பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை நீர்த்தேக்கமாக மாற்றும் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் முடிவுக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுகின்றன. ஒரு காலத்தில் 6,000 ஹெக்டேருக்கு மேல் பரந்து விரிந்து பல்லுயிரின வளத்தின் உச்சமாகத் திகழ்ந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம், அரசின் அலட்சியத்தாலும் தனியாரின் ஆக்கிரமிப்பாலும் இன்று வெறும் 600 ஹெக்டேர்களாகச் சுருங்கிப்போயிருக்கிறது. அவற்றையும் இப்போது நீர்த்தேக்கமாக மாற்றுவது பல்லுயிரின வளத்துக்குச் சமாதி கட்டுவது போன்றது. இதை அரசும், அதிகாரிகளும் உணர வேண்டும் என்பதுதான் சூழலியலாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
பள்ளிக்கரணையின் இந்த முடிவு பற்றிப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ டாமின் பேசும்போது, ``மொத்தம் 625-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான உயிரினங்களை ஒரே இடத்தில் காண முடியுமென்றால் அது பள்ளிக்கரணை சதுப்பு நிலமாகத்தான் இருக்கும். இந்தியாவின் மாசுபட்ட பெருநகரங்களில் ஒன்றின் அதிக மாசுபட்ட நீர்நிலையில் குறிப்பாகத் தினமும் 5,000 மெட்ரிக் டன்களுக்கு மேல் மாநகராட்சிக் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் இவ்வுயிர்கள் இருக்கின்றன. எந்த ஒரு உயிரியல் பூங்காவிலும்கூட இத்தனை அதிக பல்லுயிரின வளத்தைப் பார்க்க இயலாது. அதுமட்டுமன்றி சென்னையின் பெரும் நிலப்பரப்புக்கு வெள்ள வடிகாலாகவும் நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கும் ஆதாரமாகவும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் திகழ்ந்து வருகிறது. இந்தியா முழுதும் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட பல்லுயிரின வளமிக்க 94 சதுப்புநிலங்களில் தமிழகத்தின் மூன்று இடங்களில் ஒன்றாகப் பள்ளிக்கரணை சதுப்புநிலம் சிறப்புப் பெறுகிறது. இவ்வளவு சிறப்புடைய பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.
இடத்தை ஆழப்படுத்தி, காம்பவுண்ட் சுவர் எழுப்பி, மதகுகள் அமைத்துத் தண்ணீர் நிரப்பப் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னை கார்ப்பரேஷனின் தண்ணீர்த் தொட்டியல்ல. அது மனிதரால் அமைக்கப்பட்ட ஏரியோ, நீர்நிலையோ அல்ல. மாறாக ஒரு செழிப்பு மிக்க வாழிடம். தற்போதுகூடப் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒரு பகுதியான பெரும்பாக்கத்தில் (சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் இடையே) சாலை விரிவாக்கத்துக்காகச் சதுப்புநிலத்தின் பெரும்பகுதி மண் நிரப்பப்பட்டு மூடப்பட்டு வருகிறது. இன்னொருபுறம் தனியாரின் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்காகத் தொடர்ந்து சதுப்புநிலம் சாலைகளாலும் கட்டடங்களாலும் நிரப்பப்பட்டு வருகிறது. ஒரு புறம் ஆக்கிரமிப்பு இன்னொருபுறம் தொடர்ந்து கொட்டப்படும் குப்பைகள், ஒலி, ஒளி மாசு, வரத்துக் கால்வாய்களின் சாக்கடை நீர் என இத்தனையும் தாண்டி உயிர்த்திருக்கும் இந்தப் பல்லுயிர் வளத்தைக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இந்த முயற்சியை உடனடியாகக் கைவிட்டு அதைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கைக்கொள்ளப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அரசை வலியுறுத்துகிறது. இறுதியாக இரண்டு விஷயங்கள் உண்டு. நீர்நிலைகள் நிச்சயமாகக் கோடைக்காலத்தில் வறண்டு போகத்தான் செய்யும்.
இப்போது இருக்கும் சதுப்பு நிலம் ஆழப்படுத்தப்பட்டால் வறட்சிக் காலங்களில் வெள்ளம் வற்றும்போது கடல்நீர் நிலத்தை நோக்கி உட்புகும் வாய்ப்பு உள்ளது. காவிரி டெல்டாவின் கடலோரப் பகுதிகளில் நீர்நிலைகள் வறண்டுபோவதால் கடல்நீர் உட்புகுவதை நாம் பார்த்து வருகிறோம். மேலும் அதிக மழை பெய்யும்போது சதுப்புநிலமானது ஸ்பாஞ்ச் போல நீரைப் பிடித்து வைத்துக்கொண்டு பின்னர் தன்னிலிருந்து நீரைக் சிறிது சிறிதாகக் கசியச் செய்யும். சதுப்புநிலம் ஆழப்படுத்தப்பட்டால் நிலம் அந்தத் தன்மையை இழந்துவிடும்.
பள்ளிக்கரணையில் வலசைப் பறவைகளின் வருகையும் மற்ற இயல் பறவைகளின் இனப்பெருக்கமும் மழைக்காலங்களுக்குப் பின்பே நடக்கும். ஆழப்படுத்தும்போது தண்ணீர் விரைவில் வெளியேறிவிடுவதால் பறவைகளின் இருத்தல் கேள்விக்குறியாகும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆழம் குறைந்த சதுப்புநில அமைப்புதான் இத்தனை பல்லுயிர்களை இதைநோக்கி இழுக்கிறது. அதன் நில அமைப்பு மாற்றப்பட்டால் அது பள்ளிக்கரணையில் நடைபெறும் பல்லுயிரின அழிப்பாகவே இருக்கும்" என்றார்.
சதுப்பு நிலம் என்பது என்ன? சதுப்பு நிலப்பகுதி என்பது தனிப்பட்ட ஒரு நிலப்பகுதி அல்ல. கடல்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளுடன் தொடர்புடைய முக்கியமான பகுதியாகும். ஓர் ஏரியின் உபரி நீரோ அல்லது ஆற்றினுடைய உபரி நீரோ நீண்ட காலமாக ஒரே இடத்தில் சேர்வதால் உருவாகும் நிலப்பகுதிதான் சதுப்பு நிலம். இந்த நிலப்பகுதியானது `ஸ்பாஞ்ச்' போலச் செயல்பட்டு நீரை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும். அத்துடன் மழைக்காலத்தில் நிலத்துக்கு வரும் தண்ணீரையும் தக்க வைத்துக்கொள்ளும். பிறகு வறட்சி நிலவும்போது தண்ணீரை வெளியேற்றி, நிலத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும். கடலின் அருகில் அமைந்திருப்பதால், கடல் பொங்கும் நேரத்தில் நிலத்துக்குள் வரும் நீரையும் தேக்கி வைக்கும் தன்மையும் சதுப்பு நிலத்துக்கு மட்டுமே உண்டு. இந்த நன்னீர் சதுப்பு நிலத்தில்தான் பல்லுயிர்களின் பெருக்கம் அதிகமாகக் காணப்படும்.
Also Read: வறண்ட பள்ளிக்கரணை ஏரி, உணவுக்கு திண்டாடும் பறவைகள்... படங்கள் - ஜெரோம்.கே படங்கள் - ஜெரோம்.கே
அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஹாரிஸ் சுல்தான் பேசும்போது, ``பள்ளிக்கரணை சதுப்பு நிலமும் கடல் மட்டமும் ஒரே சமநிலையில்தான் இருக்கின்றன. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறும் தண்ணீர், பக்கிங்ஹாம் கால்வாயில் ஒக்கியம் மடு என்ற இடத்தில் கலக்கிறது. அந்த ஒக்கியம் மடுவின் கடல் மட்ட உயரம் 4 மீட்டர் என்பதால் பள்ளிக்கரணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் மெதுவாகத்தான் வெளியேறும். அதனால்தான் பள்ளிக்கரணை அதிகமான தண்ணீரைச் சேமித்துக் கொள்கிறது. இதனால் எப்போதும் நீர் இருந்துகொண்டே இருக்கும். அந்த நிலம் மொத்தமாக உயிர்ச்சூழல் மண்டலமாக மாறும். 1980-களில் வெளிநாட்டிலிருந்து வந்த குழுவினர் செய்த ஆராய்ச்சியின் முடிவு இன்று யார் கேட்டாலும் அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். அந்த ஆராய்ச்சியின் முடிவு `எவ்வளவு வறட்சி வந்தாலும் சென்னைக்குத் தேவையான தண்ணீரை பள்ளிக்கரணை கொடுக்கும்’ என்பதுதான்.
உலகிலேயே இயற்கையாக அமைந்த 4 சதுப்பு நிலங்களில் பள்ளிக்கரணையும் ஒன்று. ஆனால், இன்று அரசாங்கமே கங்கணம் கட்டிக்கொண்டு சீரழித்துக்கொண்டிருக்கிறது. கடல் நீரை நிலத்துக்குள் புகாமலும், அதிகப்படியான நன்னீரை தன்னகத்தில் சேமித்து வைத்துக்கொள்வது இயற்கையின் வரப்பிரசாதம். பள்ளிக்கரணை சதுப்பு நில எல்லைகள் அளவீடு செய்யப்பட வேண்டியதுதான். ஆனால், அதை நீர்நிலையாக மாற்றுவது மிகப்பெரிய அபத்தமான செயல். ஒரு பல்லுயிர்ச்சூழல் மண்டலத்தை அடியோடு ஒழிக்கும் செயலை மாநகராட்சியோ, அரசாங்கமோ உடனடியாக நிறுத்தியாக வேண்டும். பள்ளிக்கரணை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலத்தைக் கையகப்படுத்தி சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, அதை அழிக்கக் கூடாது. இயற்கை என்பது மிகப்பெரிய அறிவியல் அதற்கு மாறாகச் செயல்பட்டால், விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும்" என்றார்.
மழைக்காடுகளை எப்படி உலகின் நுரையீரல் என்று சொல்கிறோமோ, அதைப் போல் சதுப்பு நிலங்களை `பூமியின் சிறுநீரகம்’ என்று சொல்கிறார்கள். ஆனால், இன்று சென்னையின் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் இருக்கிறது. அதற்கு டயாலிசிஸ் செய்வதை விட்டுவிட்டு, அரசு அதைப் பிடுங்கி எடுக்கப் பார்க்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/environment/environmental-activists-opposing-pallikaranai-marshland-dredging
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக