தூத்துக்குடி மாவட்டம் மேலத்திருச்செந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனை கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைத்தார் திருச்செந்தூர் தொகுதி தி,மு.க எம்.எல்.ஏம், தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன். இதையடுத்து, “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவில் வெற்றி பெற்ற மகாராஜனை, கூட்டணிக்கட்சியில் இருந்து கொண்டே தி.மு.கவில் சேர்த்து விட்டார் அனிதா அண்ணாச்சி. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வி.சி.க வாக்குகள் கணிசமாக உள்ள 6 வார்டுகளை வி.சி.கவுக்கு ஒதுக்கித்தரும்படி கேட்டோம்.
அதற்கு அவர் ஒரு வார்டைக்கூட ஒதுக்கித் தரவில்லை. கூட்டணிக் கட்சியிலுள்ள எங்க கட்சியை வளரவிடாமல் தடுக்கிறார்” என வி.சி.கவினர் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் கூறினார்கள். இது தொடர்பாக தி.மு.க., வி.சிகவிடையே கருத்து மோதல் உருவானது. இந்நிலையில், ”அனிதா ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து போனில் நான் விளக்கம் கேட்டபோது ஒருமையில் பேசினார், அவரது ஆதரவாளரகள் என்னை மிரட்டினர்கள், அனிதா ராதாகிருஷ்ணனால் தன் உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளது” என அனிதா மீது திருச்செந்தூர் ஏ.எஸ்.பி., ஹர்ஷிங்கிடம் புகார் மனு அளித்தார் தெற்கு மாவட்ட வி.சி.க செயலாளர் முரசு தமிழப்பன்.
இதையடுத்து கடந்த 2-ம் தேதி, எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணனைக் கண்டித்து திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் 50-க்கும் மேற்பட்ட வி.சி.கவினர் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்நிலையில், நேற்று வி.சி.கவின் தெற்கு மாவட்டச் செயலாளர் முரசு தமிழப்பன் மற்றும் செய்தி தொடர்பு மைய மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து உள்ளிட்டோர் தனது கட்சியினர் சிலருடன் திருச்செந்தூர் ரயிலடி விநாயகர் கோயில் அருகே பேசிக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் இரும்புக்கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் வேம்படிமுத்துவை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இத்தாக்குதலால் வேம்படிமுத்துவின் தலை மற்றும் கையில் பலத்த காயத்துடன் திருச்செந்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வேம்படிமுத்துவை தாக்கிச் சென்ற கும்பல், தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள்தான் எனவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றம்சாடுகின்றனர் வி.சிகவினர்.
இத்தாக்குதல் சம்பவம் குறித்து தூத்துக்குடி வி.சி.க தெற்கு மாவட்டச் செயலாளர் முரசு தமிழப்பனிடம் பேசினோம், “திருச்செந்தூர் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல உள்ள பிள்ளையார் கோயில் பக்கத்துல நிர்வாகிகளுடன் பேசிக்கிட்டிருந்தோம். அப்போ ஒரே புல்லட் பைக்கில் மூணு பேரு வந்தாங்க. எங்க பக்கதுல வந்தப்போ, பின்னாடி உட்கார்ந்திருந்த ரெண்டு பேரும் கட்டை, இரும்புக்கம்பியால வேகமாக அடிச்சாங்க. ”அண்ணாச்சிக்கு எதிரா ஆர்ப்பாட்டமா நடத்துறீக?”ன்னு சொல்லியே அடிச்சாங்க. இதுல வேம்படி முத்துவுக்கு தலையிலயும், இடது கையிலயும் பலமான காயம் ஏற்பட்டுடுச்சு.
எம்.எல்.ஏ., அனிதாவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைச்சது வேம்படி முத்துதான். ஏற்கெனவே என்னை ஒருமையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக நான் அவர் மேல கொடுத்த புகார் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்ல. இப்போ வேம்படிமுத்து தாக்கியது அனிதாவின் ஆதரவாளர்கள்தான். சி.சி.டி.வி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்தும், எங்களோட புகாரின் அடிப்படையிலும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரிய அளவுல போரட்டம் நடத்துவோம்” என்றார். இதற்கிடையில் வி.சி.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இச்சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/politics/attack-on-vck-party-member-complaint-against-trichendur-dmk-mla
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக