நிவர் மற்றும் பரெவி புயலால் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகை தொகுதிக்கு வருகை தந்தார்.
காலையில் முதல் விசிட்டாக நாகூர் தர்காவுக்கு வந்த முதல்வரை, நாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி மற்றும் தர்ஹா நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
பிறகு முதல்வருடன வந்த அமைச்சர்கள் வேலுமணி, மணியன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கும் தர்கா நிர்வாகத்தினர் பாரம்பரிய மரியாதையும், வரவேற்பும் அளித்தனர்.
Also Read: நாகூர்: தொடர் கனமழை... சமீபத்தில் கட்டப்பட்ட தர்கா குளம் சுற்றுச்சுவர் சரிந்தது!
பின்னர் முதல்வர் கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த தர்கா குளத்தை பார்வையிட்டார். அப்போது தமிமுன் அன்சாரி, `இக்குளத்தை பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து மறுசீரமைப்பு செய்து கொடுக்குமாறு" முதல்வரிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த தர்காவுக்கு, தான் சிறுவயதில் வந்ததாக குறிப்பிட்ட முதல்வர், `இதை கவனத்தில் கொள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.
பின்னர், நாகை மற்றும் நாகூர் கடற்கரைப் பகுதிகளை சிறந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்குமாறும், மழையால் பாதித்த விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என்றும், மழையில் பாதித்த வீடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தார்.
நம்பியார் நகரில் மீன்பிடி இறங்கு தளத்திற்கு, சுற்றுசூழல் அனுமதி பெற்று கொடுத்ததற்காக நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார். முதல்வருக்கு டாக்டர் ஹபீப் முகம்மது எழுதிய "வேதவரிகளும், தூதர் மொழிகளும் "என்ற நூலையும், விவேகானந்தரின் பொன்மொழிகள் என்ற நூலையும் தமிமுன் அன்சாரி பரிசளித்தார்.
தர்கா வாசலில் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தபிரவீன் நாயர், மத்திய மண்டல ஐ.ஜி .ஜெயராம் நகராட்சி ஆணையர் ஏகராஜ் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/tn-cm-visit-nagapattinam-mla-request-25000-rupees-for-an-acre
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக