தி.மு.க-வில் மதுரை மாநகர் மாவட்டம் அமைப்புரீதியாக சமீபத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு பொன்.முத்துராமலிங்கமும், மாநகர் தெற்கு மாவட்டத்திற்கு கோ.தளபதியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். கட்சிக்குள்ளேயே, ‘மாநகரை பிரித்தவர்கள், ஏன் புறநகரைப் பிரிக்கவில்லை?’என்று போர்க்குரல்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, புறநகரையும் பிரிக்கும் முடிவுக்கு அறிவாலயம் வந்திருப்பதாகக் கூறுகிறார்கள் கட்சியின் சீனியர் நிர்வாகிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், “மதுரை புறநகரில் வடக்கு, தெற்கு என்று இரண்டு மாவட்டங்கள் வருகின்றன. மதுரை வடக்கு மாவட்டச் செயலாளராக பி.மூர்த்தியும், மதுரை தெற்கு மாவட்டச் செயலாளராக மணிமாறனும் இருக்கிறார்கள். இவர்களின் கட்டுப்பாட்டில் தலா மூன்று தொகுதிகள் வருகின்றன. இந்த ஆறு தொகுதிகளையும் தலா இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டம் என்று பிரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Also Read: மதுரை: ரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்வியைத் தவிர்த்த எல்.முருகன்!
மதுரை கிழக்கு, மேலூர் தொகுதிகளுக்கு மூர்த்தியும், உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளுக்கு மணிமாறனும், திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளுக்கு டாக்டர் சரவணனும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். அமைப்புரீதியாக இரண்டு தொகுதிக்கு ஓர் மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும் என்பதில் ஐபேக் தரப்பு விடாப்பிடியாக இருப்பதால், இந்த மாவட்ட பிரிப்புப் பணிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன” என்றனர்.
சமீபத்தில், மண்டல வாரியாக நிர்வாகிகளிடம் கலந்துரையாடிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இனிமேல் மாவட்டங்கள் பிரிக்கப்படாது’ என்று கூறியிருந்தாராம். ஆனால், ‘ஒரு மாவட்டத்தில் பிரித்துவிட்டு, மற்றொரு மாவட்டத்தில் பிரிக்கவில்லை என்றால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும்’ என்று ஐபேக் தரப்பு அழுத்தம் கொடுத்ததால், மாவட்ட பிரிப்புப் பணிகளை மீண்டும் முடுக்கிவிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். மதுரை புறநகர், காஞ்சிபுரம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட பிரிப்புக்கான பணிகள் வேகமெடுத்துள்ளதாகக் கூறுகிறது அறிவாலய வட்டாரம். விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்.
source https://www.vikatan.com/news/politics/arivalayam-is-decide-to-divide-madurai-dmk-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக