Ad

புதன், 2 டிசம்பர், 2020

மயிலாடுதுறையில் கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா விற்பனை - குறிவைத்துப் பிடிக்கும் போலீஸ்!

மயிலாடுதுறை நகரில்  பல்வேறு இடங்களில்,  குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி, சீரழிந்துவருவதாகவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குப் புகார் வந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவின் பேரில், தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், காவலர் கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர  சோதனையில் ஈடுபட்டனர்.

கஞ்சா

அப்போது, சித்தர்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதை ரகசியத் தகவல் மூலம் அறிந்த தனிப்படை போலீஸார், விற்பனையில் ஈடுபட்ட சீர்காழி வேட்டங்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பழனி  (வயது 19), செங்கல்பட்டு வேதாரண்யபுரம் பகுதியைச் சேர்ந்த தாவூத் மகன் வாஸித்தா என்கிற கார்த்தி ( வயது 21), மயிலாடுதுறை திருவிழந்தூரைச் சேர்ந்த போண்டா என்கிற ராம்குமார் (23) ஆகிய மூன்று பேரைக்  கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அதே போன்று மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற பங்காளி வினோத், அம்மா மணிகண்டன் ஆகிய இரண்டு பேரை மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு தலைமையிலான போலீஸார் சுற்றிவளைத்துக் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Also Read: தேனி : 5 சென்ட் நிலம்; 150 செடிகள்! - மீண்டும் தலைதூக்குகிறதா கஞ்சா சாகுபடி?

மயிலாடுதுறையின் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக, அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களுக்கு மக்கள் தகவல் அளிக்குமாறும், இது குறித்து தகவல் அளிப்பவர்களின் அடையாளம் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்படும் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

கஞ்சா விற்பனை - கைது

மேலும், கஞ்சா விற்பனை குறித்துத் தகவல் அளிப்பவர்களுக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். கஞ்சா விற்பனை குறித்த எச்சரிக்கை விளம்பரப் பலகையும் வைக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி  சில இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதுதான் கொடுமை.



source https://www.vikatan.com/news/crime/mayiladuthurai-police-grills-city-over-ganja-sales

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக