Ad

புதன், 2 டிசம்பர், 2020

புரெவி புயல்: `இயற்கையைச் சீரழிக்கும்போது பேரிடர்கள் நம்மைத் தாக்கும்!’ - சுப.உதயகுமார்

பச்சை தமிழகம் கட்சி நிறுவனர் சுப.உதயகுமார் தலைமையில் அனைத்துக் கட்சி விவசாயிகள் ஆதரவுக்குழு சார்பில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் விவசாய வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், விவசாயிகள் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

பின்னர் சுப.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``ஒட்டுமொத்த இந்தியாவே கொரோனாவில் போராடிக்கொண்டிருக்கும்போது, அவசர அவசரமாக மூன்று வேளாண் சட்டங்களை நாட்டு மக்கள் மீது திணித்தது மத்திய அரசு. விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள், டெல்லி மாநகரில் கடும் குளிரையும், காற்று மாசையும், பெருந்தொற்றையும் தாங்கிக்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மனு அளிக்க வந்தவர்கள்

விவசாயிகள் ஏழு நாள்களாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். முதலில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு, இப்போது அவர்களைப் பற்றி வதந்திகளையும், வீண் புரளிகளையும் கிளப்பிவிடுகிறது. இங்கே போராடுகிறவர்கள் விவசாயிகளைபோலத் தெரியவில்லை என்றும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், இடைத்தரகர்களும் போராட்டத்தைத் தூண்டிவிடுவதாகவும் பிரதமரும், சில மத்திய அமைச்சர்களும் கூறுகிறார்கள். மேலும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போராடுவதாகச் சொல்கிறார்கள். வேறு சிலர், விவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாதிகள் மற்றும் மாவோயிஸ்டுகளும் ஊடுருவியிருப்பதாக வதந்திகளைப் பரப்பி, அந்தப் போராட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் விளைநிலங்களைக் காப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் விவசாயப் பெருமக்களை கொச்சைப்படுத்தி போராட்டத்தை முறியடிக்க முயல்கிறார்கள். எனவே, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என வலியுறுத்தியும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம்.

சுப.உதயகுமார்

தமிழ்நாட்டின் வேளாண்துறை அமைச்சரின் மரணத்துக்குப் பிறகு அவர் விவாதிக்கப்படுகிறார். அவரின் பினாமிகள் பிடிக்கப்பட்டு தனித்தனியாகக் கொண்டு சென்று விசாரிக்கப்பட்டுவருகிறார்கள். அங்கு ஏதோ ஒரு மர்மம் நிலவுகிறது. முதல்வரோ, பிற அமைச்சர்களோ அது பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். வேளாண்துறை அமைச்சரின் நிலையே இப்படியிருந்தால் வேளாண்துறை எப்படியிருக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரியும். வேளாண்துறையில் விவசாயிகளின் மானியங்களை வேறு சிலரின் பெயரில் வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். வேளாண்துறையில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்க முடியாத மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை அழித்து ஒழிப்பதில் கவனமாக இருக்கிறது.

தமிழகத்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது புயல் வருகிறது. நம்முடைய சுற்றுச்சூழலை மோசமாக்கிவைத்திருக்கிறோம். பருவகாலம் மோசமடைந்ததால், உலகமே மிகப்பெரிய சீர்கேடுகளை சந்தித்துவருகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் போராடும்போது, வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது, தேசத்துரோகிகள் என்றெல்லாம் கூறுகிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தவறியதால் ஒரே வாரத்தில் இரண்டாவது புயலை தமிழகம் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கூடங்குளம் அணு உலை விரிவாக்கம் தொடர்ந்து நடக்கிறது. குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல்மின் நிலையம், கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளம் என்று ஏராளமான அழிவுத் திட்டங்களை நம் மீது திணித்துக்கொண்டிருக்கிறார்கள். இயற்கையை நாம் சீரழிக்கும்தோறும் இம்மாதிரியான ஆபத்துகளும், பேரிடர்களும் நம்மை மீண்டும் மீண்டும் வந்து தாக்கும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இது போன்ற அழிவுத் திட்டங்களை மக்களிடம் திணிக்கக் கூடாது’’ என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/udhayakumar-on-burevi-cyclone-and-farmers-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக