Ad

புதன், 9 டிசம்பர், 2020

அர்ச்சனாவிடம் இப்படியா விளையாடுவது... நிஷாவுக்கு எதுவுமே புரியாதா?! பிக்பாஸ் – நாள் 65

‘லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க்’ எப்படி கொடுக்கலாம் என்று பிக்பாஸ் டீம் ஒவ்வொரு வாரமும் ரூம் போட்டு யோசிப்பார்கள் போலிருக்கிறது. அதில் ஒருவர் சமீபத்தில்தான் ‘எந்திரன்’ திரைப்படத்தைப் பார்த்திருப்பார் என நினைக்கிறேன். அதே சமயத்தில் நிகழ்ச்சியில் ரமேஷூம் ஷிவானியும் அதிக செயல்பாடுகள் இன்றி ரோபோவைப் போல இயங்குவதைப் பார்த்தவுடன் அவருடைய மூளையில் ‘பல்பு’ எரிந்திருக்க வேண்டும். விளைவு இந்த வார டாஸ்க்.

ரோபோக்கள் வெறும் இயந்திரங்கள்தான். அவற்றிற்கு உணர்ச்சி கிடையாது. ஆனால் ஒரு ரோபோவிற்கு காதல் வந்தால் என்னவாகும் என்கிற கற்பனைதான் ‘எந்திரன்’ திரைப்படம். ஆனால் மனிதர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுமளவிற்கு ‘Artificial intelligence’ போன்ற நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. வருங்காலத்தில் மனிதனுக்கு ஈடாக அத்தனை விஷயங்களையும் சிந்திக்கும் ரோபோ உருவாகுமா? ஆகலாம். ஆனால் ஒருக்காலும் ஓர் இயந்திரம் மனிதனாக முடியாது. இது அடிப்படையான விஷயம்.

இந்த டாஸ்க்கில் அர்ச்சனாவை பிரதான டார்கெட்டாக வைத்துக் கொண்டு விதம் விதமாக எதிரணியினர் இம்சித்தார்கள். ஆனால் பெரும்பாலானவற்றிற்கு அவர் அசைந்து கொடுக்காமல் உறுதியாக சமாளித்த விதத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும். Hats off Archana!

பிக்பாஸ் – நாள் 65

65-வது நாளில் என்ன நடந்தது?!

இன்று நடக்கவிருப்பது மனிதர்கள் vs இயந்திரங்கள் தொடர்பான டாஸ்க் என்பதால் வார்ம் –அப் சாங் போல ‘எந்திரன்’ படத்திலிருந்து ஒரு பாடல் போட்டார்கள்.

பிறகு ‘புதிய மனிதா’ என்கிற அந்த டாஸ்க்கின் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. பஸ்ஸர் அடிக்கும் இடைவெளியில் மனிதர்கள், இயந்திரங்களிடமிருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் ஆகிய உணர்ச்சிகளில் இருந்து ஏதாவது இரண்டை வெளிப்படுத்தச் செய்ய வேண்டுமாம். அப்படிச் செய்து விட்டால் இயந்திரத்திடமிருக்கும் இரண்டு இதயங்களை எடுத்து அவற்றை செயலிழக்கச் செய்து விட முடியும். குறிப்பிட்ட இடைவெளிக்குள் மனிதரால் அப்படிச் செய்ய முடியாவிட்டால் மனிதர்களில் ஒருவர் இயந்திரம் ஆகி விடுவார். இதுதான் போட்டியின் விதிமுறை.

அணிகளைத் தேர்ந்தெடுப்பதிலேயே ஆட்டம் சுவாரஸ்யமாகத் துவங்கிவிட்டது. பாலாஜி எதிர் குரூப் ஆட்களைச் சேர்ந்த ரியோ, நிஷா ஆகியோரை இணைத்தது நல்ல யோசனை. இதன் மூலம் அவர்களை ஆயுதங்களாக மாற்றி அர்ச்சனாவை செளகரியமாக தொந்தரவு செய்யலாம் என்று அவர் யோசித்திருப்பார். இதன் எதிர்வியூகமாக ஷிவானியைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டார் அர்ச்சனா.

ஆக... மனிதர்களின் அணி தலைவர் பாலாஜி. அவருடைய அணியில் ரியோ, அனிதா, நிஷா, ஆரி மற்றும் ஆஜீத் ஆகியோர் இருப்பார்கள். இயந்திரங்களின் அணி தலைவர் அர்ச்சனா. (அப்பவும் இந்த ரேபோவிடம் அன்பு இருக்கும்!). இவருடைய அணியில் ரம்யா, சோம், கேபி, ஷிவானி மற்றும் ரமேஷ் ஆகியோர் இருப்பார்கள். (ஷிவானியும் ரமேஷூம் இயந்திரங்கள் அணியில் வந்தது தற்செயல் நகைச்சுவையாகத்தான் இருக்க வேண்டும்).
பிக்பாஸ் – நாள் 65
பிக்பாஸ் – நாள் 65

எந்தெந்த பட்டப் பெயர்கள் யாருக்கு எரிச்சலை ஏற்படுத்துமோ அந்தப் பட்டப் பெயர்களே ரோபோக்களுக்கு சூட்டப்பட்டன. அர்ச்சனாவிற்கு ‘Bossy ரோபோ’, ரமேஷிற்கு ‘ராஜா வீட்டு கன்னுக்குட்டி, 'ரம்யாவிற்கு ‘Soft hurt’ (ஆனால், இதை ரம்யா வெளிப் பார்வையில் சலித்துக் கொள்வது போல் காட்டிக் கொண்டாலும் இதை விருதாகத்தான் எடுத்துக் கொள்கிறார்). 'பப்பெட் ரோபா' என்கிற பெயர் சோமிற்கு. ‘மேக்கப் ரோபோ’ என்பது ஷிவானியாம்.

வடிவேலுவைக் கடத்திக் கொண்டுபோய் ஆளாளுக்கு அடிப்பதைப் போல, மனிதர்கள் அணி ஒவ்வொரு ரோபோவையும் தங்களுக்காக ஃபிக்ஸ் செய்து கொள்ள சதியாலாசனை நடத்தினார்கள். அர்ச்சனாதான் இவர்களின் பிரதான டார்க்கெட். முட்டை என்கிற ஆயுதத்தை அர்ச்சனாவிற்கு எதிராக எடுத்தார்கள். அர்ச்சனாவிற்கு முட்டை வாசனை என்பது அருவெறுப்பை உண்டாக்கும் என்று உடந்தையாக இருந்து ஆலோசனை சொல்லிக் கொடுத்தார் நிஷா. அதன் வாசனையை தொடர்ந்து முகர வைக்கலாம் என்கிற டெரரான ஐடியாவை இணைத்தார் பாலாஜி.

ஆஜீத், இதர ரோபோக்களை வீட்டிற்குள் வரிசையாக அழைத்து வந்தார். ‘என்னா குண்டு ரோபோ…?” என்று ஷிவானியை பாலாஜி கிண்டல் செய்திலேயே முதல் விக்கெட் காலி. அதற்கு ஷிவானி சிரித்து விட அவரிடமிருந்த ஒரு இதயம் எடுக்கப்பட்டது.

‘ரெட் சிப்’ பொருத்தப்பட்ட வில்லன் ரோபோ மாதிரியான பாவனையில் ரஜினியின் குரலில் பேச முயன்றார் ரியோ... "இந்தக் கூட்டத்துல ஒரு கறுப்பு ஆடு இருக்கு... எல்லோரும் காலை முன்னாடி எடுத்து வைங்க... rotate your heads" என்று சொல்ல மாவாட்டும் இயந்திரம் போல தலையை அசைத்தார் அர்ச்சனா. அதைக் காப்பியடித்து மற்றவர்களும் செய்ய கேபி மட்டும் அசையவில்லை. (இவர்தான் வசீகரன் போலிருக்கிறது).

இயந்திரங்களை எப்படியெல்லாம் இம்சிக்கலாம் என்று மனிதர்கள் கூடியாலோசித்தார்கள். "ஷிவானிக்கு ஒரு இதயம் போய் விட்டதால், இன்னொன்றையும் சீக்கிரம் பிடுங்கி விடலாம்" என்று ரியோவும் அனிதாவும் கொடுத்த நல்ல யோசனையை ‘தலைவர்’ என்கிற கெத்தில் நிராகரித்து விட்டார் பாலாஜி. இவர் உடைந்த ஆங்கிலத்தில் இதைச் சொல்லும் போது அடக்க முடியாமல் சிரித்து விட்டார் ரியோ.

ஆனால், ஒன்று சொல்ல வேண்டும். அது சரியான முடிவோ, தவறான முடிவோ... தலைவர் என்று பொறுப்பைத் தந்துவிட்ட பிறகு அந்த நிலைக்கு ஏற்ப கறாராக செயல்படுவதுதான் சரியானது. கேப்டன் ஆனாலும் அனிதா இதைச் செய்தது போல் தெரியவில்லை. ஆனால் ‘மனிதர்களின் தலைவன்’ என்கிற பொறுப்பை கெத்தாகக் கையாண்டார் பாலாஜி.

பிக்பாஸ் – நாள் 65

பிறகு அர்ச்சனாவை மட்டும் ஓரங்கட்டி அவரை நிஷாவின் பொறுப்பில் விட்டுச் சென்றார்கள். "என்னைப் பார்த்து ஐ லவ் யூன்னு சொல்லு" என்று நிஷா ஒரு விபரீதமான கட்டளையைத் தர, அன்பின் உருவமான அர்ச்சனா, துளி கூட அன்பில்லாமல் இயந்திரக் குரலில் ‘ஐ லவ் யூ’ என்றார்.

இதற்கிடையில் அனிதாவும் நிஷாவும் அர்ச்சனாவின் இடுப்பில் ஏறிக் கொள்ளும் விபரீதமான விளையாட்டில் ஈடுபட்டார்கள். அனிதா ஓகே... ஆனால் நிஷாவையும் தாங்கும் அளவிற்கு வலிமையான ரோபோவாக அர்ச்சனா இருந்தார். பிறகு அவருடைய முகத்தில் முட்டையை பூசிக் கொள்ளச் சொன்னார்கள். அர்ச்சனாவிற்கு இந்தத் தண்டனையை தனியாக வழங்க அனிதாவிற்குப் பயமாக இருந்ததால் கூட ஆள் சேர்த்துக் கொண்டார். ‘கையை மூக்கு கிட்டயே வெச்சிருக்கணும்’ என்று கூடுதல் இம்சையை இதில் இணைத்தார் பாலாஜி. அழச் சொல்லும் போது முகத்தில் உணர்ச்சியைக் காட்டாமல் கண்ணீர் வர வைத்தது உண்மையிலேயே அர்ச்சனாவின் சாதனை. (அதுவும் நடிகை சாவித்திரியைப் போல ஒரு கண்ணில் நீர்).

சோம் ரோபோவை இ.என்.டி மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டுமா என்று தெரியவில்லை. அவ்வப்போது ‘காது குடையலாமா?’ என்று அனுமதி கேட்டு காதைக் குடைந்து கொண்டார். அவர் மிக்ஸ்ட் மார்ஷியல் ஆசாமி என்பதற்கான துளி அடையாளம் இன்று தெரிந்தது. பின்பக்கமாக பல்டி அடித்துக் காட்டினார். அப்படிச் செய்யும் போது அவர் ‘ஹப்பாடா’ என்பது மாதிரியான ஒலியை எழுப்ப அதைக் காட்டி ஆட்சேபித்தார் ஆஜீத். இதை ஆரி விசாரித்தபோது சோம் ஒரு மாதிரியாக சிரித்துவிட்டார் போலிருக்கிறது. எனவே அவரிடமிருந்து ஒரு இதயத்தைப் பிடுங்கினார்கள்.

"என்னால சிரிப்பை அடக்கவே முடியாது" என்று ரம்யா ஏற்கெனவே ஒருமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த டாஸ்க்கில் அவர் இம்சைகளை சிரிக்காமல் ஏற்றுக் கொண்டது ஆச்சர்யம்தான். ‘'காதை நோண்டுங்க... அப்படியே மூக்குள்ள விடுங்க'’ என்று இம்சை அரசன் புலிகேசியைப் போல விநோதமான தண்டனையை ஷிவானிக்குத் தந்து கொண்டிருந்தார் ரியோ. இன்னொரு பக்கம் ரியோவின் சீண்டுதலில் கேபி சிரித்து விட்டதால் ஒரு இதயத்தை இழந்தார்.

பிக்பாஸ் – நாள் 65

"எனக்கு கோபமே வராது" என்று சொன்ன பிறகு "அர்ச்சனா சிரித்ததை நான் பார்த்தேன்" என்று பாலாஜி பஞ்சாயத்து கூட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அதை விடாப்பிடியாக மறுத்தார் அர்ச்சனா. அந்தக் காட்சியைப் பார்த்தால் அர்ச்சனா சிரித்தது போலவும் தெரிந்தது. வாய் முழுக்க முட்டை தடவப்பட்டு காய்ந்திருப்பதால் அதை சரி செய்து கொள்வது போலவும் தெரிந்தது. இந்த விளையாட்டில் ஒருவர் உண்மையாகவே தன் உணர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தால் அதை நேர்மையாக ஒப்புக் கொண்டால்தான் நன்றாக இருக்கும். ஆனால் ‘'நான் அப்படிச் செய்யவில்லை'’ என்று அவர் மறுத்தால் கேமராவும் பிக்பாஸூம் மட்டும்தான் சாட்சி.

'‘நிஷா ரொம்ப அழகா இருக்காங்க'’ என்கிற உண்மையை ரமேஷை மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்லி தானே பெருமையடைந்து கொண்டார் நிஷா. தண்ணீர் இல்லாமல் வாயில் பிரஷ் செய்யும் தண்டனையை ரம்யாவிற்கு ஆஜீத்தும் அனிதாவும் இணைந்து தந்தார்கள். ‘உன் விழிகளில் தொலைந்த நாட்களில் நான்’ என்கிற பாடலை கொரிய மொழியில் வாய் குழறலாக பாடினார் ரம்யா.

அர்ச்சனாவை ரொம்பவும் வெறுப்பேற்றினால் பிறகு பிரச்னையாகி விடும் என்று பயந்தாரோ, அல்லது தம்பி என்கிற பாசத்தினாலோ என்னவோ... "அர்ச்சனா நீங்க போய் முகம் கழுவிட்டு வாங்க" என்று தண்டனை என்கிற பெயரில் விடுதலையைத் தந்தார் ரியோ. “மூஞ்சி கழுவும் போது முகத்துல கோபம் வந்தது'’ என்று வாதிட்டுக் கொண்டிருந்தார் நிஷா. "நீங்க ஒரு சமயத்தில் இரண்டு ரோபோக்களை மட்டும்தான் டார்க்கெட் செய்ய வேண்டும்" என்கிற விதிமுறையை அர்ச்சனா ரோபோ நினைவுப்படுத்தியது. "அவங்களை விட்டுருங்க... நான் வேற ஐடியா வெச்சிருக்கேன்" என்று அர்ச்சனாவை ரிலீஸ் செய்தார் பாலாஜி.

"நாம இப்ப ரமேஷையும் சோமையும் டார்க்கெட் பண்ணியிருக்கோம்..." என்று பாலாஜி பிறகு நிஷாவிற்கு விளக்கம் தர அந்த விஷயம் நிஷாவிற்குத் தெரியாது போலிருக்கிறது. "அப்ப நான் இதுவரைக்கும் பண்ணதெல்லாம் வேஸ்ட்டா?” என்று சலித்துக் கொண்டார். ரோபோக்கள் தெளிவாக இருக்கின்றன. மனிதர்கள்தான் குழம்பிப் போகிறார்கள் என்பதற்கு உதாரணக் காட்சியிது.

பிக்பாஸ் – நாள் 65

ஆரியின் கையை அமுக்கிக் கொண்டே ரமேஷ் ரோபோ ஒரு பழைய பஞ்சாயத்தைப் பேசிக் கொண்டிருந்தது. "எங்க அப்பா பேரை இழுத்ததால்தான் எனக்கு கோபம் வந்தது. பாலாஜியிடம் இதைப் பற்றி பேசினேன். என்னைப் பத்தி என்ன சொன்னாலும் கவலையில்லை" என்பது அந்த விளக்கம். “நீங்க வெளியல்லாம் ரெகுலரா மசாஜ் பண்ணிப்பீங்களா... இங்க மட்டும் அதை ஏன் தினமும் செஞ்சுக்கறீங்க..?'’ என்கிற அதிமுக்கியமான கேள்வியை ஆரி கேட்க, "வெளில பண்றதில்ல... ஆனா இங்க எல்லாமே ஃப்ரீதானே... நல்லா இருக்கு” என்று ரமேஷ் பதில் அளித்தது சுவாரஸ்யமான கிண்டல். (அடப்பாவி! பிக்பாஸ் வீட்டை ஹாலிடே ரிசார்ட் மாதிரி உபயோகிப்பது ரமேஷ் மட்டும்தான் போல!)

"ரமேஷ் மாட்ற மாதிரி தெரியல. கூலா ஆன்ஸர் பண்ணிட்டு இருக்காரு" என்று தூரத்தில் சலித்துக் கொண்டார் அனிதா. ஆரியால் இன்னொருவரை சிரிக்க வைக்க முடியும் என்று நம்புவதே அடிப்படையில் லாஜிக் எரர்.

தன்னை குழந்தை போல் தூக்கிச் செல்லும் விநோதமான இம்சையை சோமிற்குத் தந்தார் நிஷா. வேறு வழியில்லாமல் அந்த தண்டனையை ஏற்றுக் கொண்டார் சோம். (இதுக்காகவா நான் MMA கத்துக்கிட்டேன்!?) "தலையில தட்டினா சோமிற்கு கோபம் வரும்" என்கிற டெரரான ஐடியாவை பாலாஜி தர, அதை சோமிடம் முயன்று பார்த்து தோற்றுப் போனார் நிஷா.

அர்ச்சனாவைத் தனியாக ஓரங்கட்டி வெறுப்பேற்றும் வேலையில் இறங்கினார் நிஷா. "அர்ச்சனா–ன்றது உங்க பேரு... ‘Bossy’-ன்றது நீங்க வாங்கின பட்டமா?" என்பது உள்ளிட்ட பல கோளாறு கேள்விகளைக் கேட்டும் அர்ச்சனா அசையவில்லை. எனவே அர்ச்சனாவின் தந்தை மரணத்தைப் பற்றிய கேள்விகளாக தொடர்ந்து முன்வைத்தார் நிஷா. இதற்கு இறுக்கமான முகத்துடன் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் பதில் அளித்தார் அர்ச்சனா. ஆனால் உள்ளுக்குள் காண்டாகிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது.

பிக்பாஸ் – நாள் 65
"மலேசிய நிஷாவை வெளியே கொண்டு வாங்க" என்று கமல் ஆலோசனை தந்ததால் இந்த டாஸ்க்கை வெற்றிகரமாக செய்ய வேண்டும் என்கிற ஆவேசத்தில் நிஷா இருந்திருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் விநோதமான இம்சைகளைத் தந்து போட்டியாளருக்கு அசெளகரியம் ஏற்படுத்தலாமே ஒழிய, தனிப்பட்ட கேள்விகளை, உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தும் கேள்விகளை நிஷா தவிர்த்திருக்கலாம்.

இதற்கிடையில் சோமை மனிதனாக நடிக்க வைத்து நிஷாவிடம் சென்று கோபப்படும் ஐடியாவை உருவாக்கினார்கள். இதன் மூலம் அர்ச்சனா சலனம் அடையலாம் என்பது பாலாஜி - ரியோவின் பிளான் போலிருக்கிறது. நல்ல திட்டம்தான். ஆனால் சோம் இதை திறமையாகச் செய்தும் இந்த ஆப்ரேஷன் தோல்வியில் முடிந்தது. வழக்கம் போல், இந்த பிளான் நிஷாவிற்குத் தெரியாது போலிருக்கிறது. சோமின் கோபத்தைக் கண்டு அவர் பின்வாங்கினார். ‘'இவர்கள் இப்படி கோக்குமாக்காக எதையாவது நிச்சயம் செய்வார்கள்'’ என்று எதிர்பார்த்திருந்தாரோ என்னமோ... அர்ச்சனா சலனம் அடையாமல் நின்றார்.

சோமின் ஆட்சேபத்தைக் கண்டு நிஷா கோபமாக பதில் சொல்ல... "ஹலோ... அவங்களைத்தான் கோபப்படுத்தணும். நீ கோபப்படக்கூடாது" என்று ரியோ சொன்னது ஹைலைட்டான காமெடி. இது போன்ற சமயங்களில் ரியோ நம்மைக் கவர்கிறார்.

"நான் வெறுப்பேத்தும்போது அர்ச்சனாவின் முகத்தில் சோகம் தெரிந்தது" என்று நிஷா சொன்னது ஒருவகையில் உண்மை. ஆனால் இயந்திர முகத்துடன் இதை மறுத்துக் கொண்டிருந்தார் அர்ச்சனா. "கேப்டன் நான் சொல்றேன். ஒரு இதயத்தை எடுங்க... நாம செய்யறது தவறா இருந்தா பிக்பாஸ் கரெக்ட் பண்ணுவாரு" என்கிற சரியான பிளானை அப்போது முன்வைத்தார் பாலாஜி. எனவே அர்ச்சனாவின் இன்னொரு இதயமும் பிடுங்கப்பட்டது.

அர்ச்சனாவை வெறுப்பேற்றும் பணியை ஓர் உணர்ச்சி வேகத்தில் நிஷா செய்து விட்டாரே ஒழிய, செய்து முடித்தவுடன் நிஷாவிற்குள் குற்றவுணர்ச்சியும் சங்கடமும் அதிகமாகப் பெருகி வழிய தனியாகச் சென்று அழ ஆரம்பித்து விட்டார். டாஸ்க் முடிந்த பிறகு அர்ச்சனா தன்னை ஒரு வழி செய்து விடுவார் என்கிற பயமும் காரணமாக இருக்கலாம்.

பிக்பாஸ் – நாள் 65

அங்கு வந்து நிஷாவை சமாதானப்படுத்திய ரியோ. "ஓகே... இந்த அழுகையை வேஸ்ட் பண்ணாதே... நீ அப்படியே வெளில போய் ஆரி கிட்ட கோபப்படு. அப்படியாவது ரமேஷ்கிட்ட மாற்றம் தெரியுதா–ன்னு பார்க்கலாம்" என்கிற ஐடியாவைத் தந்தார். ‘ஒரு ரூபாய்க்கு நூறு ரூபாய் நடிப்பைத் தரும் நிஷா’ அதற்கேற்ப “ஒரு ஆளை எவ்ள நேரம் வெச்சு அடிப்பீங்க?” என்று ஓவராக ஆரியிடம் கோபம் கொள்ள, ஆரியும் அந்த நாடகத்தை சிறப்பாக கையாண்டார்.

ஆனால், ரமேஷ் எப்படியோ இதை யூகித்து விட்டார். அல்லது சுற்றி நடப்பதை பார்த்தவற்றில் இருந்து ‘இவர்கள் இப்படிச் செய்யக்கூடும்’ என்று கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை. இந்த நாடகத்தில் சிக்காமல் தப்பித்து விட்டார். (வருங்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களுக்கு இணையாக சிந்திக்கும் என்பதில் எனக்கு இப்போது நிறைய நம்பிக்கை வந்து விட்டது).

இன்னொரு பக்கம் கேபியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்த பாலாஜி, ‘கேபி வருத்தம் அடைஞ்சிட்டாங்க’ என்று துள்ளிக் குதித்துக் கொண்டே இன்னொரு இதயத்தைப் பிடுங்கினார்.

இரண்டு இதயங்களையும் இழந்து, செயலிழந்து போயிருந்த அர்ச்சனா ரோபோவிற்கு திடீர் என்று உணர்ச்சி வேகம் வந்து "இந்த டாஸ்க்கில் நான் தோற்கவில்லை. மனிதர்கள் பொய் சொல்கிறார்கள்" என்கிற புகாரை பிக்பாஸிடம் வைத்தார். “அவன்தான் சார்... என்னை முதல்ல கிள்ளினான்" என்று பாலாஜியும் பதில் புகாரை வைத்தார். (பிக்பாஸ் குரலே ஓர் இயந்திரக்குரல்தான். இதில் அங்கு சென்று என்னத்த புகார் பண்றது).

“நீங்கள் இரண்டு ரோபோக்களை மட்டும்தான் டார்க்கெட் செய்ய முடியும். மத்த ரோபோக்களிடம் வேலைதான் வாங்க முடியும். ஆனால் நீங்கள் ஒரே சமயத்தில் ஆறு ரோபோக்களையும் டார்க்கெட் செய்தீர்கள்" என்கிற குற்றச்சாட்டை ரியோவிடம் ஆவேசமாக வைத்தார் அர்ச்சனா.

“ஆமாங்க்கா... (அக்கா ரோபோ போலிருக்கிறது!) முதல்ல அப்படி பண்ணாலும் பிக்பாஸ் சொன்னப்புறம் கரெக்ட் பண்ணிக்கிட்டோம். ஒரு சமயத்துல ரெண்டு ரோபோவை மட்டும்தான் டார்க்கெட் பண்ணோம். ஆனா ஆளை அப்பப்போ மாத்திக்கிட்டோம்" என்று ரியோ சொன்ன விளக்கத்தை அர்ச்சனா ஏற்றுக் கொள்வதாக இல்லை. ரியோவிற்கும் அர்ச்சனாவிற்கும் இடையே சண்டை உருவாகும் சூழல் ஏற்பட்டது.

பிக்பாஸ் – நாள் 65

இந்த விவகாரத்தில் பிக்பாஸ் தலையிட்டு சில திருத்தங்களைச் செய்திருக்கிறார் போலிருக்கிறது. அவை நமக்கு காட்டப்படவில்லை. இவர்களின் உரையாடலில் இருந்துதான் தெரிய வந்தது. தனக்கு இரண்டு இதயமும் பிடுங்கப்பட்டதில் நியாயமில்லை என்று அர்ச்சனா வாதிட, "ஒருமுறை குறும்படம் போட்டுக் காண்பிச்சாங்கன்றதுக்காக.. நான் தப்பு செய்வேன்னு முடிவு பண்ணாதீங்க" என்று பதில் வாதம் செய்து கொண்டிருந்தார் பாலாஜி.

ரியோவும் பாலாஜியும் கலந்து பேசி, தவறாகப் பிடுங்கப்பட்ட இதயங்களை அவரவர்களிடம் திருப்பித் தந்தார்கள். (வித்தியாசமான ஹார்ட் சர்ஜரி!). ‘தாங்கள் இதை இனி எப்படி கையாளப் போகிறோம்’ என்பதை ரோபோக்களுக்கு விரிவாக சொல்லிக் கொண்டிருந்தார் ரியோ.

பிக்பாஸ் – நாள் 65
என்றாலும் தனக்கு இழைக்கப்பட்டது அநீதி என்றும் விதிமுறைக்கு முரணானது என்றும் அர்ச்சனா தொடர்ந்து வாதிட ரியோவிற்கும் இவருக்கும் இடையில் வாக்குவாதம் பலமானது. ரியோ சற்று பணிந்து போனாலும் அர்ச்சனா அதற்குத் தயாராக இல்லை.

படுக்கையறையில் கோபத்துடன் சென்ற அர்ச்சனாவை பாலாஜி சமாதானப்படுத்த முயன்றபோது அதுவரை அர்ச்சனா அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளும் வெளியே வழிந்தோடியது. "என் அப்பாவோட மரணம் விளையாட்டு சமாச்சாரமில்லை" என்று உரத்த குரலில் அழுகையுடன் கத்தினார். அர்ச்சனாவின் இந்த அழுத்தமான ஆட்சேபம் ஏற்றுக் கொள்ளக்கூடியது. இதில் மாற்றுக்கருத்தேயில்லை. அடிப்படையில் இதுவொரு விளையாட்டு. எல்லை மீறாமல் கண்ணியத்தோடு விளையாடுவதுதான் சிறப்பான அணுகுமுறை.

பிக்பாஸ் – நாள் 65

நிஷா உருக்கமாகவும் உரிமைக் கோபத்துடனும் மன்னிப்பு தெரிவித்தும் அர்ச்சனாவின் கோபம் அடங்கவில்லை. ‘என்னை தனியாக விடுங்க’ என்று அவர் மறுபடி மறுபடி வலியுறுத்தியதால் மற்றவர்கள் விலகிச் சென்றார்கள். நிஷாவின் பக்கம் நியாயமேயில்லை.

தந்தையின் மரணம் என்கிற சென்ட்டிமென்ட்டான விஷயத்தை தொட்டது மட்டுமல்லாமல் அதை வைத்து நீண்ட நேரம் இழுத்தது நிஷாவின் தவறு. அதற்காக பின்பு அர்ச்சனா கோபப்பட்டதில் நியாயமுள்ளது. ஆனால் இந்த ரணகளத்திற்கு இடையில் எனக்குத் தோன்றியது என்னவெனில்,

“ரோபோக்கு ஏது அப்பா?!” என்கிற சமயோசிதமான கேள்வியை கேட்டு அர்ச்சனா தப்பித்திருக்கலாம் என்பதே!



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/archana-gets-angry-bigg-boss-tamil-season-4-day-65-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக