந்தேன். வீட்டைவிட்டும் பெரிசா வெளிய போகலை. அரைநாள் முழுக்கவும் நின்னுட்டே தொகுப்பாளரா வேலை செய்திருக்கேன். அப்போ உடல் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்துச்சு. அதேபோல இப்போ உடலுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்படுதுனுதான் நினைச்சுகிட்டேன். மத்தபடி நடக்க முடியலையே, வேலை செய்ய முடியலையேனு ஒருநாளும் எதிர்மறையா நினைக்கலை. வருத்தப்படவும் இல்ல. லாக்டெளன் காலத்தை ரொம்பவே மகிழ்ச்சியா உற்சாகமா கழிச்சேன்.

நான் சின்னத்திரைக்கு வந்து பல வருஷங்கள் ஆனாலும்கூட மக்கள் என்மீது இப்போவரை அதிக அன்பு காட்டுறாங்க. கடந்த ஒன்பது மாதங்களா ஆன் ஸ்கிரீன்ல வராதது எனக்கு சின்ன வருத்தம்தான். இப்போ கொஞ்சம் முன்னேற்றம் கிடைச்சிருக்கு. சீக்கிரமே கால் வலியில இருந்து ஓரளவுக்குச் சாதகமான நிலைக்குத் திரும்பிடுவேன்னு நம்பிக்கை இருக்கு. மக்களை மகிழ்விக்கிற என்டர்டெய்னர் வேலை மட்டும்தான் எனக்குத் தெரியும். அந்த வேலையைத் தொடர்ந்து செய்வேன். பிறகு, அடுத்த வருஷ தொடக்கத்துல இருந்து மறுபடியும் தொகுப்பாளரா களமிறங்கிடுவேன்” என்பவரின் குரலில் உற்சாகம் கூடுகிறது.

Dhivyadharshini

மலையாளப் பாடல் ஒன்றை மறுஉருவாக்கம் செய்த ஆல்பம் குறித்துப் பேசுபவர், ``ப்ருத்விராஜ்- பார்வதி இணைந்து நடிச்ச `என்னு நிண்டே மொய்தீன்’ படத்துல வரும் `முக்கத்தே பெண்ணே' பாடல் அது. எனக்கு ரொம்பப் பிடிச்ச அந்தப் பாடலை வித்தியாசமான முறையில் மறுஉருவாக்கம் செய்யலாம்னு யோசனை வந்துச்சு. சத்யபாமா யுனிவர்சிட்டியின் மரியஸீனா மேடம் என்மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டவங்க. இந்தப் பாடலைப் பத்தி அவங்ககிட்ட யதார்த்தமா பேசும்போது, `இதையே ஒரு ஆல்பம் மாதிரி பண்ணி வெளியிடு. பெரிய இடைவெளிக்குப் பிறகு, மறுபடியும் வேலை செய்றதால கொஞ்சம் வித்தியாசமான முயற்சிகளைச் செய்'னு பயனுள்ள ஆலோசனை கொடுத்தாங்க.

அதன் பிறகுதான் இந்தப் பாடல் ஐடியா உருவாச்சு. வித்தியாசமான ஒரு ஆல்பம் தயார் பண்ணி அதை என்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல பதிவிடும் திட்டத்துடன்தான் அந்தப் பாடலை மறுஉருவாக்கம் செஞ்சேன். எனக்கு டான்ஸ் நல்லா வரும். மத்தபடி டைரக்ஷன் பத்தி எதுவும் தெரியாது. ஆனாலும், கோரியோகிராபர்கூட இல்லாம ஏதோ ஒரு நம்பிக்கையில வேலைகளை ஆரம்பிச்சுட்டேன். `சூப்பர் சிங்கர்’ புகழ் நிகில் மேத்யூ என் நண்பர். அவர்கிட்ட கேட்டதுமே அந்தப் பாடலை தன் பாணியில் சிறப்பா பாடிக்கொடுத்தார்.

Dhivyadharshini

மலையாள நடிகரான க்ரிஷ், கெளதம் மேனன் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தவர். அவர்கிட்ட கேட்டதுமே உடனே வந்து சூப்பரா நடிச்சுக்கொடுத்தார். போட்டோகிராபர் நண்பர் ஒருவர் அவரோட நார்மல் டி.எஸ்.எல்.ஆர் கேமராலதான் வீடியோவும் எடுத்தார். எல்லா வேலைகளும் எளிதாவும் விரைவாவும் நடந்து முடிஞ்சது. அந்தப் பாடலின் உரிமம் வெச்சிருக்கிற சத்யம் ஆடியோஸ் நிறுவனத்துகிட்ட தடையில்லா சான்றிதழுக்காகப் பேசினேன். `இந்த ஆல்பத்தை வீடியோவா கொடுங்க. எங்க யூடியூப் சேனல்ல ரிலீஸ் பண்ணிக்கிறோம்’னு சொன்னாங்க.

`நான் ஒரு பாடலை டைரக்ஷன் பண்ணியிருக்கேன். ரிலீஸ் பண்ண சப்போர்ட் பண்றீங்களா?’ன்னு ஃபிரெண்ட்லியா கேட்டதுதான். சிவகார்த்திகேயன், ஆர்யா, டொவினோ தாமஸ் ஆகியோர் மறுவார்த்தை எதுவும் சொல்லாம ஒத்துகிட்டாங்க. அவங்களோட சோஷியல் மீடியா பக்கத்துலயும் பதிவிட்டங்க. நஸ்ரியா, ரம்யா நம்பீசன் உட்பட சிலர் அந்தப் பாடலைத் தங்களோட சோஷியல் மீடியா பக்கத்துல ஷேர் பண்ணியிருந்தது எனக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்.

Dhivyadharshini

திட்டமிட்டபடி யூடியூப்லயும் என் இன்ஸ்டாகிராம் பக்கத்துலயும் சில தினங்களுக்கு முன்பு பாடலை ரிலீஸ் பண்ணினோம். `இந்த மலையாளப் பாடலை நம்ம தமிழ் மக்கள் பார்த்து ரசிப்பாங்களா?’ன்னு சின்ன தயக்கத்துடன், புது முயற்சியா ஆல்பத்தை ரிலீஸ் செஞ்சேன். எதிர்பாராத வகையில பெரிய வரவேற்பும் பாராட்டுகளும் கிடைச்சது. என்னைவிட க்ரிஷுக்கு அதிக பாராட்டுகள் கிடைச்சதுல கூடுதல் மகிழ்ச்சி" என்று கூறும் டிடி-க்கு மீடியா பயணத்தில் நிறைவேறாத இரண்டு ஆசைகள் இருக்கிறதாம்.

``நான் முதன்முதல்ல அறிமுகமானது சின்னத்திரைதான். (சிரித்தபடியே) கண்ணு வெக்காதீங்க, ஜஸ்ட் 20 வருஷங்கள்தான் ஆகியிருக்கு. `றெக்கை கட்டிய மனசு', `தடயம்’ மாதிரியான சில சீரியல்கள்ல நடிச்சதுடன், அப்போதிலிருந்தே தொகுப்பாளராவும் வேலை செய்றேன். இன்னொருத்தர் மாதிரி இல்லாம, எனக்கான தனிப்பாதையை அமைச்சேன். அதைப் பார்த்து பலரும் சின்னத்திரைக்குள் வந்து புகழ்பெற்றதையே என்னோட வெற்றியா நினைக்கிறேன். இந்தப் பயணத்துக்கு நடுவுல, எனக்குள் இருந்த நடிப்புத் திறமையைச் சரியா கண்டுபிடிச்சு `பவர் பாண்டி’ படத்துல நடிக்க வெச்சார் தனுஷ் சார்.

தனுஷ், த்ரிஷாவுடன் டிடி

Also Read: "என் லவ் ஏன் உடைஞ்சதுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்!" - ரிலேஷன்ஷிப் பற்றி டிடி என்ன சொல்கிறார்?!

அதைப் பார்த்துட்டுதான், `துருவ நட்சத்திரம்’ படத்துல நடிக்க கெளதம் மேனன் சார் வாய்ப்பு கொடுத்தார். வித்தியாசமான ரோல் எனக்கு. நடிப்பையும் தொடர்வேன். இத்தனை வருஷங்கள்தான் சின்னத்திரையில வேலை செய்யணும்னு இதுவரை திட்டமிட்டதில்லை. மக்கள் எனக்கு ஆதரவு கொடுக்கும்வரை நிச்சயம் தொகுப்பாளரா வேலை செய்வேன். தமிழ் சினிமா பிரபலங்கள் பெரும்பாலானோரை பேட்டி எடுத்திருக்கேன். ஆனா, இதுவரை விஜய் சார், அஜித் சார் ரெண்டு பேரையும் பேட்டி எடுத்ததில்லை. இவங்க ரெண்டு பேரையும் பேட்டி எடுக்க ஆவலோடு காத்திருக்கேன். அதுவும் நிச்சயம் நடக்கும்னு உறுதியா நம்பறேன்” என்பவர், தனக்கே உரிய டிரேட் மார்க் சிரிப்புடன் விடைபெற்றார்.



source https://cinema.vikatan.com/television/anchor-dd-dhivyadharshini-speaks-about-her-new-album-and-comeback

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக