ராணிப்பேட்டை மாவட்டம், சீக்கராஜபுரம் பல்லவர் நகரைச் சேர்ந்தவர் விவசாயி கிஷோர். இவருடைய மனைவி லதா. இந்தத் தம்பதியருக்கு 16 வயதில் நரேஷ், நவீன் என்ற இரட்டையர் மகன்களும், 14 வயதில் வரலட்சுமி என்ற மகளும் இருந்தனர். இரட்டைச் சகோதரர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில், 10-ம் வகுப்பு படித்துவந்தனர். இவர்கள் இருவரும் பொன்னை ஆற்றில் பாய்ந்தோடும் வெள்ளப்பெருக்கைப் பார்ப்பதற்காக நேற்று மாலை சென்றனர்.
கரைபுரண்டு ஓடிய தண்ணீரில் குளிக்க ஆசைப்பட்ட இருவரும், அங்குள்ள தரைப்பாலம் வழியாக ஆற்றில் இறங்கியிருக்கிறார்கள். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட சுழலில், நவீன் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார். அவரை மீட்க முயன்ற நரேஷும் சுழலில் சிக்கினார். இருவரும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினர்.
Also Read: தண்ணீரில் மூழ்கிய இளைஞர்கள்! சேலையை வீசிக் காப்பாற்றிய வீரத் தமிழச்சிகள்!
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீச்சல் தெரிந்த சிலர், உயிரைப் பணயம்வைத்து ஆற்றில் குதித்து இரட்டையரின் உடல்களை தேடிப்பிடித்து கரைக்குத் தூக்கி வந்தனர். பின்னர், அருகிலுள்ள திருவலம் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.
இதைக் கேட்டு இரட்டையரின் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். திருவலம் போலீஸார், இரட்டையரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம், சிப்காட் காவல் நிலையத்துக்குட்பட்டு நடந்திருப்பதால், அந்தக் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்துவருகிறார்கள்.
source https://www.vikatan.com/news/crime/ranipet-twin-brothers-drowned-in-ponnai-river
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக