Ad

செவ்வாய், 8 டிசம்பர், 2020

`எங்களுக்கு சம்பளம் எங்கே?’ - புதுச்சேரி அமைச்சரை முற்றுகையிட்ட ரேஷன் கடை ஊழியர்கள்

காரைக்காலில் புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி, கலெக்டர் காரை வழிமறித்து ரேஷன்கடை  ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டது.  அமைச்சரிடம் ஊழியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ரேஷன் ஊழியர்கள் கேள்விக்கு அமைச்சர் பதில் கூற முடியாமல் திணறவே, போலீஸார் அமைச்சரை பாதுகாப்பாக கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்துச்  சென்றனர்.

ரேஷன்கடை ஊழியர்கள்

நேற்று மாலை புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச்  சுற்றிப்பார்க்க  காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மாவுடன் காரில் வந்தார். கலெக்டர் அலுவலகம் எதிரில் அமைச்சரின் காரை  ரேஷன் கடை ஊழியர்கள் வழி மறித்தனர். கலெக்டர் அலுவலகம் எதிரில் அம்பேத்கார் வீதியில் நடந்த மறியலால் போக்குவரத்து பாதித்தது

அமைச்சரை சாலையில் நிறுத்தி, ஊழியர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். ஒரு கட்டத்தில் ஊழியர்களின் கேள்விகளுக்கு பதில் கூறமுடியாத அமைச்சர் கந்தசாமி, ஊழியர் ஒருவரைப் பார்த்து, ``நீ என்ன பாரதிய ஜனதாக் கட்சியா? "என்று ஆவேசத்துடன் கேட்டார். ``ஊழியர்களின் பிரச்னையைப் பேசாமல் எதற்காக கட்சி, அது இது என்று பிரச்னையை திசை திருப்புகிறீர்கள்?" என்று ஆவேசத்துடன்  ஊழியர்கள்  கூற, அமைதியானார் அமைச்சர் கந்தசாமி.

ரேஷன்கடை ஊழியர்கள்

தொடர்ந்து ஊழியர்களிடம் அவர் பேசுகையில், ``முதல்வருடன் கலந்து பேசி ஒருவாரத்தில், கவர்னர், தலைமைச் செயலரைச்  சந்தித்து இறுதி முடிவெடுக்க உத்தேசித்துள்ளேன்.  இதில் தீர்வேதும் ஏற்படாவிடில், எனது அமைச்சர் பதவி போனாலும் பரவாயில்லை... உங்களுடன் போராட்டத்தில் பங்கேற்று போராடவும் தயங்க மாட்டேன்" என்றார். அப்போது ஊழியர்கள் "இதைத்தானே நான்கு வருடங்களாகச் சொல்லி எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை. ஆசிரியர்களை வைத்து அரிசி தருகிறீர்கள். கவர்னருக்கு அதிகாரமென்றால், அப்புறம் எதற்கு உங்களுக்கு அமைச்சர் பதவி? கவர்னரை எதிர்த்து போராடுவோம் வாருங்கள். ஒரே நாடு ஒரே ரேஷன் என்றால், எங்களுக்கு சம்பளம் எங்கே?  " என்று கூச்சலிட்டனர்.

தொடர்ந்து அமைச்சர் பேசுகையில்,``கூட்டுறவு, குடிமைப்பொருள் பாசிக், பாப்ஸ்கோ, மில் எல்லாமே எனது துறைதான். மக்களுக்கு சேவை செய்வதற்காகதான்  இந்தத் துறைகளைக் கேட்டு வாங்கினேன். 10,000 பேருக்கு சம்பளமில்லாமல் இருக்கிறது. 9,500 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

போனமுறை ரங்கசாமி ஆட்சியில் ஒன்றரை வருடம் சம்பளமில்லை. எங்கள் ஆட்சியிலாவது சரி செய்யலாம் என்று முயன்றோம். முடியவில்லை. கவர்னருக்கு அதிகாரமா? முதல்வருக்கு அதிகாரமா என்று கேட்கிறீர்கள்? நியாயமான கேள்விதான். அப்படித்தான் கவர்னர் நடந்து கொள்கிறார். உங்கள் பிரச்னையை விரைவில் தீர்ப்பதற்கு  முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்" என்ற அமைச்சர் கந்தசாமி காரில் ஏறப்போனார். ஊழியர்கள் அமைச்சரின் காரை நகர விடவில்லை. 

பொறுமையிழந்த அமைச்சர், சாலையில் நடந்து சென்றார். அவருடன் கலெக்டர் அர்ஜுன் சர்மாவும் நடந்து போனார்.  ஊழியர்களின் நெரிசலிலிருந்து அமைச்சரை மீட்ட போலீஸார் , அவரை பாதுகாப்பாக வி.ஐ.பி. சூட் நோக்கி அழைத்துச் சென்றனர். கலெக்டர் அலுவலகத்திலிருந்த அமைச்சரை சந்திப்பதற்கு ஊழியர்களின் பிரதிநிதிகள் சென்றனர். தொடர்ந்து  சாலையில் அமர்ந்து கொண்ட ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் கொட்டும் மழையில் முதல்வர், அமைச்சருக்கு எதிராகவும் கோஷமிட்டபடி இருந்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/ration-shop-employees-staged-protest-in-karaikal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக