Ad

செவ்வாய், 1 டிசம்பர், 2020

விவசாயிகள் போராட்டம்; தமிழகத்திலும் தொடங்கியது - எடப்பாடி அரசுக்குப் புதிய நெருக்கடி!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தலைநகர் டெல்லியை உலுக்கிக்கொண்டிருக்கிறது. விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சற்று கீழே இறங்கிவந்த மத்திய அரசு, விவசாயிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வந்தது. மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் விவசாயிகளின் பிரநிதிகளுடன் டிசம்பர் 1-ம் தேதி மாலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், 7-வது நாளாக இன்றைக்கும் (டிச.2) டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

விவசாயிகள் போராட்டம்

இந்த நிலையில், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களில் தொடர் போராட்டங்களை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள் விவசாயிகள். டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் ஐந்தாவது நாளைத் தொட்ட நவம்பர் 30-ம் தேதி, தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இன்றைய தினம் (டிச.2) தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

தமிழகத்தில் விவசாயிகளின் இந்தப் போராட்டம் தீவிரமடையுமானால், அது அ.தி.மு.க அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். காரணம், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் அ.தி.மு.க ஆதரவு அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டங்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க எம்.பி-க்கள் வாக்களித்திருக்கிறார்கள். அ.தி.மு.க-வின் இந்த நிலைப்பாட்டால், அந்தக் கட்சி கடும் விமர்சனங்களை எதிர்க்கொண்டது. வேளாண் சட்டங்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டார்.

எடப்பாடி பழனிசாமி

அதில், `வேளாண் மசோதாக்களை எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலாக்குகிறார். தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் வேளாண் திட்டங்கள் இருக்கின்றன. வேளாண் சட்டங்களால் விவசாயிகள், கொள்முதல் செய்வோர் என இருவர் நலனும் பாதுகாக்கப்படும். கிராமப்புறங்களில் உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு உருவாகும்’ என்று கூறினார். அதற்கு, `விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கக்கூடிய சட்டங்களுக்கு ஆதரவாக மாநிலங்களவையில் அ.தி.மு.க வாக்களித்திருக்கிறது. `நான் ஒரு விவசாயி’ என்று இனியொரு முறை மேடைகளில் பேசாதீர்கள்... ப்ளீஸ்’ என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

தற்போது விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு மீண்டும் விவாதத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாளிடம் பேசினோம்.

``டெல்லியில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு முடிவுசெய்திருக்கிறது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்களைத் திட்டமிட்டு நடத்துங்கள் என்று ஒருங்கிணைப்புக்குழு கேட்டுக்கொண்டிருக்கிறது.

பெருமாள்

எனவே, தமிழ்நாட்டில் ஒருங்கிணைப்புக்குழுவில் இடம்பெற்றிருக்கும் அனைத்துச் சங்கங்களும் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளோம். இந்திய விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்த அ.தி.மு.க மீது விவசாயிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தின் தாக்கத்தால், தமிழகத்தின் பல இடங்களில் தன்னெழுச்சியாகவும் விவசாயிகள் போராட்டம் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இது, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் அ.தி.மு.க அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்” என்றார்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம்.

``2017-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 250 சங்கங்களைக் கொண்டதாக இருந்த ஒருங்கிணைப்புக்குழுவில், கடந்த செப்டம்பர் 27-ம் தேதிக்குப் பிறகு மேலும் 250 அமைப்புகள் இணைந்திருக்கின்றன. தற்போது, 500 அமைப்புகளைக்கொண்ட மிகப்பெரிய அமைப்பாக இது மாறியிருக்கிறது. தமிழகத்தில் இடதுசாரி அமைப்புகள் உள்ளிட்ட சுமார் 50 சங்கங்கள் இதில் இருக்கின்றன.

பாலகிருஷ்ணன்

தற்போது, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் சொல்கிற இடத்துக்குச் சென்றால் பேச்சுவார்த்தை என்று ஆட்சியாளர்கள் சொன்னார்கள். ஆனால், நிபந்தனை விதிக்கும் இடத்தில் அரசு இல்லை. நிபந்தனையைக் கேட்கும் இடத்தில் நாங்கள் இல்லை. `ஹரியானாவை விவசாயிகளால் தாண்ட முடியாது’ என்று சொன்னார்கள். ஹரியானாவைத் தாண்டிவிட்டோம். `டெல்லிக்குள் வர முடியாது’ என்றார்கள், டெல்லிக்குள் நுழைந்துவிட்டோம். இப்போது பஞ்சாப், ஹரியானாவைத் தாண்டி உ.பி., ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் எனப் பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கில் விவசாயிகள் டெல்லிப் போராட்டத்தில் பங்கேற்கச் செல்கிறார்கள்.

Also Read: விவசாயிகள் போராட்டத்தில் `ஷாஹீன் பாக்' பாட்டி கலந்துகொண்டாரா... - கங்கனா பதிவு உண்மையா? #FACTCHECK

தென் மாநிலங்களில் போராட்டங்களைத் தீவிரப்படுத்துங்கள் என்று ஒருங்கிணைப்புக்குழு கூறியிருக்கிறது. எனவே, தமிழகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்திருக்கிறோம். இன்றைக்கு (டிச. 2) காலையிலிருந்து அனைத்து மாவட்டங்களிலும் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்திவருகிறோம். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளார்கள். இதுபோல தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம். எங்கள் போராட்டம், மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரானது மட்டுமல்ல; விவசாயிகளுக்கு எதிரான இந்த வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் அ.தி.மு.க அரசுக்கும் எதிரானது.

விவசாயிகள் போராட்டம்

நாங்கள் முன்னெடுக்கும் போராட்டம் தமிழக அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். எதிர்க்கட்சிகள் ஆளும் ஆறு மாநிலங்களில் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். மூன்று மாநிலங்களில் எதிர்ச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் விவசாயிகளின் விளைநிலங்களுக்கே சென்று கொள்முதல் செய்வதென்று அறிவித்திருக்கிறார்கள். மேலும், கொள்முதலை அதிகரிக்கவும் செய்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே முதன்முறையாக அழுகக்கூடிய 15 காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கேரள அரசு அறிவித்திருக்கிறது.

அப்படியிருக்கும்போது, தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது என்கிற கேள்வியை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கப்போகிறோம். `நான் ஒரு விவசாயி’ என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாதாரண விவசாயி என்று நிரூபிக்க வேண்டும். ஆனால், தான் ஒரு கார்ப்பரேட் விவசாயி என்றுதான் அவர் நிரூபித்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான், கார்ப்பரேட்களுக்கு ஆதரவான இந்தச் சட்டங்களை ஆதரிக்கிறார்” என்றார் பாலகிருஷ்ணன்.

இது குறித்து அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலியிடம் கேட்டோம். ``மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மைபயக்கக் கூடியவை என்பதால்தான், அந்தச் சட்டங்கள் நிறைவேற நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரவாக வாக்களித்தது. அ.தி.மு.க அரசு என்ன செய்தாலும், அதை எதிர்க்க வேண்டும், அரசியல் செய்ய வேண்டும் என்று தி.மு.க செயல்படுகிறது. எனவே, அ.தி.மு.க அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக தவறான கருத்துகளை மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தது உள்பட விவசாயிகளுக்கு ஆதரவான பல திட்டங்களை அ.தி.மு.க அரசு செயல்படுத்திவருகிறது.

ஜவஹர் அலி

அதனால், விவசாயிகள் மத்தியில் அ.தி.மு.க அரசுக்கு நல்ல பெயர் இருக்கிறது. டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தாலோ, அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடக்கிற போராட்டத்தாலோ, தமிழக அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனென்றால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளின் பிரச்னைகள் வேறு, தமிழ்நாட்டு விவசாயிகளின் பிரச்னைகள் வேறு” என்றார் ஜவஹர் அலி.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/farmers-in-tamilnadu-are-planning-for-protest-against-farm-bills

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக