புரெவி புயலைத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, கரூர் மாவட்ட அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதைப் பார்க்க ஆவலுடன் வரும் கரூர்வாசிகள் பலரும் செல்ஃபி எடுக்க முயற்சிக்க, 'ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீங்க' என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
Also Read: கரூர்: அமராவதி ஆற்றுக்குள் சாக்கடைக் கால்வாய்... தாமாக வழக்கை எடுத்த உயர் நீதிமன்றக் கிளை
புரெவி புயலைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொடர் கனமழை பெய்தது. அதன்காரணமாக, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள அமராவதி அணை, அதன் முழு கொள்ளலவை எட்டியது. இதனால், அமராவதி அணையில் இருந்து, அமராவதி ஆற்றில் 4,450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த வருடத்தில் முதன்முறையாக, அமராவதி ஆற்றில் தண்ணீர் வந்ததால், கரூர் நகரின் மையப்பகுதியான லைட்ஹவுஸ் கார்னர் பகுதியை கடந்துசெல்லும் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை காண பொதுமக்கள், சுற்றுலா தளத்தில் கூடுவதைப் போல பார்வையிட்டு வருகின்றனர்.
அதேசமயம், இளைஞர்களும், பெண்களும் பாலத்தின் ஓரத்தில் உள்ள குடிநீர் குழாய்களுக்கு மேலே ஏறி, ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து வருகின்றனர். 'இது ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் செயல்' என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து, நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர்,
"வறண்டு கிடந்த அமராவதி ஆற்றில் ஒரு வருடத்துக்குப் பிறகு தண்ணீர் வருவதால், கரூர்வாசிகள் அதை ஆர்வமாக பார்க்க வருகின்றனர். ஆனால், இளைஞர்களும், பெண்களும் தண்ணீர் குழாய் கட்டையில் ஏறி நின்று, செல்ஃபி எடுக்க முயல்கிறார்கள். இது ஆபத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நின்று இப்படி செல்ஃபி எடுக்க முயன்ற பலர், தண்ணீரில் சிக்கி இறக்க நேரிட்டிருக்கிறது. கடந்த நவம்பர் 5 - ஆம் தேதி மாயனூர் கதவணையை ஒட்டியுள்ள துணை வாய்க்காலில் ஓரமாக நின்று குளிக்கும் போது செல்ஃபி எடுத்த கரண் என்ற வயது 18 என்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியானார். இதேபோல, கரூர் நகர பகுதியில் உள்ள எல்.ஜி.பி நகரைச் சேர்ந்த பாபு என்பவரது மகன் யு.கே.ஜி படித்து வந்தான்.
கடந்த 2018 ஆகஸ்ட் 20-ஆம் தேதி காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரை காண வாங்கல் அருகே உள்ள வாங்கல் மோகனூர் காவிரி பாலத்தின் மீது குழந்தையை வைத்து செல்ஃபி எடுத்த போது தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று நாள் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோக சம்பவங்களின் வடுக்கள் இன்னும் ஆறாத சூழ்நிலையில், தற்பொழுது, அமராவதி ஆற்றுப் பாலத்தின் மேலே நின்று செல்ஃபி எடுக்கும் பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகம், அமராவதி ஆற்றில் ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்க முயலும் இளைஞர்களை கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/karur-youths-take-selfi-in-amaravathi-river
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக