ஒரு நாளை சிறப்பாகவும் முழுமையாகவும் ஆக்க, அந்நாளில் உங்கள் காலை மூட் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத காலைப் பழக்கங்கள் என்னென்ன தெரியுமா...
`ஸ்னூஸ்' வேண்டாம்..!
காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்கும் இயல்புள்ளவரா நீங்கள்? அப்படியென்றால் `ஸ்னூஸ்' பட்டனை அழுத்தும் பழக்கத்துக்கு குட்-பை சொல்லுங்கள். நீங்கள் `ஸ்னூஸ்' பட்டனை அழுத்திவிட்டு மீண்டும் உறங்கும்போது, மறுபடியும் ஒரு தூக்கநிலைக்குள் நுழைகிறீர்கள். ஆனால், அந்தத் தூக்கத்தை நீங்கள் நினைக்கும் அளவுக்கு முழுமையாகத் தூங்க முடியாது. அடுத்த 10 நிமிடங்களுக்குள் மறுபடியும் அலாரம் அடிக்க ஆரம்பித்துவிடும். பாதித் தூக்கத்தில் மறுபடியும் எழ நேரிடும். இதனால் புத்துணர்வுடன் அன்றைய நாளை ஆரம்பிப்பதற்கு பதிலாக சோர்வுடன் தொடங்க வேண்டியிருக்கும். மாறாக, இரவில் சீக்கிரம் உறங்கச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இரவில் சீக்கிரம் படுத்தால் காலையில் அலாரத்தின் துணை இல்லாமலேயே `டானெ'ன்று எழுந்துவிட முடியும்.
காலை எழுந்தவுடன் ஸ்மார்ட்போனா?!
காலையில் எழுந்தவுடனேயே ஸ்மார்ட்போனை கையில் எடுக்கும் பழக்கத்தைத் தவிருங்கள். எழுந்தவுடன் போனைக் கையில் எடுத்தால் அதில் வந்திருக்கும் உங்களது வேலை சார்ந்த செய்திகள், தகவல்கள், மின்னஞ்சல்கள் போன்றவை உங்களுக்கு ஒருவித பரபரப்பை, பதற்றத்தை உண்டு பண்ணக் கூடும். இப்பதற்றம் அன்றைய நாள் முழுக்கத் தொடரும். அதனால் குளித்து, காலை உணவைச் சாப்பிட்டு முடிக்கும்வரை ஸ்மார்ட்போனைத் தொட வேண்டாம்.
இனிப்புடன் இந்நாள்..!
காலை உணவில் இனிப்பைச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால், அது செயற்கை இனிப்பாக இல்லாமல் பழங்கள், நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட ஸ்மூத்திபோல இருக்கட்டும். இனிப்புக்கும் அன்றைய நாள் சிறப்பாகத் தொடங்குவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். தொடர்பு இருக்கிறது. உடலின் சர்க்கரை அளவு குறையும்போது எரிச்சல், கோபம் போன்றவை தலைதூக்கும். இது அன்றைய ஒட்டுமொத்த நாளையும் பாதித்துவிடும். எனவே, கொஞ்சம் இனிப்புடன் ஆரம்பிக்கலாம் இந்நாளை. ஆனால், இது ஹெல்தி ஆட்களுக்கு. சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையை மீறக்கூடாது.
காபியும் ஹார்மோனும்!
நீங்கள் காபி பிரியரா? அப்படியென்றால் இந்தச் செய்தி உங்களுக்காகத்தான். காலையில் 9.30 மணிவரை காபி பருகக்கூடாது என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். காலையில் 8 - 9 மணி வரையிலும்தான் உடலின் ஆற்றலை ஒழுங்குபடுத்தும் கார்ட்டிசால் என்கிற ஸ்டிரெஸ் ஹார்மோனை நமது உடலானது அதிக அளவில் சுரக்க வைக்கும். அந்த நேரத்திலோ, அதற்கு முன்போ காபியைப் பருகினால் நம்முடைய உடலானது கார்ட்டிசால் ஹார்மோன் செய்கின்ற வழக்கமான பணியைக் குழப்பிவிட்டுவிடும். இதன் காரணமாக, மதியம் சாப்பிட்டு முடித்தவுடன் தூக்கம் கண்ணைச் சொருகிக்கொண்டு வருமில்லையா? அந்த உணர்வு காலையிலேயே தோன்றிவிடுமாம். எனவே, காலை 10 மணிக்குப் பிறகு அல்லது நண்பகல் வேளையில் காபி பருகுவதே சரியானது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
அப்படியென்றால் 10 மணிவரைக்கும் நான் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? ஒரு டம்ளர் வெந்நீர் பருகுங்கள். 10 மணிக்குப் பிறகு காபி அருந்தப்போகிறோம் என்கிற மகிழ்ச்சியான உணர்வோடு அதை எதிர்பார்த்திருங்கள்.
தண்ணீர் தெரபி!
தினமும் இரவு 7, 8 மணிநேரம் வரை ஆழ்ந்து தூங்கி எழுந்த பிறகு, உங்களது உடலுக்குத் தண்ணீர்ச்சத்து தேவைப்படும். எனவே, காலையில் தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிப்பது உங்களது உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் உடலின் வளர்சிதைமாற்றம் சரியான திசையில் பயணிக்க உதவும். வெறும் தண்ணீர் குடிக்க என்னால் முடியாது என்பவர்கள் தண்ணீரில் சிறிது எலுமிச்சை பிழிந்து குடிக்கலாம். இதன்மூலம் கல்லீரலில் இருக்கின்ற நச்சுகள் வெளியேறுவதோடு மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்க முடியும். மலச்சிக்கல் இல்லாமல் பொழுது விடிந்தாலே அன்றைய ஒட்டுமொத்த நாளும் சிறப்பாக அமையும். அதுமட்டுமல்லாமல் உடல் எடை குறைவது, நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாவது, மூளையின் செயல்திறன் மேம்படுவது போன்ற பல நன்மைகளும் தண்ணீர் குடிப்பதால் கூடுதலாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடற்பயிற்சி கட்டாயம்!
தினம் காலை வாக்கிங், யோகா, வார்ம்அப் என ஏதாவது ஓர் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கு உதவுவது ஒருபக்கம் என்றால், தினசரி நாளை சிறப்பாக்கவும் உதவும். குறிப்பாக, காலையில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. காலையில் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்வதால் உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். இந்தப் புத்துணர்ச்சி நாள் முழுக்க இயங்கத் தேவையான ஆற்றலைக் கொடுப்பதோடு இரவில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கவும் வழிவகுக்கும்.
இருள் விலகாத காலையில் வேலையா... ஸ்விட்ச் ஆன் லைட்ஸ்!
24 மணி நேர நாளின் சுழற்சிக்கு ஏற்ப பசி, தூக்கம், தாகம் போன்ற உடலின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் முக்கியப் பணியை உடலின் `சிர்க்கேடியன் ரிதம் (Circadian Rhythm) என்கிற உயிரியல் நிகழ்வுகள் செய்கின்றன. இதைத்தான் நாம் Internal Clock என்று அழைக்கிறோம். இருட்டில் இருக்கும்போது நமக்குத் தூக்கம் வருவதும், சூரியன் வந்ததும் நாம் சுறுசுறுப்பாக மாறுவதும் இதனால்தான்.
அதனால், காலையில் சூரியன் வருவதற்கு முன்னரே நீங்கள் எழுந்துவிட்டால் மூளைக்கு வேலைகொடுக்கும் வேலையைச் செய்யாதீர்கள். இருளை உணரும் உடலின் Internal Clock, `ஆனால் இந்த இருள் தூங்கும் நேரம்தானே...' என்று சொல்லி உங்களை மந்தமாக்கிவிடும். ஒருவேளை வேலைகள் தவிர்க்க முடியாமல் செய்ய வேண்டியிருந்தால், விளக்குகளை ஸ்விட்ச் ஆன் செய்து வெளிச்சம் கொண்டுவந்துவிட்டு, பின்னர் உங்கள் வேலைகளைப் பாருங்கள்.
நினைவிருக்கட்டும்... காலைப்பொழுது குட் மார்னிங்காக இருந்துவிட்டால், அன்றைய நாள் குட் டேயாக முடிந்துவிடும்!
இந்த கட்டுரையை புக்மார்க் செய்துவைத்து இன்று இரவு அலாரம் வைக்கும்போதே, இந்தப் பழக்கங்களுக்குத் தயாராக இருங்கள்... நாளை குட் மார்னிங்தான்!
source https://www.vikatan.com/health/healthy/the-healthiest-morning-routine-to-make-your-day-better
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக