திண்டுக்கல் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கொடைக்கானல். குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை, கண்களைக் கவரும் மலைகள் என ரம்மியமான சூழல் நிலவுவதால், கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 8 மாதங்களாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துவிட்டது. இ-பாஸ் பெற்றுக்கொண்டு கொடைக்கானலுக்கு வருகை தரலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்த பின்னரும், சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது.
தொடர்ந்து, கொடைக்கானலில் உள்ள மூடப்பட்ட சுற்றுலாப்பகுதிகளை படிப்படியாக திறந்தது மாவட்ட நிர்வாகம். இருந்தபோதும், கொடைக்கானலுக்கு வர சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனால், சுற்றுலாவையே நம்பி வாழும் கொடைக்கானல் வாசிகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். அவர்களிடம் நாம் பேசினோம்.
”என்னுடைய பெயர் அப்பாஸ். கடந்த 23 வருடமாக கொடைக்கானலில் கடை வைத்துள்ளேன். கொரோனா ஊரடங்கை அரசு அறிவிக்கும் முன்னர், பிப்ரவரி மாதமே 15 நாட்கள் உள்ளூர் ஊரடங்கை கடைபிடித்தோம். இரண்டு மூன்று மாதத்தில் அனைத்தும் சரியாகிவிடும் என நினைத்திருந்தோம். ஆனால், மாதக்கணக்கில் பிரச்னை சென்றது. கொடைக்கானலில் சுற்றுலாவைத் தவிர வேற எந்த தொழிலிலும் இல்லை. அதனால், மக்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டனர்.
நிவாரண உதவிகளை வைத்து தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். இ-பாஸ் மூலம் இப்போது மக்கள் வருகிறார்கள். பொதுவாக, கொடைக்கானலுக்கு அண்டை மாநில, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். அது இல்லாததால் வியாபாரம் கொஞ்சம் டல் தான். சீக்கிரம் நிலைமை சரியாகும்னு நம்பிக்கை இருக்கு.” என்றார்.
குதிரை வைத்திருக்கும் பாஸ்கரிடம் பேசினோம். ”35 வருடமாக கொடைக்கானலில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால், கடந்த 7 மாதமாக நாங்கள் பட்ட கஷ்டம் அதிகம். சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருந்தோம். குதிரைக்கு ஒரு நாளைக்கு ரூ.500 செலவு செய்ய வேண்டும். நாங்கள் சாப்பிடாமல் குதிரைக்கு தவிடு வாங்கி கொடுத்தோம். சுற்றுலா இல்லாததால் கூலி வேலைக்கு தான் போனோம். பெரும்பாலான நாள்களில், நாங்களும், குதிரையும் அரை வயிறு சாப்பாடு தான் சாப்பிடுவோம்.
இப்போ கொஞ்சம் பரவாயில்லை. இ-பாஸ் மூலம் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் வராங்க. ஆனால், நிவர், புரெவி புயல் காரணமா, கடந்த 20 நாட்களா சுற்றுலாப்பயணிகள் வருகை சுத்தமா இல்ல. எப்ப தான் நிலைமை சரியாகும்’னு தெரியல” என்றார் வருத்ததோடு.
மக்காச்சோளம், பயறு விற்பனை செய்யும் துர்கா தேவியிடம் பேசினோம். “கொரோனா ஊரடங்கு நேரத்தில் நிவாரண உதவிகளை வைத்து தான் சாப்பிட்டோம். இப்போ சுற்றுலாப்பயணிகள் வராங்க. ஆனால், வியாபாரம் தான் சரியா போகல. ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கி காலையில 8 மணிக்கு வியாபாரத்துக்கு வந்தால், ராத்திரி 8 மணி வரை வெறும் 300 ரூபாய்க்கு தான் வியாபாரம் ஆகுது. மக்களும், காசு செலவு பண்ணி வாங்கி சாப்பிட யோசிக்கிறாங்க. இப்போ புயல், மழை காரணமா மக்களும் கொடைக்கானலுக்கு வரமாட்றாங்க. பழையபடி வியாபாரம் நல்லா நடக்கணும்னா இ-பாஸ் முறையை ரத்து செய்யணும். அப்ப தான் மக்கள் கொடைக்கானலுக்கு வருவாங்க. எங்க பிழைப்பும் நல்லபடியா ஓடும்” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/kodaikanal-people-affected-one-after-another-like-corona-cyclone
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக