கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிதணிக்கை குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், `சி.எம் செல்லுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் இணை இயக்குநர் சக்திநாதன் மற்றும் துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் மீது ஆன்லைனில் மூலமாக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புகாரில் அண்ணா பல்கலைக்கழகத்தில், ரூ.200 கோடி வரை ஊழல் நடைபெற்றிருப்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பல்வேறு புகார்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் புகார் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மின்னஞ்சல் முகவரி மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
புகார்தாரர் கொடுத்திருக்கும் முகவரி, தொலைபேசி எண் ஆகிய அனைத்தும் போலியாக இருக்கின்ற. இந்தநிலையில் துணைவேந்தர் சூரப்பா மீதுள்ள புகாரை விசாரணை செய்வதற்காக உயர்கல்வித்துறை தலைமைச் செயலர் நவம்பர் 11-ம் தேதி அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணையின் மூலம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை ஆணையம் நியமித்து விசாரணை செய்யப்படும் என கூறப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கை இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரைக் களங்கப்படுத்தும் விதமாக இருக்கிறது. துணைவேந்தரை விசாரணை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே இருக்கிறது. உயரதிகாரி மீது புகார் கொடுக்கப்பட்டால் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் உயர்கல்வித்துறை தலைமைச் செயலர் அரசாணை வெளியிட்டு, சூரப்பா மீது விசாரணை செய்வது ஏற்கத்தக்கதல்ல. எனவே, சூரப்பா மீது விசாரணை செய்ய இடைக்கால தடை விதிக்கவும், உயர்கல்வித்துறை தலைமைச் செயலர் வெளியிட்டிருக்கும் அரசாணையை ரத்துசெய்யவும் உத்தரவிட வேண்டும்’ என மனு செய்திருந்தார்.
``அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீதான புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, சூரப்பா மீதான விசாரணை ஆணையத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?” என்று கேள்வி எழுப்பியதுடன் , ``உரிய விளக்கம் தெரிவிக்காவிட்டால் அரசின் அரசாணைக்குத் தடை உத்தரவு விதிக்கப்படும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அரசுத் தரப்பில், ``அண்ணா பல்கலைக்கழக விதிகளின் அடிப்படையிலேயே அவ்வாறு குழு அமைக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ``ஒருவேளை அவர் மீது குற்றமில்லை எனில் இந்த விசாரணை அவரது பணியை பாதிக்காதா?” எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ``முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ளாமல் விசாரணைக்குழு அமைத்தது ஏன்?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசுத் தரப்பில், ``முதற்கட்ட விசாரணையை மேற்கொள்வதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை. அதன் காரணமாகவே, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்த அரசாணை மற்றும் இது குறித்து முதல்வர் பிரிவுக்கு அனுப்பப்பட்ட புகார் மற்றும் அதனடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 2- ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/madurai-high-court-order-tamil-nadu-government
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக