"பெருசா வசதி வாய்ப்பா வாழல. ஆனா, பாழாப்போன இந்த கொரோனா வந்து, அரைகுறையா வாழ்ந்து வந்த வாழ்க்கைக்கும் வேட்டு வச்சுட்டு. கொரோனாவை காரணம் காட்டி, என் வீட்டுக்காரர் வேலைபார்த்து வந்த மளிகைக் கடையில, அவரை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. கூலி வேலைக்குப் போகும் எனக்கும், சரியா வேலை இல்லை. மூணு மாசமா கஷ்டப் பொழப்பு நடத்திக்கிட்டு இருக்கோம். வருமானத்துக்கு வழியில்லாம, அனுபவம் இல்லாத இந்தத் தொழிலை இப்ப ரெண்டு வாரமா பார்த்துக்கிட்டு இருக்கேன்" - பொங்கிவரும் கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைத்தபடி ஆற்றாமையுடன் பேசுகிறார் பிரியா.
ஒரு மூங்கில் தட்டுக்கூடை. அதில் கொஞ்சம் வாழைப்பழம், பூசணிக்காய், எலுமிச்சம் பழம், பூ என்று வைத்துக்கொண்டு வியாபாரம் பார்த்து வருகிறார் பிரியா. கரூர் டு திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணராயபுரத்தில் சாலை ஓரமாக இருக்கும் கட்டையில் அமர்ந்துகொண்டு, யாரேனும் தன்னிடம் வியாபாரம் பார்த்துவிட மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு, சாலையை வெறிக்கிறார். ஆனால், பிரியாவிடம் பொருள்களை வாங்க எங்களுக்கு நேரமில்லை என்பதுபோல், வாகன ஓட்டிகள் சாலையில் விர்விர்ரென பறக்கிறார்கள். முகத்தில் விம்மி வெடிக்கும் சோகத்தை மென்று விழுங்கி உள்ளுக்குள் புதைத்துக்கொள்கிறார் பிரியா. அந்த வழியாகச் சென்ற நம் கண்களில் பிரியா எதேச்சையாகத் தென்பட்டார். அவரை சந்தித்துப் பேசினோம்.
Also Read: கரூர்: ``எங்க ஊர் வறட்சியைப் போக்கணும்!'' - காடு வளர்க்கும் ஊராட்சிமன்றத் தலைவி
"எனக்குச் சொந்த ஊரு சீத்தலாபுத்தூர். வீட்டுக்காரரு பேரு ராஜேந்திரன். எங்களுக்கு மூணு பொம்பளப் புள்ளைங்க. வீட்டுக்காரர், நாமக்கல் மாவட்டத்துல இருக்குற ஜேடார்பாளையம் பக்கத்துல உள்ள திருச்செல்பாளையத்துல உள்ள மளிகைக் கடையில 8,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைபார்த்துக்கிட்டு இருந்தாரு. நான் பூ எடுக்கிற வேலைக்குப் போறது, 100 நாள் வேலைக்குப் போறதுனு கூலி வேலை பார்த்தேன். பெருசா வருமானம் இல்லைன்னாலும், பக்கத்து வீட்டுக்காரங்க பொரணி பேசாத அளவுக்கு வாழ்ந்துக்கிட்டு இருந்தோம்.
ஊர்ல எங்களுக்குச் சொந்தமா வீட்டுமனை மட்டும் இருக்கு. ஆனா வீடு இல்ல. 1,000 ரூபா வாடகைக்கு ஒரு வீட்டுல குடியிருக்கோம். அரசு கட்டித் தர்ற பசுமை வீட்டைக் கட்ட, அலைஞ்சு திரிஞ்சதுதான் மிச்சம். இந்த நிலையிலதான், கொரோனா வந்து எங்க பொழப்புக்கு முன்னாடி இருட்டுத் திரைய விரிச்சுட்டுப் போயிட்டு.
கொரோனாவால வியாபாரம் இல்லைனு சொல்லி, என் வீட்டுக்காரரை வேலையைவிட்டு அனுப்பிட்டாங்க. எனக்கும் ஊர்ல கூலி வேலை கிடைக்காத நிலைமை. இதனால, சொற்ப வருமானமும் இல்லாம போயிட்டு. நாலு மாசமா வீட்டு வாடகை தரலை.
கையில இருந்த ஒரே தங்க நகையையும் அடகுவெச்சு வாடகையக் கொடுத்தோம், வாழ்க்கைய ஓட்டுனோம். அதுவும் போதாம கடனை வாங்குனோம்.
வருமானம் இல்லாம போய், கடனும் வாங்குற சூழலுக்கு வந்தாச்சு. இனியாச்சும் வருமானத்துக்கு ஏதாச்சும் வழி பண்ணியே ஆகணும்ல. ஆனா, என்ன பண்றதுன்னு புரியலை. அதான், தட்டுக்கூடையில இப்படி விக்க ஆரம்பிச்சுருக்கேன். அனுபவம் இல்லாததால நஷ்டமாதான் இருக்கு. இதுல நூறு ரூபா லாபம் வந்தாகூட அதிசயம்தான். இதை வச்சு எப்படி பொழப்ப ஓட்டுறதுனு புரியலை.
நெடுஞ்சாலையையொட்டிதான் எங்க எடம் இருக்கு. அதுல ஒரு டீக்கடை ஆரம்பிக்கலாம்னு நினைச்சா, கொட்டகை போட, பண்ட பாத்திரங்கள் வாங்கனு 40,000 ரூபாய்வரை தேவைப்படுது. ஆனா, கடன் கெடைக்கல. ஏற்கெனவே, மூணு பொம்பள புள்ளைங்கள எப்படி கரைசேர்க்கப் போறோம்னு முழிபிதுங்கி நின்னோம். இந்த நிலையில, எங்களுக்கு வந்துட்டு இருந்த வருமானத்துக்கும் வழியில்லாம பண்ணிட்டு இந்த கொரோனா. எப்போ எங்க நெலம சரியாகும்னு தெரியலையே சார்..." - விம்மினார் பிரியா.
எல்லா இரவும் விடியும் என்றே நம்புவோம்.
source https://www.vikatan.com/news/women/karur-priya-speaks-about-how-this-pandemic-impacted-her-family
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக