சித்தார்த் திடீரென்று வேலையை விடப் போவதாகச் சொல்கிறான். அபி பதறுகிறாள். “என்னோட பாஸ் ஒரு பெண். அவ ரொம்ப டார்ச்சர் பண்றா. என் திறமைக்கு ஆயிரம் வேலை கிடைக்கும். நீ கவலைப்படாதே. இன்னும் ரெண்டு மாசம்
சம்பளம் வரும். அதுக்குள்ள வேற வேலை பார்த்துடுவேன்” என்கிறான்.
ஆனால், அவன் நினைத்தது போல வேலை அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. நாள்கள் செல்லச் செல்ல டென்ஷன் அதிகமாகிறது. நண்பர்களிடம் பணம் கேட்கிறான். அபியிடம் ஏன் 58 ஆயிரம் ரூபாய் செலவு செய்தாய் என்கிறான். குழந்தைகள்
டியூஷன் என்று சொன்னவுடன், 'இப்ப உள்ள சூழலுக்கு ஏற்ற மாதிரிதானே செலவு செய்ய வேண்டும்' என்று சித்தார்த் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் கேட்டுச் செய்யும் அபி, இதைக் கேட்காமலே செய்திருப்பாள்
என்பதை நம்ப முடியவில்லை. கதைக்கு ஏற்ப அபியை சில நேரம் ' ஸ்மார்ட் ' ஆகவும் சில நேரம் 'பிலோ ஆவரேஜ்' ஆகவும் காட்டுவதால், அந்த கேரக்டரின் மீது நிலையான மதிப்பு வரவில்லை.
சித்தார்த்துக்கு வேலை இல்லை என்ற விஷயத்தை ஹர்ஷிதாவிடம் சொல்கிறாள் அபி. தனக்குத் தெரிந்தவர்களிடம் வேலைக்கு ஏற்பாடு செய்யட்டுமா என்று கேட்கிறாள் ஹர்ஷிதா. அதை சித்தார்த் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்கிறாள் அபி. அப்படியென்றால் அபிக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்கிறாள்.
குழப்பத்துடன் வரும் அபி, துர்காவைச் சந்திக்கிறாள். அவர் மகன் அம்மாவை எதிர்த்துப் பேசிவிட்டுச் செல்கிறான். “நீ என்னை மாதிரி ஆயிடாதே அபி. உன் சொந்தக் காலில் நில். தைரியமா முடிவெடு. மத்தவங்களுக்காக உன் வாழ்க்கையைத் தொலைச்சுக்காதே” என்று ஆலோசனை கொடுக்கிறார் துர்கா.
வீட்டில் சித்தார்த் எல்லோரிடம் எரிந்து விழுவதைப் பார்க்கும் அபி, “பழைய ஆபிசிலேயே இருக்க முடியுமான்னு கேளுங்களேன்” என்கிறாள். சித்தார்த்துக்குப் பிடிக்கவில்லை என்று வந்த பிறகு, அதில் இருக்க முடியுமா என்று அபி எப்படிக் கேட்கிறாள் என்றே தெரியவில்லை. அதிலும் சித்தார்த்திடம்!
தயங்கியபடியே தான் வேலைக்குப் போகட்டுமா என்று கேட்கிறாள் அபி. “ஜோக் பண்றீயா? மார்க்கெட் நிலவரம் தெரியுமா? எனக்கே வேலை கிடைப்பது கஷ்டமா இருக்கு. நாலு சுவத்துக்குள்ள உட்கார்ந்துட்டு வேலைக்குப் போறேன்னு சொல்றே?” என்று அவளை அனுப்பி விடுகிறான் சித்தார்த்.
மறுநாள் காலை ஸ்வீட் செய்துகொண்டிருக்கிறாள் அபி. சித்தார்த் காரணம் கேட்க, துர்கா கேட்டார் என்கிறாள். அப்போது வாட்ச்மேன் அழுதுகொண்டே வந்து, துர்கா தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்.
இனி என்ன நடக்கும்?
இன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்
- எஸ்.சங்கீதா
source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-27
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக