கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் என்ற பகுதி இருக்கிறது. அங்கு பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் ஆதிதிராவிடர் காலனி இருக்கிறது. அந்தப் பகுதியை ஒட்டி, மேட்டுப்பாளையம் செல்வந்தர்களின் ஓங்கி உயர்ந்த பங்களாக்களும் இருக்கின்றன. 2019, டிசம்பர் 1-ம் தேதி மேட்டுப்பாளையம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. டிசம்பர் 2-ம் தேதி, அடுத்த நாள் மேட்டுப்பாளையம் கண்ணீரில் தத்தளித்தது.
சிவசுப்பிரமணியம் என்பவரின் வீட்டு மதில் சுவர் இடிந்து விழுந்ததில், ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். எந்த விதிமுறையையும் பின்பற்றாமல், கருங்கற்களால் கட்டப்பட்ட அந்த 15 அடி உயரச் சுவர் குறித்து அந்த மக்கள் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தவே, சிவசுப்பிரமணியம் கைதுசெய்யப்பட்டார். நடூர் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும், மாற்று வீடு கட்டித்தரப்படும், இறந்தவர்களின் குடும்பங்களில் தகுதியானவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஏழு பேரை இழந்த கமலம்மாள் என்ற மூதாட்டிக்கு இழப்பீடு முழுவதுமாகச் சென்று சேரவில்லை. வாரிசுச் சான்றிதழ் இருந்தால்தான் இழப்பீடு கொடுக்க முடியும் என்று கறார் காட்டிவருகிறது அரசு நிர்வாகம்.
அதேநேரத்தில், ஜாமீனில் வெளிவந்த சிவசுப்பிரமணியம், மீண்டும் அதே இடத்தில் மதில் சுவரைக் கட்டிவிட்டார். கமலம்மாளிடம் கறார்காட்டும் அரசு, சிவசுப்பிரமணியம் சுவர் கட்ட அனுமதி வழங்கியிருக்கிறது. ஓராண்டு நிறைவடைவதற்குள், மதில் சுவர் மீண்டும் முளைத்துவிட்டது. ஆனால், தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்கின்றனர் நடூர் மக்கள். இந்தநிலையில், முதலாமாண்டு துக்கம் அனுசரிக்க, கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடூர் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
நடூர் மற்றும் மேட்டுப்பாளையத்தின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை தடுப்பதற்காக, முள்வேலிகளாலான தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
Also Read: 17 பேரின் உயிரைப் பறித்த ஒற்றைச் சுவர்... மேட்டுப்பாளையம் நடூரில் நடந்தது என்ன? முழு விவரம்!
நடூர் பகுதியில் மீண்டும் ஒரு போராட்டம் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அரசு, அந்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டிவருகிறது என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்தநிலையில், சிவசுப்பிரமணியம் கட்டியிருக்கும் மதில் சுவரில், பட்டியலின மக்களின் குடியிருப்புகளை நோக்கி, சிசிடிவி கேமராவும் வைக்கப்பட்டிருக்கிறது.
வீட்டில் இருந்தபடியே, இங்கே என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பதற்காகவே சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருப்பதாக நடூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ``அரசு இனியும் தாமதிக்காமல், நடூர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
source https://www.vikatan.com/news/tamilnadu/one-year-of-mettupalayam-wall-accident
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக